Wednesday, February 28, 2024
Home » ஆண்டுக்கு ரூ.7.80 லட்சம்…அள்ளித்தரும் ஆடு வளர்ப்பு!

ஆண்டுக்கு ரூ.7.80 லட்சம்…அள்ளித்தரும் ஆடு வளர்ப்பு!

by Porselvi

விவசாயமும், கால்நடை வளர்ப்பும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. அதிலும் தற்போதைய காலக்கட்டத்தில் நிச்சய வருமானம் தரும் தொழிலாக கால்நடை வளர்ப்பு மாறி இருக்கிறது. இதனால் பல விவசாயிகள் அதிக கவனம் எடுத்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும் அதிக லாபம் வேண்டும் என விரும்புவோர் ஆடு வளர்ப்பையே விரும்பி தேர்ந்தெடுக்கிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கார்கோயில் கிராமத்தைச் சேர்ந்த உமாதேவி – மோகனக்கண்ணன் தம்பதியினர் 25 ஆடுகளைக் கொண்டு பண்ணை அமைக்கத் தொடங்கி தற்போது 400 ஆடுகள் வரை பெருக்கி ஆடு வளர்ப்பில் அசத்தி வருகிறார்கள். உமாதேவி – மோகனக்கண்ணனைச் சந்தித்தோம்…

“ஆடு வளர்ப்பில் 16 வருடங்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறோம். இதற்கு முன்பு எனது கணவர் மோகனக்கண்ணன் மினி வேன் டிரைவராக இருந்து வந்தார். அதில் நல்ல வருமானம் கிடைத்தது. எங்களுக்கு ரொம்ப காலமாகவே ஆடு வளர்ப்பில் ஆர்வம் இருந்தது. இதனால் இருவரும் சேர்ந்து முடிவு செய்து கேரளாவில் இருந்து 25 தலச்சேரி ஆடுகளை வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினோம். இந்த ஆடுகளுக்காக சிறிய பட்டி அமைத்தோம். வாங்கி வந்த இரண்டு வருடங்கள் வரை ஆடுகளை இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எங்களுக்கு இருந்தது. அதனால் ஆடுகளை விற்பனை செய்யாமல் நாங்களே பராமரித்து வந்தோம். அதேநேரம் ஒரே ரக ஆடுகளை வைத்து வளர்க்காமல், மற்ற ரக ஆடுகளையும் வாங்கத் தொடங்கினோம். அதனால் வெளி மாநிலங்களில் இருந்து ஒஸ்மானபாடி மற்றும் போயர் ரக ஆடுகளை வாங்கி வந்தோம்.

பொதுவாக ஆட்டுப் பண்ணைக்கு சென்றால் கடும் துர்நாற்றம் வீசும். இதற்கு சரியான பராமரிப்பு இல்லாததே காரணம். இதன்மூலம் கால்நடைகளுக்கு அதிக ஒவ்வாமை ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு பரண்மேல் ஆடுகளை வளர்க்கலாம் என முடிவு செய்தோம். அதற்காக 60 அடி நீளம் 55 அடி அகலம் கொண்ட பரண் அமைத்தோம். இதுபோல் மூன்று பரண்கள் அமைத்திருக்கிறோம். பரண்களை நிலத்தில் இருந்து 6 அடி மேலே உள்ளது போல அமைத்து இருக்கிறோம். ஆடுகளின் கழிவுகள் பரண் மேலே தேங்காமல் கீழே கொட்டி விடும். நானும், எனது கணவரும் காலை, மாலை என இரு வேளையும் பண்ணையை சுத்தம் செய்வோம்.

இந்த முறையை நாங்கள் கடைபிடிப்பதன் மூலம் ஆடுகளை நோய்களில் இருந்து பாதுகாக்க முடிகிறது. ஆண்டுக்கு ஒருமுறை ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசியை (பி.ஆர்.பி) அரசு கால்நடை மருத்துவர் மூலம் போடுகிறோம். இந்த தடுப்பூசியை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக போட வேண்டும். இதுபோக மற்ற நோய்கள் எதுவும் தாக்காமல் இருக்க இடி-டிடி என்ற தடுப்பூசியும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி போடுகிறோம். மேலும், 3 மாதத்திற்கு குடற்புழு நீக்க மருந்தும் கொடுக்கிறோம். இந்த மருந்துகள் கொடுத்த 3 மணி நேரம் வரை ஆடுகள் எந்தவொரு தீவனத்தையும் சாப்பிடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அதேபோல் எங்களது நிலத்தில் ஒருமுறை மக்காச்சோளம் சாகுபடி செய்தால், அடுத்த முறை நெல் சாகுபடி செய்கிறோம். பண்ணையில் முழுக்க முழுக்க வேலையாட்கள் என்று யாரும் கிடையாது” என்கிறார் உமாதேவி. இவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசத்துவங்கினார் மோகனக்கண்ணன்.

