இளையான்குடி : இளையான்குடி அருகே சாலைக்கிராமம் பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதனால் ஊரணிகள், பண்ணைக்குட்டைகள் மற்றும் கண்மாய்களில் நீர்நிரம்பி வருகிறது. கடந்த ஆண்டு சரியாக மழை இல்லாததால் கண்மாய்கள் மற்றும் ஊரணிகள் உட்பட நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்ட நிலையில் இருந்தது. அதனால் ஆடு, மாடுகள் உட்பட கால்நடைகள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் கொண்டு சொல்லப்பட்டது. அதனால் கால்நடை வளர்ப்போர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் முதல் இளையான்குடி மற்றும் சாலைக்கிராமம் பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால், வயல்வெளிகளில் தண்ணீர் மாறுகால் பாய்ந்து செல்கிறது. மேலும் வாய்க்கால் வழியாக மேல்வரத்து தண்ணீர் அதிகளவில் வருவதால், அப்பகுதியில் உள்ள ஊரணிகள் மற்றும் பண்ணைக்குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது.