Sunday, September 1, 2024
Home » லாபகரமான இறால் வளர்ப்புக்கு பண்ணை அமைப்பே முக்கியம்!

லாபகரமான இறால் வளர்ப்புக்கு பண்ணை அமைப்பே முக்கியம்!

by Porselvi

இந்தியாவில் நெல் உற்பத்திக்கு இணையாக இறால் வளர்ப்புத் தொழில் கருதப்படுகிறது. அந்தளவுக்கு விவசாயிகளுக்கு நிச்சய லாபம் தரும் தொழிலாக இறால் வளர்ப்பு விளங்குகிறது. இந்தியாவில் ஆந்திர மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. நன்னீர் மற்றும் உவர்நீர் இறால் வளர்ப்பு முறைகள் தமிழ்நாட்டில் பரவலாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதிலும் இப்போது வனாமி ரக இறால்கள் அதிகளவில் பண்ணை அமைத்து வளர்க்கப்படுகின்றன. இந்த ரக இறால்களை நன்னீரிலும், உவர்நீரிலும் வளர்க்கலாம். இந்த ரக இறால்களை வளர்த்து, குறிப்பிடத்தகுந்த அளவில் லாபம் பெற, இடத்தேர்வு மற்றும் பண்ணை அமைப்பு மிகவும் முக்கியம் என்கிறார் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கடல்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சிப் பண்ணை வசதி பிரிவு உதவிப் பேராசிரியரும், தலைவருமான டாக்டர் விஜய் அமிர்தராஜ். தொழில் முறையில் இறால் வளர்ப்பை மேற்கொள்வோர் பின்பற்ற வேண்டிய முறைகள் மற்றும் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து அவர் நம்மிடையே விளக்கமாக பகிர்ந்துகொண்டார். `இறால் வளர்ப்புக்கு ஆண்டு முழுவதும் தரமான மற்றும் குறையாத நீர் வசதிகொண்ட இடத்தினைத் தேர்வு செய்வது அவசியம். மேலும் நீர் கடல்நீராகவோ அல்லது கழிமுகத்து நீராக இருத்தல் வேண்டும். நீர்க்காரணிகள் மற்றும் வேதிப் பொருட்களின் அளவு இறால் வளர்ப்புக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.நீரில் கார அமிலத் தன்மை 7.5 – 8.5 ஆகவும், உப்புத்தன்மை 0.5 – 35 பிபிடி ஆகவும், அமோனியா 0.01 பிபிஎம் ஆகவும் இருத்தல் வேண்டும். தொழிற்சாலை கழிவுகள், விவசாய மற்றும் நகர்ப்புற கழிவுகளால் மாசுபடும் நீர் ஆதாரங்களைத் தவிர்க்க வேண்டும்.

நிலத்தின் தன்மை

நீர் தேங்கி நிற்கக்கூடிய களிமண் அல்லது மணல் கலந்த களிமண் பூமி இறால் வளர்ப்பிற்கு உகந்தது. இறால் வளர்ப்பை மண் குளங்களிலேயே மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இறால்கள் தங்களுக்குத் தேவையான சத்துக்களை குளத்து மண்ணில் இருந்தே பெற்றுக்கொள்கின்றன. இறால் வளர்ப்புக்குத் தேர்வு செய்யப்படும் மண்ணின் தன்மை அமிலத்தன்மை கொண்டு இருக்கக்கூடாது. மண்ணின் கார அமில அளவானது 7.5 முதல் 8.5க்குள் இருக்க வேண்டும்.

வடிவமைப்பு

பண்ணை அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கும் இடம், கரடு முரடான பாறைகள் இன்றி, மேடு பள்ளங்கள், குன்றுகள், முட்செடிகள் மற்றும் அடர்ந்த காடுகள் இல்லாமல் இருக்க வேண்டும். புயல் மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும் தாழ்வான ஆற்று முகத்துவாரப் பகுதிகள் மற்றும் மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடத்தினை தேர்வு செய்யக்கூடாது. பொதுவாக காற்று அதிகம் வீசும் இடங்களில், குளங்கள் மண்ணினால் நிரப்பப்பட்டு தூர்ந்துபோகும் நிலை உள்ளது. மேலும் அதிகமாக காற்று வீசும் இடங்களில் குளத்துநீர் கலங்கி இறால் வளர்ச்சிக்கு பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளது. வருடத்திற்கு ஏறத்தாழ 1000 மி.மீ முதல் 1500 மி.மீ மழை பெறும் பகுதிகள் இறால் வளர்ப்புக்கு ஏற்றவை. இறால் வளர்ப்புக்கு இதர வசதிகளாக சாலை வசதி, மின் வசதி மற்றும் பதனிடும் வசதி கொண்ட இடத்தினைத் தேர்வு செய்வது நன்று.

