Monday, June 17, 2024
Home » 1000 சதுர அடியில் ஆடு வளர்ப்பு

1000 சதுர அடியில் ஆடு வளர்ப்பு

by Porselvi

இன்றைய காலகட்டத்தில் கால்நடை வளர்ப்புதான் அதிக வருமானம் ஈட்டும் தொழில். அந்தவகையில் 1000 சதுர அடி பட்டியில் 60 ஆடுகளை வைத்து மாதம் ரூ.2 லட்சம் வருமானம் ஈட்டி வரும் தூத்துக்குடி மாவட்டம், கொடியங்குளம் பகுதியை சேர்ந்த செல்வின் லஷ்மண் சவான் அவர்களை சந்தித்து அவருடைய ஆடுவளர்ப்பு பயணம் குறித்து பேசத்தொடங்கினோம்.“எனக்கு சொந்த ஊரு புளியம்பட்டி ரோட்டில் உள்ள கொடியங்குளம்தான். மகாராஷ்டிராவில் எம்.காம், எம்பிஏ படித்தேன். அங்கேயே மின்துறையில் சிறிது காலம் வேலை செய்தேன். கொரோனா மற்றவர்களைப் போல எனக்கும் பாதிப்பைத் தந்தது. குடும்பத்திற்காக பல சிரமங்களைக் கடந்து வந்தேன். ஒரு கட்டத்தில் இதுமட்டும்தான் வேலையா? என்று மனதில் பெரிய கேள்வி எழுந்தது. திடமாக முடிவு செய்து வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊருக்கு திரும்பினேன். ஆரம்பத்தில் வேலையை விட்டதை குடும்பத்தில் யாருக்கும் சொல்லவில்லை. வேலையை விட்டு வந்த எனக்கு என்ன செய்வது? என்பது குழப்பமாக இருந்தது. எனக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யலாம் என்று முடிவு செய்தேன். நிலத்தில் உளுந்து, மக்காச்சோளம், கொண்டைக்கடலையை பயிரிட்டேன். விவசாயத்தில் முன் அனுபவம் இல்லையென்றாலும் மற்றவர்களிடத்தில் கேட்டு விவசாயம் செய்தேன். இதில் எனக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. குடும்பம் நடத்துவதே சிரமமாக இருந்தது.

பார்ப்பவர்கள் எல்லாம் அருமையான வருமானம் கிடைச்சுக்கிட்டு இருந்துச்சு, இப்படி விட்டுவிட்டு வந்துட்டியேன்னு கேள்விகள் எழுப்புவார்கள். அப்போதெல்லாம், நாம் முன்பைக் காட்டிலும் கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் ஏற்பட்டது. இதற்கிடையில்தான் நண்பர் ஒருவரின் மூலம் வர்த்தகரெட்டிபட்டியில் இருந்து 5 ஆடுகளை ரூ.16 ஆயிரத்திற்கு வாங்கி வந்து வீட்டில் செல்ல பிராணிபோல் வளர்த்து வந்தேன். அப்போது விவசாயத்தில் விட்டதை கால்நடையில் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஆடு வளர்க்கலாம்னு இருக்கேன் என்று மனைவி மற்றும் அம்மாவிடமும் தெரிவித்தேன். இருவரும் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தனர்.

பல இடங்களில் விசாரித்து ஆடு வளர்ப்பில் இறங்கினேன். எங்களுக்கு சொந்தமான 1.25 ஏக்கர் நிலத்தை சமன்படுத்தி, இயற்கை உரங்களை மட்டும் இட்டு ஆடுகளுக்குத் தேவையான தீவனங்களை வளர்த்து, ஆடு வளர்ப்பில் அதிக ஈடுபாட்டுடன் இறங்கினேன். முதலில் 5 ஆடுகள் மட்டும்தான் வளர்க்கத் தொடங்கினேன். ஆடுகளுக்கு அதிக சத்துக்களையும், ஆரோக்கியமான உடல் எடையையும் அதிகரிக்கும் சூப்பர் நேப்பியர், மக்காச்சோளம், அகத்தி, வேலி மசால் வாங்கி வந்து சாகுபடி செய்தேன். இதற்கான உரத்தையும் இயற்கை முறையிலேயே தயார் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி ஆடுகளின் புழுக்கையை சேகரித்து அதை வெயிலில் காயவைத்து தூளாக்கி வயலில் தெளித்தேன். இதனால் மண்ணின் தரம் உயர்ந்து, பயிர் செழிப்பாக வளரத்தொடங்கியது.

