உத்தரகாசி: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் நாளுக்கு நாள் திக், திக் சம்பவங்கள் நடக்கின்றன. 10வது நாளாக நீடிக்கும் மீட்புப்பணியில் தற்போது சுரங்கத்தின் உள்ளே கேமரா அனுப்பப்பட்டு தொழிலாளர்கள் நலமுடன் இருக்கும் வீடியோ வெளியாகி இருப்பது அவர்களின் குடும்பத்தினர் இடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா பகுதியில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக 4.5 கிமீ தொலைவுக்கு மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது. இதில் 2 கிமீ தொலைவு சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட நிலையில், கடந்த 12ம் தேதி இந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து மண் சரிந்தது. இதில் சுரங்கத்தின் நடுப்பகுதியில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து உடனடியாக மீட்புப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் கடினமான கற்கள், மண் கழிவுகள் குவிந்திருப்பதால் தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது. முதலில், அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆகர் டிரில்லிங் இயந்திரம் மூலம் 60 மீட்டர் தூரத்திற்கு துளை போட்டு, 900 மிமீ குழாயை உள்ளே அனுப்பி அதன் வழியாக தொழிலாளர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 24 மீட்டர் தூரத்திற்கு துளை போட்ட நிலையில், நடுவில் இருந்த பாறை இடிந்ததால் மேற்கொண்டு துளையிட்டால் மீண்டும் சுரங்கம் இடியும் அபாயம் காரணமாக அந்த முயற்சியை மீட்புக்குழுவினர் கைவிட்டனர்.
இது சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் குடும்பத்தினர் மத்தியில் மிகவும் கவலையை ஏற்படுத்தியது. அவர்கள் சில்க்யாரா பகுதியில் தங்கி, இரவு பகலாக காத்திருக்கின்றனர். ஒருவாரத்திற்கு மேலாகியும் தொழிலாளர்களை மீட்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவர்கள் நம்பிக்கை இழந்தனர். இதற்கிடையே, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப முதலில் 4 அங்குல பைப் அமைக்கப்பட்டது. இதன் வழியாக உலர் பழங்கள், சிப்ஸ், மருந்துகள் அனுப்பப்பட்டது. அடுத்தகட்டமாக 2 முறை தோல்விக்குப் பிறகு சுரங்கத்திற்குள் 53 மீட்டர் தூரத்திற்கு 6 அங்குல விசாலமான பைப் நேற்று முன்தினம் வெற்றிகரமாக நுழைக்கப்பட்டது. இதன் மூலம் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு அனுப்புவது, தகவல் தொடர்பு எளிதாகி உள்ளது. மீட்புப் பணியின் 10வது நாளான நேற்று பெரிய பைப் மூலமாக மீட்புப் குழுவினர் எண்டாஸ்கோபி கேமராவையும் உள்ளே அனுப்பினர். அதன் மூலமாக உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுடன் மீட்பு குழுவினர் உரையாடும் முதல் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், மஞ்சள் மற்றும் வெள்ளை நிற ஹெல்மெட் அணிந்த தொழிலாளர்கள், குழாய் மூலம் தங்களுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு ஒருவருக்கொருவர் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுடன் அவர்களின் குடும்பத்தினர் சிலர் பேசினர். பீகாரின் பங்காவைச் சேர்ந்த தொழிலாளர் பிரதீப் கிஸ்குவின் மைத்துனர் சுனிதா ஹெம்ப்ரம் கூறுகையில், ‘‘இன்று பிரதீப்புடன் பேசினேன். புதிய குழாய் மூலம் அவர்களுக்கு ஆரஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. 9 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக சூடான உணவுகள் பெரிய பைப் மூலம் வழங்கப்பட முடிகிறது. கிச்சடி அனுப்பும் பணி நடந்து வருகிறது. தொழிலாளர்கள் உள்ளே நலமுடன் இருக்கிறார்கள். பெரிய பைப்பில் அவர்களது குரல் தெளிவாக கேட்கிறது’’ என்றார். உணவு மட்டுமின்றி மொபைல் மற்றும் சார்ஜர்களையும் உள்ளே அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பெரிய பைப் நம்பிக்கை தரும் விஷயமாக இருந்தாலும் தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. அடுத்ததாக சுரங்கத்தின் மேல் பகுதியில் 90 மீட்டர் ஆழத்திற்கு துளை போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 75 டன் எடை கொண்ட இயந்திரத்தை மலை மேட்டில் இழுக்க புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து இதற்கான நவீன இயந்திரமும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இன்னும் 5 நாட்களில் தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.