அஜ்மீர்: புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் 60,000 தொழிலாளர்களின் உழைப்பை அவமதித்து விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அமைந்து 30ம் தேதியுடன் 9 ஆண்டு நிறைவடைந்து விட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பாஜ சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் 60,000 தொழிலாளர்களின் உழைப்பையும், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உணர்வுகளையும் அவமதித்து விட்டன.
2014ம் ஆண்டுக்கு முன் ஊழலையும், வறுமையையும் ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அதனை நிறைவேற்றவில்லை. ஏழைகளை தவறாக வழிநடத்துவதை காங்கிரஸ் கொள்கையாக கொண்டுள்ளது. அது ஏழைகளுக்கு காங்கிரஸ் செய்த மிகப்பெரிய துரோகம். காங்கிரஸ் கட்சி ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சியை நடத்தியது. ஆனால் பாஜ தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சி ஏழை மக்களின் நலனுக்கான ஆட்சி. நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தன்னை அர்ப்பணித்து கொண்டு செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.