பொதுவாகவே ஆடுகளுக்கு கலப்பு தீவனத்தைக் கொடுத்தால் செழிப்பாக வளரும். அந்த வகையில் எனது பண்ணையில் உள்ள ஆடுகளுக்கு கோஎஃபெஸ் 31, பயிர் வகைகளில் வேலிமசால், முயல்மசால், குதிரை மசால் கொடுக்கிறோம். அடர் தீவனத்தில் உடைத்த சோளம் மட்டும்தான். இவை அனைத்தையுமே இயற்கை முறையிலேயே விளைவித்து ஆடுகளுக்கு கொடுத்து வருகிறோம். என்னதான் ஆடுகளுக்கு சத்தான உணவுகள் கொடுத்தாலும், அவற்றை மேய்ச்சலில் விடுவது உடல் நலத்திற்கு நல்லது. நன்றாக வளர்ந்த ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு 5 முதல் 6 கிலோ வரை தீவனம் கொடுக்க வேண்டும். ஆடுகளை கோடை காலங்களில் காலை 4 மணிக்கும், மழைக்காலத்தில் காலை 8 மணிக்கும் பட்டியில் இருந்து மேய்ச்சலுக்கு திறந்து விடுவோம். மாலை 6 மணிக்கு பட்டியில் அடைத்து விடுவோம்.

பொதுவாக ஆட்டுப்பண்ணைக்கு சென்றால் துர்நாற்றம் வீசும். இதன்மூலம் கால்நடைகளுக்கு அதிக ஒவ்வாமை ஏற்படும். இதனை சரிசெய்ய காலை, மாலையில் பண்ணையை சுத்தம் செய்து விடுவேன். இதை நாங்கள் கடைபிடிப்பதன் மூலம் ஆடுகளை நோய்களில் இருந்து பாதுகாக்கிறோம். வருடம் ஒருமுறை ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசியை (பி.ஆர்.பி) அரசு கால்நடை மருத்துவர் மூலம் போடுகிறோம். இந்த தடுப்பூசியை மழைக்காலம் தொடங்குவதற்கு முன் போட வேண்டும். மேலும் 3 மாதத்திற்கு குடற்புழு நீக்க மருந்தும் ஆடுகளுக்கு தருகிறோம். இந்த மருந்துகள் கொடுத்த 3 மணி நேரம் வரை ஆடுகள் எந்தவொரு தீவனத்தையும் சாப்பிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். பண்ணையில் முழுக்க முழுக்க வேலையாட்கள் என்று யாரும் கிடையாது. எனது அம்மா சுதா, மனைவி சவிதா என்று குடும்பமாக சேர்ந்து அனைத்து வேலை களையும் பார்த்துக் கொள்கிறோம்.

ஆடுகளுக்கு 50×20 அடி அளவில் பட்டி அமைத்திருக்கிறோம். பராமரிப்பு செலவு குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆஸ்பெட்டாஸ் சீட் போட்டிருக்கிறோம். தற்போது ஓலைக்கூரை போடுவதற்கான வேலைகளில் இறங்கி உள்ளேன். ஆடுகளை பொருத்தவரையில் பேன் தொல்லைகள் அதிகம் இருக்கும். இதனை சரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளையும் கொடுத்து பார்த்தேன். எதுவும் சரியான தீர்வாக அமையவில்லை. அப்போது வீட்டின் அருகில் உள்ள பாட்டி ஒருவரிடம் இதைப்பற்றி கூறினேன். அவர் கோழி வாங்கி வளர்த்துப் பாருங்கள், அனைத்து பேன்களும் எப்படி ஓடுகிறது பாருங்கள்! எனக் கூறினார். அவரின் பேச்சைக் கேட்டு அருகில் இருந்த ஒருவரிடம் 10 கோழிகளை வாங்கி வளர்க்கத் தொடங்கினேன். அவை ஆடுகளின் மேல் உள்ள ஒட்டுண்ணிகளை கொத்தி சாப்பிடத்தொடங்கியது. இதனால் கணிசமாக பேன்களின் தொல்லை குறைந்தது. ஆடுகளும் ஒட்டுண்ணிகள் பிரச்னை இல்லாமல் நன்றாக வளர்ந்தது.

மழைக்காலங்களில் ஆடுகளுக்கு உணவு வழங்குவது, தண்ணீர் கொடுப்பது என்று அனைத்திலும் அதிக கவனம் தேவை. நாங்கள் மழைக்காலங்களில் ஆடுகளுக்கு சுடுதண்ணீரை மட்டுமே கொடுக்கிறோம். இதன்மூலம் ஆடுகளுக்கு சளி பிடிக்காது. அதேபோல் 2 கிலோ கேழ் வரகு மாவை களி போல் செய்து அதில் பழைய சோற்று தண்ணீரைக் கலந்து வைப்போம். இதனை ஒரு நாளைக்கு இரண்டுமுறை கொடுக்கிறோம். சினையாக உள்ள ஆடுகளுக்கு 150 கிராம் அடர்தீவனம் கூடுதலாக கொடுக்கிறோம். காலை 11.30 மணியிலிருந்து 12 மணிக்குள் தீவனத்தைக் கொடுத்து விடுவோம். 3 மணிக்கு ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்வதற்குள் ஜீரணம் ஆகிவிடும்.

என்னுடைய பட்டியில் 60 ஆடுகள் எப்போதும் இருக்கும் அளவிற்கு பார்த்துக்கொள்வோம். அருகில் உள்ள கிராமங்களில் நடக்கும் திருவிழா, விருந்துக்காக என்னிடம் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். உயிர் ஆடு கிலோ சராசரியாக ரூ.550 லிருந்து ரூ.700 வரை விற்பனை செய்கிறேன். இயற்கை முறையில் வளர்ந்த ஆடுகள் என்பதால் கேரளா, கர்நாடகா, நாமக்கல், புதுக்கோட்டை, பொன்னமராவதி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் வந்து ஆடுகளை வாங்கிச் செல்கிறார்கள். மாதத்திற்கு குறைந்தது 30 ஆடுகள் விற்பனை ஆகும். ஒரு ஆடு குறைந்தது

ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனை ஆகும். இதன்மூலம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். இதில் மருந்து, பராமரிப்பு என அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் செலவானாலும் ரூ.1.50 லட்சம் லாபமாக கிடைக்கும். இப்போது என்னிடம் 60 ஆடுகள் உள்ளன. இதில் 80 சதவீதம் ஆண் ஆடுகள், 20 சதவீதம் பெண் ஆடுகள் இருப்பது போல் பார்த்துக்கொள்வேன். இதனால் சரியான முறையில் குட்டிகள் கிடைக்கிறது. இதை வளர்த்து அடுத்தடுத்து விற்பனைக்கு வைத்துக் கொள்கிறேன். இதோடு காங்கேயம் பசு மாடு ஒன்று, ஆண் கன்று குட்டி ஒன்று வளர்த்து வருகிறேன்.

மேலும் சில கோழிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் எண்ணம் இருக்கிறது. மின்துறையில் பணியாற்றும்போது சம்பாதித்ததை விட தற்போது 5 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறேன். இப்போதுள்ள ஆடுகளை விட இன்னும் கூடுதலாக ஆடுகள் வாங்கி வளர்க்க இருக்கிறேன்’’ என்கிறார் செல்வின் லஷ்மண் சவான்.

தொடர்புக்கு:
செல்வின் லஷ்மண் சவான்
94891 13222

You may also like

Leave a Comment

two × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi