
திருத்தணி: திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள சுய உதவி குழுக்களுக்கான வணிக வளாகத்தில் மத்திய மாநில அரசு பணிகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக வட்டார அளவில் புதிதாக துவங்கப்பட்ட `கற்போர்’ வட்டம் என்னும் இலவச வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையத்தை நேற்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திறந்து வைத்து, பார்வையிட்டார். மாணவ, மாணவியர்களுக்கு இலவச பயிற்சி கையேடுகள் மற்றும் உறுப்பினர் அட்டைகளை வழங்கி அவர் தெரிவித்ததாவது:
திருவள்ளுர் மாவட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து வட்டாரங்களிலும், அனைத்து கிராமங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னனி மாவட்ட நிர்வாகம் சார்பாக இந்த கற்போர் வட்டம் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் இருக்க கூடிய கிராம நூலகங்களில் ஊராட்சி அளவிலான கற்போர் வட்டங்கள் ஆரம்பித்து, அதில் போட்டி தேர்வுகள் சம்பந்தமான அறிவிப்புகள் அனைத்து மக்களிடம் சென்று சேர வேண்டும் என்ற முதல் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. அந்த கற்போர் வட்டத்தில் வேலைவாய்ப்புகள் தொடர்பாக எந்தெந்த அறிவிப்புகள் உள்ளது, எந்தெந்த விதமான இலவச பயிற்சி வகுப்புகள் அரசு மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்கள் தெரிந்துகொள்வதற்கு அனைத்து நூலகங்களிலும் ஒரு கற்போர் வட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, போட்டித் தேர்வுகளுக்கான அடிப்படையாக எந்தெந்த புத்தகங்கள் அவசியமாக தேவைப்படுகிறதோ அந்த வகையில், அனைத்து விதமான புத்தகங்கள் அனைத்து கிராம நூலகங்களில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட்டாரங்களிலும் இந்த கற்போர் வட்டத்தின் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில வகுப்புகள் நடத்த முடியாக சூழ்நிலையில் அந்த வகுப்புகள் அரசு வகுப்புகளில் சேருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது. அதே போன்று மாணவர்கள் நூலகங்களில் தேவையான புத்தங்களை படிப்பதற்கு எடுத்துக்கொள்வதற்கும், இங்கேயே படிப்பதற்கும் போட்டி தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகள் செய்வதற்கும் தேவையான வசதிகள் செய்யப்படுகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் எப்படி மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு காலை முதல் மாலை வரை படிக்க தயாராகிறார்களோ, அதே போன்று நம் திருவள்ளுர் மாவட்டத்திலும் அனைத்து வட்டாரங்களிலும் மாணவர்களுக்கு வசதிகள் செய்யப்படுகிறது. இங்கேயும் மாணவர்களுக்கு யுபிஎஸ், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இது ஒரு இனிய வாய்ப்பாக அமையும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து, திருத்தணி ஊராட்சி ஒன்றியம், தரணிவராகபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நூலகத்தில் மத்திய, மாநில அரசு பணிகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக ஊராட்சி அளவில் புதிதாக அமைக்கப்பட்ட \”கற்போர் வட்டம்\” என்னும் இலவச வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார்.
மேலும், திருத்தணி ஊராட்சி ஒன்றியம், தரணிவராகபுரத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நலத்துறை சார்பாக இணை நோய் உள்ளவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து மருந்து பெட்டகங்கள் வழங்கும் உன்னத திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு உடற்பரிசோதனை செய்யும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சிகளில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், உதவி கலெக்டர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா, ஒன்றிய குழு தலைவர் தங்கதனம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், ராஜேந்திர பாபு, ஊராட்சி மன்ற தலைவர் குப்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள், கற்போர் வட்டம் மைய பிரதிநிதி வினோத், பயிற்றுநர்கள், மாணவ, மாணவியர்கள், கலை குழுவினர் மற்றும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.