Wednesday, December 11, 2024
Home » தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

by Karthik Yash

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஆலை மூடி சீல் வைத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018ம் ஆண்டு பொதுமக்கள் நடத்திய போராட்டம் நூறாவது நாளை எட்டியதை தொடர்ந்து, மே.22ம் தேதியன்று பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போதைய அதிமுக ஆட்சியில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்த அரசாணையும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம் முதலாவதாக தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாகத்துக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை நிராகரித்து, அவர்களது ரிட் மனுவை தள்ளுபடி செய்ததோடு, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,‘‘ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்ததுடன், தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என கடந்த 2020ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நான்காவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், கோபால் சங்கர் நாராயணன், குமணன் மற்றும் பூர்ணிமா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்கள் வாதத்தில், காப்பர் கழிவுகள், ஜிப்சம் ஆகியவற்றை ஆலை நிர்வாகத்தின் தரப்பில் நீக்கம் செய்யாததே ஆலையை மூடியதற்கு முக்கிய காரணம். குறிப்பாக நிலத்தடி நீர் மாசு அடைந்தது மட்டுமில்லாமல், அது ஆரஞ்சு நிறம் போன்று மாறியுள்ளது. இதனை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலை அமைவதற்கு முன்னதாக அந்த பகுதியில் 1700க்கும் மேற்பட்ட பசுமையான மரங்கள் இருந்தது. தற்போது ஆலையால் ஏற்பட்ட பாதிப்பால் அப்பகுதி கான்கிரீட் காடுகளாக மாறியுள்ளன. இதனை தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட குழு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை உறுதி செய்துள்ளது என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்பை வரைபடத்துடன் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் காண்பித்து நீதிபதிகள் முன்னிலையில் விளக்கமளித்தனர். அதில், ‘‘கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சுழல் மாசை ஏற்படுத்தி வருகிறது. அதனால் தான் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மாசு மட்டுமில்லாமல் சல்பர் டை ஆக்சைடு கசிவு ஏற்பட்டதால் மக்கள் அதிகளவில் பாதிப்படைந்தனர். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளில் மாசு ஏற்படுத்துபவை மற்றும் மாசு ஏற்படுத்தாதவை என்று இரு பிரிவுகள் உள்ளன. அதனால் அனைத்து கழிவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். மேலும் தாமிர கழிவுகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளது ஆய்வில் தெளிவாக தெரிய வந்துள்ளது. ஆலையால் கொட்டப்பட்ட கழிவுகள்தான் தற்போது தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட காரணமாக அமைந்தது. மேலும் பயன்பாட்டு நீரில் இந்தக் கழிவுகள் கலந்துள்ளது.
எனவே வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நேற்று வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஒரு மாநிலத்தின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது அந்த மாநில அரசின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். அதில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது. எனவே இந்த விவகாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழ்நாடு அரசின் முடிவு மற்றும் அரசாணை செல்லும். தற்போது இருக்கும் சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது என்பது மட்டுமில்லாமல், விரும்பவும் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.

குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலையால் மேற்கொள்ளப்பட்ட விதிமுறை மீறல்களின் அடிப்படையில் இந்த முடிவை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளது. இதற்கான விரிவான ஆவணங்களையும் தரவுகளையும் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்துள்ளது. அதேபோன்று கழிவுகளை கையாண்டதில் கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு பலமுறை வாய்ப்பு வழங்கியும் தங்களது தவறுகளை ஆலை நிர்வாகம் சரிசெய்து கொள்ளவே இல்லை. இதில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள மக்களின் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியமானது. அதனை கண்டிப்பாக புறந்தள்ள முடியாது. குறிப்பாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காப்பர் கழிவுகளை கையாண்ட முறைகள் மிகவும் கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. அதனை நாங்கள் வரைபடத்தின் மூலம் தெளிவாக பார்த்து தெரிந்து கொண்டோம் என்று தெரிவித்த நீதிபதிகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

* வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு அளித்துள்ளது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ்தள பதிவு: தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது, எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்.

* உயர் நீதிமன்றத்துக்கு பாராட்டு
இந்த விகாரத்தில் நேற்று தீர்ப்பு வழங்கிய போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதில், ‘‘ தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கையாண்டு விசாரித்ததில் எந்தவிதமான வரம்பு மீறலும் இருந்ததாக நாங்கள் கருதவில்லை. எனவே தான் நாங்கள் அந்த உத்தரவில் எந்த குறுக்கீடும் செய்யவில்லை. குறிப்பாக ஆலை தொடர்பான வழக்கு விவகாரத்தை மிக சிறப்பாக கையாண்ட சென்னை உயர்நீதிமன்றத்துக்கு எங்களது பாராட்டை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.

* கான்கிரீட் காடு
நேற்று நடந்த விசாரணையின் போது தமிழ்நாடு வழக்கறிஞர்கள் வைத்த முக்கிய வாதத்தில்,”ஸ்டெர்லைட் ஆலை அமையும் போது அந்த பகுதியில் சுமார் 1700க்கும் மேலான பசுமையான மரங்கள் இருந்தது. ஆனால் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மாசால் தற்போது ஆலையின் உள்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் கான்கிரீட் காடுகளாக காட்சியளிக்கிறது. பழைய நிலை அங்கு மீண்டும் திரும்ப மேலும் பல ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்தனர்.

* ஸ்டெர்லைட் வழக்கு கடந்து வந்த பாதை
1992 : குஜராத், கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க இடம் தரப்படவில்லை. மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்தபோது, பணிகள் நிறுத்தப்பட்டன.
ஆகஸ்ட் 1, 1994 : ஜெயலலிதா அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அனுமதித்தது.
ஆகஸ்ட் 20, 1997: ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய கிளை நிலைய ஊழியர்கள்,ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வரும் புகையால் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது என்று புகார்.
நவம்பர் 23, 1998: ஐகோர்ட் உத்தரவுப்படி ஆலை சிறிது காலம் மூடப்பட்டது.
மார்ச் 23, 2013: ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய வாயு கசிவினால் தூத்துக்குடி நகர மக்களுக்கு இருமல், கண் எரிச்சல் போன்ற பல உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டன.
மார்ச் 29,2013: தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும் உத்தரவு.
மே 31, 2013: தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பு, ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு. மனுவை விசாரணை செய்து ஆலையை மூடும் உத்தரவை ரத்து செய்து, தொழிற்சாலையை இயங்க உத்தரவிட்டது.
பிப்ரவரி 12,2018: ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அதன் அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
ஏப்ரல் 9, 2018: தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு.
மே 22, 2018: குமரெட்டியாபுரம் போராட்டம் தொடங்கி 100:வது நாளில் தூத்துக்குடி நகரமே போர்க்களமானது. போலீசார் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் சாவு. ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.
மே 23, 2018: தூத்துக்குடி பொதுமருத்துவமனை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம். ஆஸ்பத்திரி அருகேபோலீஸ் வேன் தீவைப்பு. தூத்துக்குடியில் மீண்டும் போலீசார் துப்பாக்கிசூடு. மேலும் ஒருவர் சாவு. இதன் மூலம் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்வு. ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிப்பு.
மே 28, 2018 : ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் மாலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
ஜூன் 22,2018: ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்வைக்கப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு.
டிசம்பர் 15,2018: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.
ஜனவரி 2,2019: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு.
பிப்ரவரி 18,2019: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.
ஜூலை 27, 2019 சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு, வழக்கு விசாரணையைத் தொடங்கியது. தொடர்ந்து 39 நாள்கள் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.
ஜனவரி 8, 2020 வழக்கு விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடப்படாமல் இந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 18, 2020 ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்’ எனவும் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
பிப்ரவரி 29. 2024 வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்தது.

* அதிமுக ஆட்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் நீர், நிலம் காற்று என சுற்றுச்சூழல் சீர்கெட்டு, கேன்சர் உள்ளிட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக்கூறிய, சுற்று வட்டார கிராம மக்கள் `ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்’ எனக்கோரிக்கை வைத்து ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அதன் அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தை தொடங்கினர். 09.4.2018- தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான உரிமத்தை புதுப்பிக்க மறுத்தது. மே 22ம் தேதி குமரெட்டியாபுரம் போராட்டம் தொடங்கி 100-வது நாளில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சுற்றுவட்டார கிராம மக்கள் முடிவு செய்து பேரணியாக வந்தனர்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மக்களை சமாதானப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

அவர்களை தொலைதூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தில் மீது ஏறி மறைந்திருந்து போலீசார் துப்பாக்கியால் குறிபார்த்து சுட்டனர். முதல் துப்பாக்கிச் சூடு நடந்த பின்புதான் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த சில வாகனங்களுக்கும், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு வாசிகளின் சில வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஊடகங்களை பார்த்துதான் துப்பாக்கிச் சூடு பற்றி தெரிந்து கொண்டேன் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீர் மனிதனின் உரிமை. தமிழர்கள் தங்களுக்கான நல்ல நீரைப் பெற தூய்மையான காற்றைப் பெற 13 பேரை காவல்துறையின் தோட்டாக்களுக்கு இழந்தார்கள் என்ற கருப்பு சரித்திரம் தமிழ்நாட்டின் வரலாற்றில் நிரந்தரமாக என்றும் நிலைத்திருக்கும்.

* ஸ்டெர்லைட் ஆலை ஒரு பார்வை
உரிமையாளர் அனில் அகர்வால்
தலைமையிடம் லண்டன்
முக்கிய உற்பத்தி தாமிரம்
கழிவு உற்பத்தி தங்கம், கந்தக அமிலம், பாஸ்போரிக் அமிலம்
முதலில் தேர்வு செய்த இடம் குஜராத்
அனுமதி மறுத்த மாநிலங்கள் குஜராத், கோவா,
கர்நாடகா, கேரளா
அனுமதி தந்து பிரச்னை சந்தித்த இடம் மகாராஷ்டிரா (ரத்னகிரி)
அப்போதைய மகராஷ்டிர முதல்வர் சரத்பவார்
அனுமதி தந்த மாநிலம் தமிழ்நாடு
அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா
முதல் போராட்டம் 1996
ஆலைக்கு எதிரான முதல் வழக்கு 1997 நவம்பர் 7
ஆலையை மூட முதல் தீர்ப்பு 2010 செப்டம்பர் 28

* திமுக அரசு நடத்திய சட்ட போராட்டத்துக்கு வெற்றி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நியமித்த வக்கீல்களின் திறமையான வாதங்கள் தான். இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், கோபால் சங்கர் நாராயணன், குமணன் மற்றும் பூர்னிமா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை பல்வேறு ஆதாரங்களை தாக்கல் செய்து நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். நீர், நிலம், காற்று என்று எல்லாமே அந்த ஆலையால் பாதிக்கப்பட்டதை அவர்கள் நிரூபித்தனர். தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள், ஆதாரங்கள், வரைபடங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், அதை பற்றி தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். திமுக அரசு நடத்திய இந்த சட்ட போராட்டமே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதற்கு வழி வகுத்துள்ளது.

You may also like

Leave a Comment

16 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi