Tuesday, April 30, 2024
Home » “நீதியின் பக்கம் நின்று, I.N.D.I.A. கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“நீதியின் பக்கம் நின்று, I.N.D.I.A. கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Porselvi

சென்னை : “நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள மடலில்,”இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் நாள் நடைபெற இருக்கிறது.

▪️ ஜனநாயகத்தையும் – மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் – ஏப்ரல் 19.

▪️ யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனைவருக்கும் தெரிவது, ‘ஊழல் மோடி’ தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது.

▪️ உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதீய ஜனதா கட்சியும் நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உருவாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன. தேர்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார்.

▪️ தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி நாசப்படுத்தி விட்டார். கருப்புப் பணத்தை மீட்பது, ஊழலற்ற ஆட்சியைத் தருவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்குவது, வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தி சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, பாதுகாப்பை உறுதிசெய்து மகளிர் வாழ்வை மேம்படுத்துவது என்ற எல்லா தளங்களிலும் படுதோல்வியை மோடியின் அரசு சந்தித்து இருக்கிறது.

▪️ வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது. இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள்.

▪️ அண்ணல் அம்பேத்கர் இயற்றி அளித்த அரசியலமைப்புச் சட்டம், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநிலங்களின் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முடக்கும் அநியாயம், மாநிலங்களுக்கு வரி மற்றும் நிதிப் பகிர்வில் பாரபட்சம் அரங்கேறாத நாளே இல்லை. இதுவரை இந்தியத் திருநாடு சந்திக்காத அளவு மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் மோடி அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. சுதந்திர இந்தியாவில், பெட்ரோல் – டீசல் மீது மிக அதிகமான வரியை செஸ், சர்சார்ஜ் என்ற பெயரில் வசூலித்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்து தராமல், மக்களிடம் சுரண்டி மாநிலங்களையும் வஞ்சித்த மோசமான ஆட்சி, மோடியின் ஆட்சி!

▪️ வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, துணைவேந்தர்களை நியமனம் செய்வது போன்ற அன்றாட, இயல்பான நிர்வாக நடைமுறைகளுக்குக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு மாநிலங்களுக்கு நிர்பந்தம் தருகிற கொடுங்கோல் ஆட்சியாக, மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். மாநிலங்களின் வயிற்றில் அடிப்பது, மாநில உரிமைகளை நசுக்குவதைப் பெருமையான செயல் என்று கருதிக்கொள்கிற அளவு அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது.

▪️ இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக, தனது கடமையில் நரேந்திர மோடி தோற்றுவிட்டார். எனவே, அவர் அந்த நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது. நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறையே இல்லாமல் போய்விடும், சர்வாதிகார அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடாக ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சியாளர்கள் இந்தியா மாற்றிவிடுவார்கள். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி, மாநிலங்களின் எல்லைக் கோடுகளை மாற்றி, ஒற்றையாட்சி நாடாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் மக்கள் மனங்களில் இருக்கிறது. இந்தியாவைப் பாதுகாக்க மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

▪️ கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள். தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது.

▪️ இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

▪️ பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்குத் தேவையென்றால் நேரடியாக ஆதரிப்பார்கள்.

▪️ 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அன்று முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைக் குவித்த சிறப்பும் பெருமையும் திமுக கூட்டணிக்கு உண்டு.

▪️ திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் நமது அணிக்கு ஆதரவைத் தெரிவித்து உள்ளன. இந்தத் தொண்டர்களின் சலிக்காத உழைப்பைத் தமிழ்நாடு முழுவதும் நான் பார்த்தேன். அவர்களது முகங்களில் தெரிந்த நம்பிக்கை, என்னை மேலும் மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

▪️ தேர்தலுக்கு முன்னதாக நான் வெளியிட்ட அறிக்கையில், ” புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் யார் வேட்பாளர், எந்தச் சின்னம் என்பதை மறந்து விட்டு , ‘வேட்பாளர் மு.க.ஸ்டாலின்’ என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன்பிறப்புகளும் பணியாற்ற வேண்டும்” என்று உரிமையோடு நான் கேட்டுக் கொண்டேன். அந்தச் சொல்லுக்கு கட்டுப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் தேர்தல் பணியாற்றி வரும் காட்சியை நான் பார்த்தேன். ‘இவர்களைத் தொண்டர்களாகப் பெற என்ன தவம் செய்துவிட்டேன்’ என்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.

▪️ இதே ஆர்வமும் சுறுசுறுப்பும் தேர்தல் முடியும் வரை இருந்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது வரையிலும் கண்துஞ்சாது கண்காணிக்க வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது உழைப்பின் பயன்தான் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

▪️ தமிழ்நாட்டில் தனக்கு பிடித்த ஊர்ப் பெயர்களில் ஒன்று ‘எப்போதும் வென்றான்’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் எப்போதும், எல்லாத் தேர்தல்களிலும் வென்றான் என்பதை மெய்ப்பிக்கும் தேர்தல் இது.

▪️ ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக்கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கடைசி வாக்கு பதிவாகி, வெற்றிக் கனி நம் கைகளில் வந்து சேரும் வரை, கண் துஞ்சாது – பசி நோக்காது – கருமமே கண்ணாயினர் என நாம் கவனத்தோடும் உற்சாகம் குன்றாமலும் உழைத்திட வேண்டுகிறேன். கருத்துக்கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும்.

▪️ தேர்தல் விதிகளை முறையாகப் பின்பற்றி, வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொரையும் மீண்டும் தேடிச் சென்று சந்தித்து, அவர்களிடம் மோடி ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லி, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்ற மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து, நம் அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

▪️ இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்திய நாட்டின் சிறப்பான எதிர்காலமும் தமிழ்நாட்டின் முன்னேற்றமும் இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையும், அதை வழிமொழிந்தும் வலு சேர்த்தும் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் திட்டங்களாக மாற வேண்டும்.

▪️ தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கு பணிவான வேண்டுகோளை கரம் கூப்பி முன்வைக்கிறேன். இந்தியா என்றென்றும் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயுதமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக்கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும்.

▪️ தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர, எங்கும் எதிலும் தமிழ்நாடு முன்னோடி என்ற பெருமை நிலைத்திட, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற அரசு டெல்லியில் அமைந்தாக வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றமே ஒன்றே தீர்வு. தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம்.

▪️ ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

twelve − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi