சென்னை: தமிழ்நாடு காவல் துறையில் உள்ள நுண்ணறிவு பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கடந்த ஏப்ரல் 21ம் தேதி தமிழ்நாடு சட்ட பேரவையில் தமிழ்நாடு காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில் காவல் துறையில் உள்ள நுண்ணறிவு பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களாக டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் ஆகியோருடன் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, உள்துறைச் செயலாளர் அமுதா ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த ஆலோசனையின் அடிப்படையில் புதிய பிரிவு தொடங்குவதற்கான கருத்துரு டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் கருத்துருவை தமிழக உள்துறை தீவிரமாக ஆலோசனை நடத்தியது. அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தீவிரவாத புதிய தடுப்புப் பிரிவு அமைப்பது குறித்து சட்டப்பேரவையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து தீவிரவாத தடுப்புப் பிரிவை உருவாக்குவது குறித்து அறிக்கை மீண்டும் டிஜிபி சங்கர் ஜிவால் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வௌியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: தீவிரவாத தடுப்பு பிரிவுக்காக ரூ.60 கோடியே 12 லட்சத்து 81,330 நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீவிரவாத தடுப்பு பிரிவில் ஒன்று 383 பணியாளர்களுடன் செயல்படும். இந்த தடுப்பு பிரிவுக்கு, தமிழ்நாடு நுண்ணறிவு பிரிவு கூடுதல் டிஜிபி தலைமை வகிப்பார். இந்த பிரிவு சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சுதந்திரமாக செயல்படுவதற்கும் உரிய அதிகாரங்களை வழங்கி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குறிப்பிட்ட பிரிவின்கீழ் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மேற்கொள்ளும். இந்த பிரிவுக்கான அனைத்து நவீன கருவிகள், வாகனங்கள், அலுவலக கட்டிடங்கள், தொலைத்தொடர்பு கருவிகள், பர்னிச்சர்கள் வாங்க இந்த நிதியில் ரூ.26 கோடியே 56 லட்சத்து 64,790 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த படைக்கு 193 அதிகாரிகள், 190 துறையில் பணியாற்றும் அதிகாரிகள், 36 அமைச்சு பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையைத் தொடர்ந்து, இந்தப் பிரிவுக்கு என்று ஐஜி அந்தஸ்தில் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது நியமனத்திற்குப் பிறகு எஸ்பி, டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.