Monday, May 27, 2024
Home » மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்!

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தில்லை வாழ் அந்தணர் மரபில் உதித்தவர் `உமாபதி சிவாச்சாரியார்’. நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்த புங்கவர் இவர். `ஸ்ரீமந்திர மூர்த்தி தீட்சிதர்’ என்பவரிடத்தில் அம்பிகை வழிபாட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்த `ஸ்ரீவித்யா உபாசனையை’ கற்று தேர்ந்தவர். இவரது வாழ்வில் எண்ணற்ற அதிசயங்கள் ஈசன் அருளால் நிகழ்ந்திருக்கிறது. இப்படி, இவர் வாழ்வில் நடந்த அதிசயங்கள் ஏராளம். சிதம்பரத்தில் இருக்கும் பிலாகாசம் (கைலாசத்திற்குச் செல்லும் ஒரு விதமான சுரங்கப் பாதை) வழியே கைலாசம் சென்று இறைவனை சேவித்து, வரும் வழியில் பல ரிஷி – முனிவர்களை தரிசித்து, அவர்களிடம் சைவ சமய தத்துவங்களை அறிந்து உலகில் அதைப் பரப்ப ஆணை பெற்றுவந்தவர்.

இப்படி, பெருமைகள் பல வாய்ந்த உமாபதி சிவாச்சாரியார், ‘‘குஞ்சிதாங்கிரி ஸ்தவம்’’ என்ற தோத்திரத்தை பாடினார். இந்த தோத்திரம் முழுவதும், தில்லை நடராஜப் பெருமானின், தூக்கிய திருவடியான இடது திருவடியின் பெருமையை பாடுவது போல அமைந்திருக்கும். இதில் மொத்தம் முன்னூற்று பதின் மூன்று சுலோகங்கள் உள்ளன. இந்த துதியை பாடி முடித்ததும், இவருக்கு நடராஜப் பெருமானின் தரிசனம் கிடைத்தது என்பது வரலாறு.

அதை உண்மை என்று சொல்வது போல, இந்த துதியின் கடைசிப் பாடலில், இறைவன் தனக்குத் தரிசனம் தந்த அற்புதத்தை விளக்கி இருக்கிறார் இந்த மகான். அது மட்டும் இல்லை, அடியவர்களாகிய நாமும் இந்த துதியை பாடிப் பரவினால், நமக்கும் அந்த ஆடல் வல்லானின் அற்புத தரிசனம் கிடைக்கும் என்று உறுதியாக சொல்கிறார். இந்த துதியில், முன்னூறுக்கும் மேற்பட்ட ஸ்லோகங்கள் இருப்பதால், இந்த துதி, ஆயிரம் ஸ்லோகங்கள் கொண்ட துதியாகவே கருதப்படுகிறது.

நடராஜப் பெருமான் தனது இடது திருவடியைத் தூக்கித்தான் ஆடுகிறார். அவரது இடது பாகம் முழுவதும் அம்பிகைக்கு உரியதாக இருப்பதால், தூக்கிய திருவடி அம்பிகையின் திருவடியாகவே கருதப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல, தூக்கிய திருவடியில் பெண்கள் அணியும் சிலம்பு என்ற ஆபரணம் இருப்பதை கவனிக்க வேண்டும்.

இறைவனுக்கு உரிய வலது பாதம் நிலையாக தரையில் ஊன்றிய படி இருக்க, சக்திக்கு உரிய இடது பாதம் உயர ஆடிக்கொண்டு இருக்கிறது. சக்தியின் இயக்கத்தால்தான் சிவன் இயங்குகிறார் என்பதை இது காட்டுகிறது.தன்னைக் காணவரும் அடியவர்களுக்கு, ‘‘அன்னையின் பாதத்தை பிடித்தால் என்னை, எளிமையாக அடையலாம். ஆகவே, இந்த இடது பாதத்தை பிடித்துக்கொள்’’ என்பது போல, அதை தூக்கி ஆடுகிறார் பரமன். அடியார்களை இறைவன் காத்த அற்புதத்தை, பெரியபுராணத்தில் விளக்க வந்த சேக்கிழார் பெருமான்கூட, இந்த சிலம்பணிந்த இடது பாதத்தைத்தான் முதலில் பாடுகிறார்.

‘‘மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்’’ என்று அதாவது, ஈசன் அடியவர்கள் அனைவரையும் காத்த, ஈசனின் கருணையே வடிவான சக்தியைதான் முதலில் துதிக்கிறார். இப்படி மகிமைகள் பல பொருந்திய அந்த தூக்கிய திருவடிக்கு ‘‘குஞ்சிதாங்கிரி’’ என்றும் ‘‘குஞ்சிதபாதம்’’ என்றும் பெயர். இந்த தூக்கிய திருவடியை போற்றிதான் உமாபதி சிவாச்சாரியார்’’, ‘‘குஞ்சிதாங்கிரி ஸ்தவம்’’ இயற்றி இறைவனை நேரில் கண்டார். அந்த அற்புத துதியில் இருந்து சில அமுதத் துளிகளை இப்போது அனுபவிக்கலாம்.

சந்திர மௌலீஷ்வரர் சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு பிரதி நிதியாக, அனாதி காலமாக, சந்திரமௌலீஷ்வரர் என்ற ஸ்படிகலிங்கம் இருப்பதை அனைவரும் அறிவார்கள். இதற்கு மூன்று வேளையும் விமர்சையாக பூஜைகள் நடைபெறுகிறது. முக்கியமாக, இந்த ஸ்படிகலிங்கத் திருமேனிக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தை காணக் கண்கோடி வேண்டும். இந்தத் திருமேனியை ஆதிசங்கரர்தான் கொடுத்தார் என்று பலர் சொல்கிறார்கள். ஆனபோதிலும் இந்த லிங்கம், ஆதிசங்கரர் காலத்திற்கு முன்பு இருந்தே சிதம்பரத்தில் இருப்பதாக தலபுராணம் முதலியவை சொல்கிறது.

தில்லைவாழ் அந்தணர்கள் இறைவனை, ஆனந்த நடராஜ மூர்த்தியை எப்படி பூஜிப்பது என்று குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும்போது, நடராஜப் பெருமான், தோன்றி தனது சந்திரக் கலையில் இருந்து வைரத்தை போல பிரகாசிக்கும்படியான ஒரு ஸ்படிகலிங்கத்தை தந்தார் என்பது வரலாறு. இதை, 15-ஆவது ஸ்லோகத்திலும், 276 ஆவது ஸ்லோகத்திலும், அழகாக எடுத்துச் சொல்கிறார் உமாபதி சிவாச்சாரியார்.

ரத்ன சபாபதி

முன்னொரு சமயம் பிரம்மாவானவர் `அந்தர்வேதி’ என்ற யாகம் செய்தார். அதற்கு செல்லும்படி, தில்லைவாழ் அந்தணர்களை பதஞ்சலி முனிவர் ஆணை தந்தார். அவரது ஆணைபடி யாகத்திற்குச் சென்ற அவர்கள், நடராஜப் பெருமானை காணாது நாங்கள் உணவு உண்ண மாட்டோம் என்றார்கள். அவர்களின் பொருட்டு, யாக குண்டத்தில் இருந்து, ரத்தினத் திருமேனியோடு எழுந்தருளினார் நடராஜப்பெருமான். அந்த பெருமானுக்கு `ரத்ன சபாபதி’ என்று திருநாமம்.

இன்றும் இந்த ரத்தினத் திருமேனி சிதம்பரத்தில் உள்ளது. பூஜை காலங்களில், இவருக்கு அபிஷேகம் செய்து, பின்பக்கம் தீபாராதனை காட்டுவார்கள். அந்த தீபஒளி, ரத்தின சபாபதியின் திருமேனியில் பட்டு பிரகாசிக்கும்போது, உண்மையிலேயே இறைவன் நெருப்புக்கு நடுவில் ஆடுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். பக்தர்கள் அனைவரும் அவசியம் தரிக்க வேண்டிய அற்புதம் இது. நான்கு மாதங்களுக்கு முன்னே அடியேனுக்கு இதை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த காட்சி இன்னமும் என் மனதை விட்டு அகலவே இல்லை. இந்த ரத்னசபாபதியின் மகிமையை 16-ஆவது ஸ்லோகத்தில் விளக்குகிறார் உமாபதி சிவாச்சாரியார்.

இந்திரனைக் காத்த சபாநாயகர்

வரல்கலீ என்ற அசுரனால் பெரிதும் துன்பத்திற்கு ஆளானான் இந்திரன். அவன் மன் நாராயணனை நாடினான். அவரும் போரில் அவனுக்கு பெரும்உதவி செய்தார். ஆனால், அந்த ஹரியாலும் அந்த கொடிய அரக்கனை வெல்ல முடியவில்லை. ஆகவே, மகாவிஷ்ணுவோடு கூடி சிதம்பரம் வந்து சபாநாயகனை பூஜித்த இந்திரன், அவரது அருளால் அரக்கனை வென்றான். இதனால், குஞ்சிதபாதத்தை வணங்கினால், வெற்றி பெறலாம் என்கிறார் 41-ஆவது ஸ்லோகத்தில்.

பெரும் யாகத்தைவிட சிறந்தது குஞ்சிதபாதம்

ஒருமுறை பிரம்மா, ஒரு அரிதான யாகத்தை நடத்தினார். அப்போது, சாமவேதம் பாடி, இந்திரனை அழைத்தார். ஆனாலும், அவன் வரவே இல்லை. சினத்தின் உச்சிக்குச் சென்றார் பிரம்மா. தனது ஞானதிருஷ்டியால் இந்திரன், சித்சபையில் நடராஜ பெருமானின் தூக்கிய திருவடியை வணங்கிய படி இருப்பதை அறிந்து, தான் செய்யும் யாகத்தை அப்படியே விட்டு, சிதம்பரம் வந்து குஞ்சிதபாதத்தை வழிபட்டார் என்று 47-ஆவது ஸ்லோகத்தில் சொல்கிறார்.

வருணன் பாபம் போக்கிய குஞ்சிதபாதம்

வருணன், ஒரு முறை பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கபட்டான். அவன் சிதம்பரம் வந்து இறைவனை வணங்கினான். அவனுக்காக, மீன்கள் நிறைந்த சமுத்திரத்தில், தனது குஞ்சிதபாதத்தை நனைத்தார் இறைவன். அவரது குஞ்சிதபாதம் பட்டு, சமுத்திரமே தூய்மை அடைந்தது. வருணன் பாபம் நீங்கப் பெற்றான். இந்த சம்பவம் நடந்தது “மாசி மாதம் மக’’ நட்சத்திரத்தில். ஆகவே, மாசி மகத்தில் சமுத்திரஸ்நானம் செய்பவர்கள் அனைவரும் குஞ்சிதபாத தீர்த்தத்தில் நீராடிய புண்ணியம் பெற்று, பெரும் பேறு பெறுவார்கள் என்று இறைவன் அருளினாராம். இந்த அற்புத தகவலை 51-ஆவது ஸ்லோகத்தில் சொல்கிறார்.

சிதம்பரம் வந்த கங்கை

சிதம்பரம் நடராஜப் பெருமானையும், ரத்தின சபாபதியையும், ஸ்படிகலிங்க பிரானையும் பூஜிக்க வழி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் பரமனை வேண்டினார்கள். அவர்கள் பொருட்டு கருணைகூர்ந்து, இறைவன் கங்கையை, சித்சபைக்குக் கீழ்ப்புறம் இருக்கும் கிணற்றில் தோன்றச் செய்தார். இதற்கு “பிரம்மானந்த கூபம்’’ என்று பெயர். நடராஜப் பெருமானுக்கு இந்த தீர்த்தத்தால்தான் பூஜைகள் நடக்கிறது. இந்த தகவலை 74-ஆம் பாட்டில் சொல்கிறார்.

நந்தி வித்யா பீடம்

உமாபதி சிவாச்சாரியார், சிதம்பரம் சிவகாமி அம்பிகையின் சந்நதிக்கு வடபுறம் உள்ள பிராகாரத்தில் உள்ள சுவரில், ஸ்ரீசக்ரம் எழுதி அதை உபாசித்து வந்தார். பல காலம் சிவகாம சுந்தரியை, ஸ்ரீவித்யா மந்திரங்களில் உபாசித்ததன் பலனாக, அஷ்ட மா சித்திகளையும், உமாபதி சிவாச்சாரியார் அடைந்தார் என்பது வரலாறு. இன்றும், அவர் பூஜித்த ஸ்ரீசக்ரத்தை கோயிலில் காணலாம். ஹயக்ரீவர், அகத்தியர், லோபாமுத்திரை, பரசுராமர், துர்வாசர் முதலிய பெரும் ஸ்ரீவித்யா உபாசகர்களும்கூட இந்த தேவியை பூஜித்து இருப்பதாக வரலாறு.

நந்திதேவர் இந்த சிவகாமசுந்தரியின் அருளால்தான் பல மகிமைகளைப் பெற்றார் என்று பாஸ்கரராயரும், நாராயண பட்டரும் எழுதிய லலிதா ஸஹஸ்ரநாம உரை கூறுகிறது. லலிதா ஸஹஸ்ரநாமத்தில் “நந்தி வித்யா’’ மற்றும் ‘‘நடேஷ்வரி’’ என்ற நாமங்கள் இந்த அம்பிகையையே குறிக்கிறது.

ஆதிசங்கரர் ‘‘கேன உபநிஷத்திற்கு’’ உரை எழுதும்போது, பெரும் சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. அந்த சந்தேகத்தை நேரில் தோன்றி நிவர்த்தி செய்தது சிவகாமி அம்பிகைதான். சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலோடு இருந்தாலும், அம்பிகையின் சந்நதி தனி ஆலயம் போலவே இருக்கும். ‘‘திரிபுராண்டம்’’ என்னும் சிற்பசாஸ்திரம் கூறுவது போல, விமானத்தில் மூன்று ஸ்தூபிகள் இருப்பதாலும், சமீபத்தில் வேறு சிவாலயங்கள் இல்லாததாலும், தெற்கு நோக்கிய நடராஜப் பெருமானின் சபைக்கு வலது புறம் வடக்கே இருப்பதாலும் இந்த ஆலயம் தனி ஆலயமாகவே கருதப்படுகிறது.

மொத்தத்தில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலைப் போன்றே பெருமை வாய்ந்த கோயில் இது. இங்கே ஞான சக்தியாக அம்பிகை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ‘‘மீனாக்ஷ்யா பிரதம ஸ்தானம் யச்ச புரோக்தம் சிதம்பரே’’ என்று தேவி கீதையும் சிவகாமியின் பெருமையைச் சொல்கிறது. இந்த அம்பிகையின் பெருமையையும் தனது அனுபவத்தையும் 77-ஆவது ஸ்லோகத்தில் சொல்கிறார்.

சிதம்பரமே அனைத்து சிவாலயங்களும்

காலை பூஜை ஆரம்பிக்கும் வேளையில், நடராஜர் சந்நதியில் இருந்து சிவனுடைய சான்னித்தியம் (தெய்வசக்தி) கிளம்பி அனைத்து சிவாலயங்களிலும் குடியேருமாம். அதேபோல, அந்தந்த கோயில் அர்த்த ஜாம பூஜை முடிந்ததும், சிவனுடைய சான்னித் தியம் (தெய்வசக்தி) மீண்டும் நடராஜருடன் கலந்துவிடும். அதாவது, அனைத்து சிவாலயங்களிலும், நடராஜர்தான் காட்சி தருகிறார் என்று சொல்கிறார். ‘‘ஸ்வனன்ய:’’ என்ற நாமமும் ‘‘ஸ்வாம்சிதாகில:’’ என்ற நாமமும் நடராஜ சஹஸ்ர நாமத்தில் வருகிறது. இந்த நாமங்கள் மேலே சொன்ன தகவலுக்கு ஆதாரமாக விளங்குகிறது. (111 பாடல்)

சிதம்பர ரகசிய மந்திரம்

காலம் காலமாக ரகசியமாக தீட்சிதர்கள் ஜெபித்து, சிதம்பரத்தில் ஈசனை பூஜிக்கும் மந்திரம் இது. இதை 112-ஆவது பாடலில் விளக்குகிறார் உமாபதி சிவாச்சாரியார். ஸ்ரீவித்யா மந்திரமான பஞ்சதசாட்சரி மந்திரம், மகாஷோடசி மந்திரம், சிவபஞ்சாட்சர மந்திரம், பாலாதேவியின் மந்திரம் இந்த மந்திரங்களில் கூட்டே சிதம்பர ரகசிய மந்திரம். இதை ஜெபித்துதான் நடராஜருக்கு பூஜை நடக்கிறது.

நடராஜரை பூஜித்த தசரதன்

காகுஸ்த வம்சத்தில் தோன்றிய தசரதன், புத்திரபேரு வேண்டி வசிஷ்டரின் வழி காட்டுதலின் படி சிதம்பரத்தில் தவம் இருந்தார். ஒரு வருட காலம் ‘‘ஸ்ரீ’’ என்ற அட்சரத்தோடு கூடிய பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்து, குஞ்சிதபாதத்தை பூஜித்து, அதன் பலனாக ஸ்ரீராமசந்திர மூர்த்தியையே மகனாக அடைந்தான் என்று `தில்லை வன மகாத்மியம்’ என்ற நூல் சொல்கிறது. (116 பாடல்)

சங்கீதத்தைப் படைத்த இறைவன்

சித்ரசேனன் என்ற கந்தர்வன், சிதம்பரம் நடராஜப் பெருமானை பூஜித்து, அவரது தரிசனத்தை பெற்றான். அவர் தனது டமருகத்தை அசைக்க, அதிலிருந்து பிறந்த சங்கீத சாஸ்திரத்தை கற்றுக் கொண்டு, சங்கீத மேதையாக விளங்கினான். (பாடல் 118) நாரதரும் சங்கீத சாஸ்திரத்தில், இருந்த தனது சந்தேகத்தை தீர்க்கும்படி பிரம்மதேவரை கேட்க, பிரம்மதேவர் தில்லை நடராஜரை உபாசிக்கும் படி சொன்னார்.

அதனை பின்பற்றி நாரதர் தில்லைக்கு வந்து குஞ்சிதபாதத்தை வணங்கி, ஈசன் அருளால் சங்கீத சாஸ்திரத்தில் இருந்த, சந்தேகம் நீங்கப் பெற்றார். இந்த சரிதம் சிதம்பர ரகசிய புராணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. (பாடல் 121)

பூதஉடலோடு பக்தனை சுவர்க்கம் அழைத்துச் சென்ற மகிமை`

சர்வாவாரம்’ என்ற யாகத்தை செய்தால், அந்த யாகத்தை செய்பவன் தனது சொந்த உடலோடு சுவர்க்கத்தை அடையலாம். யாகத்தின் முடிவு வரும்போது, யாகத்தை முடிக்கும் படி மற்ற வேதியர்களை வேண்டிக் கொண்டு, `ஆகவனீயம்’ என்ற வேள்வித் தீயில் குதிக்க வேண்டும். அப்படி செய்தால் பூத உடலோடு சுவர்க்கத்தை அடைய முடியும் என்கிறது சாஸ்திரம். ஒரு அந்தணன் சுவர்க்கத்தை அடையும் ஆசையில் இந்த யாகத்தை செய்தான்.

ஆனால், வேள்வியின் அங்கமாக ஆகவனீய அக்னியில் குதிக்கப் பயந்து தயங்கினான். மனதால் தில்லை நடராஜ பெருமானின் குஞ்சிதபாதத்தை சரண் புகுந்தான். அவனுக்காக, முன்தோன்றிய இறைவன், அவனை பூத உடலோடு சுவர்கத்திர்க்கு அழைத்துக் கொண்டார். (பாடல் 148)

நடராஜருக்கு பூஜை செய்யும் பல்லி

துஷ்டனும், பொய் சொல்பவனுமான ஒரு சோதிடன், தலயாத்திரை செய்யும் சமயம், விதி வசத்தால் தில்லையில் இறந்து போனான். தில்லையில் மரித்த காரணத்தினால், அவன் அடுத்த ஜென்மத்தில் பல்லியாக சிதம்பரம் நடராஜர் கோயிலிலேயே பிறந்தான். புண்ணிய வசத்தால், அந்தப் பல்லிக்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது. அதனால், பல்லியாக இருந்த போதிலும்,
குஞ்சிதபாதத்தை துதித்தது.

அதனால் மனம் கனிந்த இறைவன், அதற்கு தெய்வீக உருவம் தந்து, தில்லையின் காவலனாக நியமித்தார். அந்த பல்லியை கோயிலில் `அர்த்த ஜாம அழகர்’ என்று அழைக்கிறார்கள்.

இந்த அர்த்த ஜாம அழகரை சிதம்பரம் நடராஜ பெருமான் சந்நதியின் கீழ்ப்புறம் தரிசிக்கலாம். (பாடல் 191).

சந்திரனுக்கும் ஆமைக்கும் விமோசனம் தந்தது

சந்திரன் குஞ்சிதபாதத்தை பூஜித்த பலனால், குருவின் பத்தினியைப் புணர்ந்ததால் ஏற்பட்ட பாவம் நீங்கப் பெற்றான் (பாடல் 238). ஒரு அரசகுமாரன் விதிவசத்தால், ஆமையின் உருவில் பிறந்தான்.

அவனை எண்ணி அவனது தாயும் தந்தையும் பெரிதும் வருந்தினார்கள். அந்த அரசகுமாரன், குஞ்சிதபாதத்தை பூஜித்து, தேவனைப் போல அழகு வாய்ந்த சரீரத்தை அடைந்தான். (198 பாடல்).

நந்திதேவர் கண்ட நடராஜர்

நந்திதேவர், சிதம்பர ரகசிய மந்திரத்தை ஜெபித்து அதன் பலனாக, நடராஜனை அர்த்தநாரி ரூபத்திலும், சங்கர நாராயண வடிவிலும், அம்பிகையின் வடிவிலும், லிங்க வடிவிலும் கண்டு தரிசித்தார். (பாடல் 246)

நவகிரகம் பூஜிக்கும் ஈசன்

அங்காரகன், ஈசனின் வியர்வையில் தோன்றியவன். அவன் குஞ்சிதபாதத்தை பூஜித்துதான் கிரகப் பதவி அடைந்தான். அதே போல, சனிக் கிரகமும் குஞ்சிதபாதத்தை பூஜித்ததே கிரக நிலையை அடைந்தது.

அதுமட்டும் இல்லை, யம தர்ம ராஜன்கூட, இனி எனக்கு இந்த தொழில் வேண்டாம் என்று இறைவனை இறைஞ்சி வணங்கினான். அவனுக்கு அருளிய இறைவன், தனது தொண்டர்களை மட்டும் தீண்டாது இருக்கும் படி வரம் தந்தார். இதைப்போல நாம், சிதம்பரத்தைப் பற்றி அறியாத பல தகவல்கள் ‘‘குஞ்சிதாங்கிரி ஸ்தவ’’த்தில் இருக்கிறது. அவை அனைத்தும் படித்து ருசித்து ரசித்து அனுபவிக்க வேண்டியவை. அப்படி அந்த துதியிலும், துதி போற்றும் இறைவனையும் போற்றி வந்தால், அந்த இறைவனின் திருநடனத்தை நேரில் காணலாம் என்று உமாபதி சிவாச்சாரியார் கூறுகிறார்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

You may also like

Leave a Comment

fourteen − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi