Monday, April 15, 2024
Home » உயர்வு தந்த ஒருங்கிணைந்த பண்ணை!

உயர்வு தந்த ஒருங்கிணைந்த பண்ணை!

by Porselvi

“பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன் சார். எங்க ஊருல வருசத்துக்கு ஒரு போகம்தான் விவசாயம் பார்க்க முடியும். அதுவும் நெல், கரும்புன்னுதான் பயிர் பண்ணுவோம். வேற வேலைகளுக்கு போவேன். வருசத்துக்கு ஒரு லட்ச ரூபா வருமானம் பார்ப்பேன். இப்ப ஒருங்கிணைந்த பண்ணையம் செய்றதால வருசத்துக்கு 7 லட்ச ரூபா வருமானம் கிடைக்குது சார். பசங்கல்லாம் படிக்கிறாங்க. வாழ்க்கையும் நிம்மதியா போகுது சார்’’ என வெள்ளந்தியாக பேசுகிறார் அசோக்குமார். அரியலூரில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கரைவெட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் கடல்போல் விரிந்து காட்சி அளிக்கிறது, அந்த ஊரின் பெயரிலேயே அமைந்துள்ளது கரைவெட்டி ஏரி. இந்த ஏரி தமிழகத்தில் உள்ள முக்கிய பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஏரியில் ஆங்காங்கே தீவு போல மண்மேடு அமைத்திருக்கிறார்கள். அந்த மண்மேட்டில் புதர்கள் மண்டி, குறுங்காடுகள் போல காட்சி அளிக்கின்றன. அந்தக் குறுங்காடுகளில்தான் சைபீரியா, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பல மைல் தூரம் கடந்து வரும் பறவைகள் ஓய்வு எடுக்கின்றன. ஏரியைச் சுற்றி அமைந்துள்ள ஈர வயல்களில் நண்டு, மீன் தேடி அலைகின்றன. இந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்காகவே பல்வேறு பகுதிகளில் இருந்து பறவை ஆர்வலர்கள் கரைவெட்டிக்கு படையெடுக்கிறார்கள். இந்தக்காட்சிகளை நாமும் பார்த்து ரசித்துவிட்டு, அசோக்குமாரின் வயலுக்கு சென்றோம். மீன்குட்டை, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, நெல் சாகுபடி என தொடர்ச்சியாக ஏதாவது செய்து கொண்டிருக்கும் அசோக்குமார், தனது மாட்டுக்கொட்டகைக்கு மின்விசிறி போடும் பணியில் பிசியாக இருந்த வேளையிலும் நம்மிடம் தொடர்ந்து பேசினார்.

“ எங்களுக்கு பாரம்பரியத் தொழிலே விவசாயம்தான். 5 ஏக்கர் நிலம் இருக்கு. ஆனாலும் பெருசா வருமானம் இருக்காது. இப்படி இருக்குற நிலமையிலும் நாம ஏதாவது புதுசா செய்யணும்னு நினைப்பேன். கடந்த 2012ல எங்க மாவட்டத்துல ரவிக்குமார்னு ஒரு கலெக்டர் இருந்தாரு. அவரு இங்க ஒருங்கிணைந்த பண்ணையத்தை செய்யணும்னு விவசாயிகளை ஊக்கப்படுத்துனாரு. இதுக்காக விவசாயிகளை கலெக்டர் ஆபிசுக்கு வர வச்சி, ஒருங்கிணைந்த பண்ணையம் பத்தி டெமோ காட்டுனாரு. நீங்க பழைய முறைப்படி ஆடு, மாடு, கோழி வளர்த்துக்கிட்டே உங்க விவசாயத்தைத் தொடரலாம். இதுக்கு பேருதான் ஒருங்கிணைந்த பண்ணைன்னு சொன்னாரு. இதுல ஏதாவது சந்தேகம் இருக்கான்னும் கேட்டாரு. யாரும் எதுவும் சொல்லல. நான் மட்டும் எழுந்து நின்னு சந்தேகம் கேட்டேன். இங்க தண்ணி வசதியே இல்ல, எப்படி விவசாயம் பண்றதுன்னு கேட்டேன். உடனே அவரு அதிகாரிகளைக் கூப்பிட்டு என்ன, ஏதுன்னு கேட்டாரு. 15 நாள்ல எனக்கு கரண்ட் கனெக்‌ஷன் கொடுத்து மோட்டார் போட ஏற்பாடு பண்ணாங்க. எல்லா உதவிகளும் செஞ்சி தரோம்னு சொன்னதால ஒருங்கிணைந்த பண்ணையம் நடத்தலாம்னு களத்துல இறங்கிட்டேன்.
முதல்கட்டமாக மீன் குட்டை அமைச்சேன். எங்களோட 50 சென்ட் நிலத்துல குட்டை வெட்டி மீன் வளர்க்க ஆரம்பிச்சேன். அதுக்கு முன்னால கரும்பு போட்டிருந்தேன். அதை அறுவடை பண்ணிட்டுத்தான் மீன் குட்டை அமைச்சேன். அப்ப கிருஷ்ணகிரில இருந்த மீன் வளத்துறைல திப்டு ஜிலேபியான்னு ஒரு மீன் ரகத்தை அறிமுகப்படுத்தினாங்க. அத வளர்க்க 100 சதவீதம் மானியமும் கொடுத்தாங்க. உடனே அந்தக்குஞ்சுகள வாங்கி வந்து குட்டையில் விட்டு வளர்த்தேன். 600 குஞ்சுகள் வாங்கி வளர்த்தேன். 3 மாசத்துல அத்தனை குஞ்சுகளும் வளர்ந்துருச்சி. 4வது மாசத்துல எல்லா மீனும் 500 கிலோ அளவுக்கு பெருத்துடுச்சி. இதில 100 மீன் கழிவு போக 500 மீனை வித்தோம். அந்த சமயத்துல ஒரு கிலோ 130 ரூபான்னு வித்தோம். இதுமூலமா 65 ஆயிரம் வருமானம் கிடைச்சிது. 100 சதவீதம் மானியம்ங்குறதால நல்ல லாபம்.

இதுக்கு இடையில சோழமாதேவில இருக்குற கிரீடு வேளாண் அறிவியல் நிலையம் பத்தி நண்பர்கள் சொன்னாங்க. அங்க ஒருங்கிணைந்த பண்ணையம் பத்தி ஒரு வகுப்பு நடத்துனாங்க. அதுல கலந்துக்கிட்டப்ப மேலும் சில விவரம் தெரிய ஆரம்பிச்சிது. அந்த மையத்தோட தொழில்நுட்ப வல்லுநர்களைச் சந்திச்சி பேசினோம். அவுங்க நேரடியாக என்னோட வயலுக்கு வந்து பாத்துட்டு, சில ஆலோசனை சொன்னாங்க. அதன்படி மேலும் சில வேலைகளைச் செஞ்சேன். 50 சென்ட்ல இருக்குற மீன்குட்டைய ரெண்டா பிரிச்சேன். நடுவுல ஒரு அணையைக் கட்டி ரெண்டு குளமாக்கி, தொடர்ந்து மீன் பிடிக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணேன். இப்ப 2 குளத்துலயும் மீன் வளர்க்குறேன். ஒரு குளத்துல ரோகு, கட்லா, மிர்கால், பில் கெண்டைன்னு மீன் வளர்க்குறேன். இன்னொரு குளத்துல ஜிலேபி மீன் வளர்க்குறேன். ரெண்டு குளத்துல இருந்து வார வாரம் ஞாயித்துக்கிழமை அன்னிக்கு மீன்பிடிக்கிறோம். வியாபாரிங்க வந்து ஒரு கிலோ 100 லிருந்து 130 ரூபா வரைக்கும் விலை கொடுத்து வாங்கிட்டு போறாங்க. ஒரு வாரத்துக்கு 25 கிலோ மீன் கிடைக்குது. இதுமூலமா வாராவாரம் ரூ.2500 வருமானமா
கிடைக்குது.

2014ம் வருசத்துல கோழிப்பண்ணை அமைச்சேன். முதல்ல கால்நடைத்துறை மூலமா 6500 சதுரமீட்டர் அளவுல, 22 அடி அகலம், 300 அடி நீளத்துல கொட்டகை அமைச்சேன். அதுல 6 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை வாங்கிட்டு வந்து வளர்த்தேன். இதுக்கு மத்திய அரசு 25 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் மானியம் கொடுத்தாங்க. எட்டேகால் லட்ச ரூபா செலவாச்சு. இதுல பாதி மானியம். 3 மாசத்துல கோழிகள் வளந்துடும். அதிகபட்சம் 35 நாள்ல கோழிகளை விற்பனை பண்ணிடுவோம். ஒவ்வொரு கோழியும் ஒன்னே முக்கால் கிலோ எடை வரும். இதுல ஒரு கோழிக்கு 250 கிராம் போனசா கொடுப்பாங்க. இதுமூலமா ஒரு கோழி 2 கிலோன்னு எடை போட்டு எடுத்துக்குவாங்க. அந்த சமயத்துல ஒரு கிலோ உயிர்க்கோழிக்கு சராசரியா 7 ரூபா விலை கிடைக்கும். இதுலயும் நல்ல லாபம் கிடைச்சிது. இப்ப ஒரு கிலோவுக்கு 12 ரூபா கிடைக்கிது. சராசரியா வருசத்துக்கு 1 லட்ச ரூபா கோழிகள் மூலமா வருமானம் வருது. இதுக்கு பராமரிப்புக்காக 30 ஆயிரம் செலவாகுது. இதுபோக 70 ஆயிரம் லாபமா கிடைக்குது.

இதே மாதிரி 50 ஆடு, 3 மாடு வாங்கினேன். ஆடுகளுக்கு பரண் கொட்டகை அமைச்சிருக்கேன். அதுல சுகாதாரமான முறையில வளர்க்குறோம். மாடுகளும் அப்படித்தான். இப்ப 5 மாடு பால் கொடுக்குது. பால் மூலமா மாசம் 15 ஆயிரம் வருமானம் வருது. 5 ஆயிரம் செலவு போக 10 ஆயிரம் லாபம் கிடைக்குது. ஆடுகள்ல தலைச்சேரி, வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வாங்கிட்டு வந்து வளர்க்குறேன். அதுங்க மூலமா வருசத்துக்கு 1 லட்சம் வரைக்கும் லாபம் கிடைக்குது. இதுதவிர ரெண்டரை ஏக்கர்ல நெல் சாகுபடி பண்றேன். ஆடு, மாடு கழிவுகளை மீன்குட்டைக்கு தீவனமா போடுறேன். மீன்குட்டை தண்ணிய நெல் வயலுக்கு பாய்ச்சுறேன். ஆடு, மாடு கழிவுகள நேரடியா வயலுக்கு விடவும் ஏற்பாடு பண்ணிருக்கேன். பெரிய அளவுக்கு உரத்துக்கு செலவு பண்றது இல்ல. இதனால ஆரோக்கியமான நெல் கிடைக்குது. ஏக்கருக்கு 50 மூட்டை நெல் தாராளமா கிடைக்குது. ரெண்டரை ஏக்கரில் இருந்து எப்படியும் 130 மூட்டை நெல் கிடைக்கும். இதுல எங்களுக்கு சாப்பாட்டுக்கு எடுத்துக்கிட்டது போக மீதி நெல்ல விற்பனை பண்றோம். ஒரு மூட்டைக்கு 1400 ரூபா விலை கிடைக்குது. 100 மூட்டை வித்தாலும் 1 லட்சத்து 40 ஆயிரம் வருமானமா கிடைக்குது.
நெல் சாகுபடி பண்ணிட்டு, பச்சைப்பயிர் விதைப்போம். அரை ஏக்கர்ல கோ 29, கோ 4, வேலிமசால்னு தீவனப்பயிர்களை சாகுபடி பண்ணுவோம். இதை ஆடு, மாடுங்களுக்கு கொடுத்துடுவோம். இதனால் தீவனச்செலவும் குறையுது. மீன்குட்டையைச் சுத்தி தென்னை மரங்களை வச்சிருக்கேன். இது மூலமா குட்டை குளிர்ச்சியா இருக்கு. மீனுங்களோட ஆரோக்கியத்துக்கு இது தோதா இருக்கும். தேங்காய்களைப் பறிச்சி எண்ணெய் ஆட்டி நாங்க பயன்படுத்திக்கிறோம். தேங்காய்களை சமையலுக்கும் பயன்படுத்திக்கிறோம்.

தென்னை மரத்தின் மட்டைகளைப் பயன்படுத்தி அடுப்பு எரிக்கிறோம். இதனால நாங்க கேஸ் அடுப்பை அதிகமா பயன்படுத்துறது கிடையாது. என் மனைவி செந்தமிழ்ச்செல்வி இந்தப் பண்ணையை நிர்வகிக்க பெரிய அளவுல உதவி பண்றாங்க. பிஎஸ்சி படிச்சிருக்குற என் பொண்ணு அனுஷ்யாவும், டிப்ளமோ படிக்கிற என் பையன் அனித்குமாரும் விவசாய வேலைகளுக்கு உறுதுணையா இருக்காங்க. ஊருக்குள்ள எங்களுக்கு ஒரு வீடு இருக்கு. ஆனா நாங்க எல்லோரும் பண்ணைல இருக்குற இந்த வீட்டுலதான் எப்பவும் இருப்போம். இந்த இயற்கையான வாழ்க்கை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’’ என அசோக்குமார் கூறுகையில், அவரது குடும்பமே அதை ஆமோதிக்கிறது.
தொடர்புக்கு:
அசோக்குமார் – 99435 30556.
டாக்டர் நடனசபாபதி – 94432 62222.

நஞ்சில்லா விவசாயம்

அரியலூர் விவசாயி அசோக்குமாரைப்போல பல விவசாயிகளும் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க முன்வர வேண்டும். இதில் ஒரு பயிர் கை விட்டாலும், ஒரு பயிர் கை கொடுக்கும். பயிர் சாகுபடியும், கால்நடை வளர்ப்பும் ஒருங்கிணைந்து நல்ல பலனைத் தரும். இயற்கை முறையிலும் பயிர்களை சாகுபடி செய்யலாம். 2023ம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டது. சிறுதானியங்கள் குறித்து பலருக்கும் இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு சிறுதானியங்களைப் பயிரிடவும் முன்வர வேண்டும் என்கிறார், அசோக்குமாருக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கிய கிரீடு வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடனசபாபதி.

மில்லினியர் விவசாயி

அரியலூர் மாவட்டத்தில் இப்போது ஒரு முன்மாதிரி விவசாயியாக மாறி இருக்கிறார் அசோக்குமார். இதனால் இவர் மற்ற விவசாயிகளுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து ஆலோசனை கூறி வருகிறார். சமீபத்தில் தனியார் டிராக்டர் நிறுவனம் ஒன்று, இவருக்கு மில்லினியர் விவசாயி என்ற விருதை வழங்கி கவுரவித்து இருக்கிறது.

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi