சென்னை: கோரமண்டல் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மட்டும் ஒடிசா செல்லும் வகையில் நேற்று இரவு 7.20 மணிக்கு சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது. கோரமண்டல் விரைவு ரயில் நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே இரவு 7 மணிக்கு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், 288 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டை சேர்ந்தோர் உள்பட 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஒடிசா செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
இதையடுத்து ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்தது. இந்த சிறப்பு ரயில்கட்டணமின்றி விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்காக இயக்கப்படுகிறது. நேற்று இரவு 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா மாநிலம் பத்ராவுக்கு புறப்பட்டு சென்றது. ரயிலில் 1,350 பயணிகள் வரை பயணிக்கலாம். இந்த ரயில் 20 மணிநேரத்தில் ஒடிசா சென்றடையும். சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களை பொதுமக்கள் 044-25330952, 044-25330953, 044-25354771 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.