“ஆடுகளுக்குத் தேவையான தீவனப்பயிர்களை எங்களுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு இருக்கிறோம். பசுந்தீவனத்தில் வேலிமசால், முயல்மசால், குதிரை மசால் கொடுக்கிறோம். இவை அனைத்தையுமே இயற்கை முறையிலேயே விளைவித்து ஆடுகளுக்கு கொடுத்து வருகிறோம். காலையில் 9 மணிக்கு பச்சைப்புல், மாலை 5 மணிக்கு சோயா, கடலைக்கொடி தீவனமாக கொடுக்கிறோம். பசும்புல், சோளம், தீவன மக்காச்சோளம் போன்றவற்றை சரியான இடைவெளியில் அறுவடை செய்யும் வகையில் சாகுபடி செய்ய வேண்டும். சில சமயங்களில் காலநிலை மாற்றம் காரணமாக அதிக மழை பெய்து அனைத்தும் வளர்ந்துவிடும். இதனால் ஒரே சமயத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். அப்போது கால்நடைகளுக்கு, தேவைக்கும் மேல் தீவனம் சேர்ந்திருக்கும். இந்த சமயங்களில் தீவனப்பயிர்களை அறுவடை செய்து, பதப்படுத்தி, ஆடுகளுக்குக் கொடுக்கிறோம். இதுபோக அடர்தீவனமாக நவதானியத்தை அரைத்துத் தருகிறோம். வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் கொண்ட ஆடுகளுக்கு 5 கிராம் ஓமம், 10 கிராம் அப்பள சோடா உப்பை கலந்து மருந்தாகக் கொடுக்கிறோம்..

முதலில் வாங்கிய 25 ஆடுகள் மூலம் மட்டுமே 200 ஆடுகளை உற்பத்தி செய்தோம். ஒரு ஆடு பிறந்து 8 லிருந்து 9வது மாதத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடும். ஒஸ்மானபாடி ஆடுகளை மட்டும் அதனுடைய இனத்தில் இனப்பெருக்கத்திற்கு விடுவோம். தலச்சேரி, போயர் இனங்கள் கலப்பினமாக உருவாகும். இனப்பெருக்கம் செய்த 150வது நாளில் ஆடுகள் குட்டி போடும். நாங்கள் உரிய தீவனம் கொடுத்து பராமரிப்பதால் எங்களுக்கு 3.5 கிலோ வரை எடை கொண்ட குட்டிகள் கிடைக்கின்றன. மூன்று ரக ஆடுகளையும் சேர்த்து எங்களிடம் மொத்தம் 400 ஆடுகள் உள்ளன. அதில் 250 பெண் ஆடுகளும், 30 ஆண் ஆடுகளும், 120 குட்டி ஆடுகளும் அடங்கும். அருகில் இருப்பவர்கள் நேரடியாக வந்தே ஆடுகளை வாங்கி செல்கின்றனர். 4 பல்லுடைய ஆண் போயர் ஆடுகளைப் பொருத்தவரையில் 80 லிருந்து 90 கிலோ வரை எடை கொண்டதாக வளரும். பெண் ஆடுகள் 50 கிலோ வரை இருக்கும். ஒஸ்மானபாடி இன ஆண் ஆடுகள் 70 கிலோ வரை வளரும். பெண் ஆடுகள் 50 கிலோ வரை வளரும். தலச்சேரி ஆண் ஆடுகள் 50 கிலோ வரையும், பெண் ஆடுகள் 40 கிலோ வரையும் இருக்கும். ஆடுகளை கிலோ கணக்கில் விற்பனை செய்கிறேன். அருகில் இருப்பவர்கள் ஒரு கிலோ ரூ.450 முதல் ரூ.500 என்ற கணக்கில் வாங்கிச் செல்வார்கள்.

ஆண்டுக்கு 100 முதல் 150 ஆடுகள் வரை விற்பனை ஆகும். ஒவ்வொரு ஆடுகளும் சராசரியாக 20 முதல் 25 கிலோ எடை கொண்டதாக இருக்கும். குறைந்தபட்சம் 100 ஆடுகள் விற்றாலும் ரூ.9 லட்சம் வருமானமாக கிடைக்கும். இதில் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் செலவாகும். அதுபோக ரூ.6 லட்சம் லாபமாக கிடைக்கும். பரண் மீது ஆடுகள் வளர்ப்பதால் ஆடுகளின் கழிவுகள் கீழே விழுகிறது. அதனை எடுத்து சேகரித்து வைத்து 1 யூனிட் 3 ஆயிரம் என்ற கணக்கில் அருகில் உள்ள பாக்கு, தென்னந்தோப்பு விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறோம். ஆண்டுக்கு 66 யூனிட் கழிவுகள் கிடைக்கிறது. இதில் இருந்து ஆண்டுக்கு எனக்கு சராசரியாக ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது’’ என ஆச்சரிய தகவலோடு கூறி முடித்தார்.
தொடர்புக்கு:
மோகன குமார் 94438 65262.

You may also like

Leave a Comment

16 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi