Saturday, May 18, 2024
Home » ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று துவக்கம் ஜோ பைடனுடன் மோடி சந்திப்பு: மேலும் 14 நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்

ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று துவக்கம் ஜோ பைடனுடன் மோடி சந்திப்பு: மேலும் 14 நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்

by Karthik Yash

புதுடெல்லி: ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள உலக தலைவர்கள் டெல்லியில் குவிந்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இரவு பிரதமர் மோடியின் இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதே போல் 14 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவி சுழற்சி முறையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்தியா வசம் வந்தது. இதை தொடர்ந்து கடந்த ஒருவருடமாக இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் ஜி20 மாநாடு தொடர்பான பல்வேறு கருத்தரங்குகள் நடந்தன.

இதில் ஜி 20 குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் இந்தியாவின் அழைப்பை ஏற்று வந்த நாடுகளில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர். இதுவரை அனைத்து மாநாடுகளில் தவறாது பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்யா அதிபர் புடின் ஆகியோர் இந்தியாவில் நடக்கும் மாநாட்டை புறக்கணித்து விட்டனர். உக்ரைன் போர் குற்றம் காரணமாக ரஷ்ய அதிபர் புடின் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இரவு இந்தியா வந்தார். அதிபர் பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக அவர் இந்தியா வந்துள்ளார். அவரது மனைவி ஜில் பைடனும் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக அவரது பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. டெல்லி விமான நிலையம் வந்த ஜோ பைடனை ஒன்றிய இணை அமைச்சர் விகே சிங் தலைமையிலான இந்திய குழுவினர் வரவேற்றனர். விமான நிலையத்தில் ஜோ பைடனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி வந்தடைந்த ஜோ பைடன், பிரதமர் மோடியை சந்திக்க அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு சென்றார். ஜோ பைடனை வாசலுக்கே வந்து கட்டியணைத்து பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

நேற்று முதன்முதலாக மொரிஷியஸ் நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜக்நாத்துடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா அவர் சந்தித்தார். இதே போல் பிரதமர் மோடி மொத்தம் 15 நாட்டு தலைவர்களை சந்திக்க உள்ளார். இன்று ஜி 20 நிகழ்வுகளில் பங்கேற்பதோடு, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலியின் தலைவர்களுடன் மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்துகிறார். நாளை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் மதிய உணவு சந்திப்பை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கனடா, கொமோராஸ், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட், தென்கொரியா, பிரேசில், நைஜீரியா நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்ட இந்தியா வம்சாவளி ரிஷி சுனக் அவரது மனைவி அக்சதா மூர்த்தியுடன் நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சர் அஷ்வினி சவ்பே வரவேற்றார். அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸை ஒன்றிய அமைச்சர் பக்கன் சிங் குலாஸ்தே வரவேற்றார். ரஷ்ய அதிபர் புடின் சார்பில் வந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதே போல் அனைத்து நாடுகளில் தலைவர்களுக்கும் டெல்லி விமான நிலையத்தில் இந்தியா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இதுபற்றி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில்,’ எங்கள் விருந்தினர்கள் இந்திய விருந்தோம்பலின் அரவணைப்பை அனுபவிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த பல தலைவர்கள் மற்றும் தூதுக்குழு தலைவர்களுடன் நான் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவேன்’ என்று தெரிவித்து இருந்தார். டெல்லியில் திட்டமிட்டபடி இன்றும், நாளையும் ஜி20 உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரத மண்டபத்தில் நடக்கிறது. இன்று இரவு உலகத்தலைவர்கள் அனைவருக்கும் பாரத மண்டபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இரவு விருந்து அளிக்கிறார். இதில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் டெல்லி பாரத மண்டபத்தில் நடக்கும் வருடாந்திர ஜி 20 உச்சி மாநாட்டில் உலகளாவிய பிரச்னைகளை தீர்ப்பது குறித்து அனைத்து தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1.20 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போர் விமானங்கள், ஏவுகணைகள் உள்பட பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. டெல்லி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் சிசிடிவி பொறுத்தப்பட்டுள்ளது. டெல்லி வீதிகளில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. உலக தலைவர்களை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

* வருகை தந்த உலக தலைவர்கள்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா,கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், ஜெர்மன் சான்சலர் ஓலப் ஸ்கோல்ஸ், தென் கொரிய அதிபர் யூன் சுக் யியோல், தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா, துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன், ஆப்பிரிக்க யூனியனின் தற்போதைய தலைவர் அசாலி அசோமானி, ​​ஓமன் துணைப் பிரதமர் சயீத் பஹத் பின் மஹ்மூத் அல், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ். இவர்கள் தவிர நெதர்லாந்து, நைஜீரியா, எகிப்து, மொரீஷியஸ், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா டெல்லி வந்தடைந்தார். மேலும் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

* ஜி 20 நாடுகள்
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்.

* ஆப்சென்ட் ஆகும் தலைவர்கள்
சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர்.

* ஜி 20 ஜனாதிபதி விருந்திற்கு கார்கேவை அழைக்காதது துரதிர்ஷ்டவசமானது: எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்
ஜி 20 மாநாட்டை முன்னிட்டு இன்று இரவு உலக தலைவர்களுக்கு பாரத் மண்டபத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு விருந்து வழங்குகிறார். இந்த விருந்துக்கு முன்னாள் பிரதமர்கள், அனைத்து மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விருந்திற்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு சமமான, அரசியல் சாசன பதவியான மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பெல்ஜியம் நாட்டில் உள்ள ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்தார்.

அதே போல் மற்ற தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல்: ஜனாதிபதி விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து கார்கே நீக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. பல்வேறு கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிக்கு முக்கியப் பங்கு உண்டு, அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் அழைக்கப்படாவிட்டால் அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். அந்த விருந்தில் நான் கலந்து கொள்ளவில்லை.

* ஜனாதிபதி விருந்தை புறக்கணிக்கும் முன்னாள் பிரதமர்கள், முதல்வர்கள்
ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி இன்று இரவு அளிக்கும் விருந்துக்கு முன்னாள் பிரதமர்கள், தற்போதைய மாநில முதல்வர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் பலர் இந்த விருந்தை புறக்கணிக்க உள்ளனர். அதன் விவரம்:
முன்னாள் பிரதமர்கள்: மன்மோகன் சிங். தேவ கவுடா ( இவர்கள் உடல் நலன் காரணமாக விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.
கலந்து கொள்ளும் முதல்வர்கள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.
புறக்கணிக்கும் முதல்வர்கள்; கர்நாடகா முதல்வர் சித்தராமையா, சட்டீஸ்கர் பூபேஷ் பாகெல், ராஜஸ்தான் அசோக்கெலாட்.

* பிரதமர் மோடியின் டிவிட்டர் முகப்பு மாற்றம்
ஜி20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தின் முகப்பை மாற்றி அமைத்தார். ஜி20 மாநாட்டு நடக்கும் இடமான பாரத் மண்டபத்தின் படத்தை அதில் இடம் பெற செய்துள்ளார். அந்த படத்தில் நடராஜர் சிலையுடன் பிரகாசமாக ஒளிரும் பாரத மண்டபம் உள்ளது. மேலும் மோடி உள்படத்தில் உள்ள மூவர்ணக் கொடியை மாற்றி கைகூப்பியபடி இருக்கும் தனது சொந்தப் படத்தை அதில் பதிவிட்டுள்ளார்.

* இருநாட்டு உறவு மேம்படும்
மோடி- பைடன் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,’ மோடி, பைடன் பேச்சுவார்த்தையில் பலவிதமான பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிணைப்பை மேலும் ஆழப்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஜேனட் யெலன், வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் அமெரிக்க தரப்பில் இருந்து இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

3 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi