துரைப்பாக்கம், ஏப்.18: திருவான்மியூர், பெரியார் நகரை சேர்ந்தவர் ஹரி விக்னேஷ் (26). இவரது மனைவி பெயர் பாக்கியலட்சுமி. இவரது பெரியம்மா லதா. இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது பக்கத்து வீட்டில் சரண்ராஜ் என்பவர் குடும்பத்துடன் வருகிறார். இரு குடும்பத்திற்கும் அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் வருவது வழக்கம். கடந்த 14ம் தேதி குழாயில் தண்ணீர் பிடித்தபோது இரு குடும்பத்தாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் பாக்கியலட்சுமி புகார் அளித்தார். அவரது புகாரைப் பெற்ற போலீசார் முறையாக சரண்ராஜிடம் விசாரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் சரண்ராஜ் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து, ஹரி விக்னேஷின் வீட்டிற்குள் புகுந்து, ஹரி விக்னேஷ் மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகிய இருவரையும் கத்தியால் குத்தியுள்ளனர். இருவரும் படுகாயமடைந்தனர். இதனைத் தடுக்க முயன்ற லதாவிற்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், 4 பேரும் தப்பியோடி விட்டனர். திருவான்மியூர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்ராஜ் (20), அவரது சித்தி முருகம்மாள் (31) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.