மின்சார இணைப்பு வசதி

பண்ணைகளை இயக்குவதற்கு மின்வசதி அவசியம். எனவே மின்சார இணைப்பு பெறும் வசதி கொண்ட இடங்களில் பண்ணைகளை அமைப்பது நல்லது. இதனால் பண்ணையின்
மின்சாரத் தேவைகளைக் குறைந்த செலவில் பூர்த்தி செய்துகொள்ளலாம்.

வழித்தட வசதி

பண்ணைக்கு இடுபொருட்கள் கொண்டு செல்வதற்கும், அறுவடை செய்த இறால்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லவும், வாகனங்கள் சென்று வரும் வகையில் போதுமான சாலை வசதி வேண்டும். எனவே பண்ணை அமைக்கும் இடங்களில் இத்தகைய வாய்ப்பு வசதிகள் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து அமைக்க வேண்டும்.

பண்ணை அமைப்பு மற்றும் கட்டுமானம்

நீர் வாழ் உயிரினங்கள் அறிவியல் முறையில் வளர்க்கப்படும்போது அவற்றுக்குக் குளம் இன்றியமையாதது ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட குளங்களையும் தொடர்புடைய வசதிகளையும் கொண்ட ஒரு தொகுப்பான அமைப்பே பண்ணையாகும். இறால் பண்ணையில் வரப்பு மற்றும் அதைச்சார்ந்த பகுதிகள், உள்வாய் (நீரினை குளத்தில் நிரப்ப), வெளிவாய் (நீரினை குளத்தில் இருந்து வெளியேற்ற), மடைகள், நீர்வரும் வாய்க்கால், நீர் வெளியேறும் வடிகால், நாற்றங்கால் குளம், வளர்ப்புக்குளம், உற்பத்திக்குளம், உணவு சேமிப்பறை, பண்ணைக் கருவிகள் வைப்புக்கிடங்கு, ஆய்வுக்கூடம், பணியாட்கள் அறை என அனைத்தும் ஒரு பண்ணையில் இடம் பெற வேண்டும். இதன் அடிப்படையில் அமையும் ஒரு பண்ணையை, அனைத்து வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்ற வளர்ப்பிடம் எனக் கூறலாம்.

பரப்பளவு மற்றும்
குளம் அமைத்தல்

இறால் வளர்ப்புக் குளங்களை செவ்வக வடிவில் 2 முதல் 2.5 மீட்டர் ஆழம் கொண்டவையாக, 0.5 – 1 ஹெக்டேர் பரப்பளவு கொண்டவையாக அமைத்துக் கொள்ளலாம். குளத்தின் தரைப்பகுதி நீர் வெளியேற்றப்படும் வடிகாலை நோக்கி 1:100 முதல் 1:1000 விகிதாச்சாரம் வரை சாய்தளம் கொண்டதாக இருக்க வேண்டும். சிறிய குளங்களுக்கு அதிகமான விகிதாச்சாரத்திலும் பெரிய குளங்களுக்கு குறைவான விகிதாச்சாரத்திலும் சாய் தளம் அமைத்துக்கொள்ளலாம். குளத்தின் உள்பக்கக் கரைகளில் மண்ணின் தன்மையைப் பொறுத்து 2-3:1 என்ற விகிதத்திலும் வெளிப்புறக் கரைகளில் 2:1 என்ற விகிதத்திலும் சாய்வு தளம் இருக்குமாறு அமைத்துக்கொள்ளலாம். பொதுவாக குளத்தின் நீள அகல விகிதாச்சாரம் 2:1 என்ற அளவில் இருப்பது நல்லது. குளக்கரைகளில் முகட்டு சுமார் 1.5 – 2 மீ அகலம் கொண்டவையாக இருக்க வேண்டும்

நீரேற்றும் அமைப்பு

பண்ணைக்குத் தேவையான நீரை உறிஞ்சி எடுக்கும் நீரேற்று நிலையத்தை கழிமுகத்தின் கரையிலோ அல்லது கடலோரங்களிலோ அமைக்கலாம். நீர் ஆதாரத்தை அடைய இடையூறுகள் இருப்பின் வாய்க்கால் மூலமோ அல்லது குழாய்களை சற்று சேற்றில் புதைத்தோ, பண்ணைக்கு நீர் கொண்டு வரவேண்டும். நல்ல தரமான நீர் கிடைக்கும் இடத்தில் நீர் இறைக்கும் இயந்திரத்தை நிறுவவேண்டும். நீரை உறிஞ்சும் குழாயில் பொருத்தப்பட்டுள்ள வால்வு தண்ணீரின் மிக ஆழமான பகுதியில் உள்ளது போன்று பொருத்தப்படவேண்டும். நீர் ஆதாரத்தில் இருந்து பம்புகள் மூலம் எடுக்கும் நீரை, குழாய்கள் வழியாகவோ அல்லது சிறு கால்வாய்கள் வழியாகவோ குளங்களுக்கு பாய்ச்சலாம். பாய்ச்சக்கால்களில் நீர் இறங்கி ஓடும் வாக்கில் அவற்றை அமைக்கவேண்டும்.

நீர் வடியும் வசதி

குளங்களை அமைக்கும்போது அவற்றில் உள்ள நீரை வடிய வைக்கும் அமைப்பு கொண்டவையாக அமைக்க வேண்டும். நீரை வடிக்கும் அமைப்பு கொண்ட குளங்கள் பெரும்பாலும் பரப்பளவில் சிறியவையாகவே இருக்கும். நீரின் ஆழத்தை கட்டுப்படுத்துவதற்கும் ஏதுவான நிலையில் நீரை எளிதாக வடிக்கும் விதத்தில் குளங்களை அமைத்துக்கொள்வது நல்லது. வடிக்கும் வசதி கொண்ட குளங்களில் உரமிடுதல், உணவிடுதல், கூடுதல் காற்றேற்றும் வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை சிரமமின்றி மேற்கொண்டு தீவிர முறையில் இறால்களை வளர்க்கலாம்.

நீர் சேமிப்பு மற்றும் வழங்கல்

சேமித்த நீரைப் பிரித்து குளங்களுக்கு வழங்க வாய்க்கால்கள் அல்லது குழாய்களை பயன்படுத்தலாம். குழாய்களை விட தண்ணீரைக் கொண்டு செல்வதற்கு வாய்க்கால்கள் அமைப்பது சிறந்தது. நீரேற்று நிலையம் மூலம் பெறப்படும் நீரைக் குளங்களில் தேக்கி வைத்து பயன்படுத்தினால் இறால் வளர்ப்புக்கு அது உகந்ததாக இருக்கும். குழாய்களை நிறுவும்போது குளங்களின் நீர் எல்லைக்கு மேல் குழாய் உள்ளபடியாக பொருத்தவேண்டும். இம்முறை, குழாய்களுக்கு அருகிலுள்ள வலை காய்ந்த நிலையில் இருக்க உதவும். குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள், வாய்க்கால்கள் குறைந்தது நொடிக்கு 100 லிட்டர் அளவில் தண்ணீரைக் கொண்டு செல்லும் வகையில் இருத்தல் வேண்டும்.

வடிகால் மற்றும் சாலை வசதிகள்

இறால் குளங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர், மற்றும் மழைக்காலங் களில் வெளியேற்றப்படும் நீரை முழுமையாக எடுத்துச் செல்லும் கொள்ளளவு கொண்டவையாக வாய்க்கால்கள் வடிவமைக்கப்பட வேண்டும். குளங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சீர் செய்வதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள குளங்களில் விட்டு, கிருமி அகற்றம் செய்யப்பட்ட பின்னரே, பண்ணையை விட்டு வெளியேற்ற வேண்டும். குளத்து நீர் வெளியேறும் இடத்தில் நீரோடு இறால்கள் வெளியேறுவதைத் தடுக்க மீன் வலையால் ஆன கூண்டு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

மாசுநீர் சுத்திகரிப்பு,
மறு சுழற்சி மற்றும்
உயிரியல் சீர்திருத்தம்

இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் மாசுபடிந்த நீரில் துகள்கள், உயிர்ப்பொருள் திடக்கழிவு போன்றவை நிறைந்திருக்கும். எனவே அவற்றிலுள்ள மிகுதியான கழிவுகள் மற்றும் சத்துக்களை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். இறால் பண்ணையிலிருந்து வெளியேறும் மாசுபடிந்த நீரை சுத்திகரிப்பது பற்றி பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. நீரை ஓட்ட முறையிலும், மறுசுழற்சி மற்றும் உயிர்மாற்றம் செய்தும், நீரை வடிகட்டியும் சுத்திகரித்து வெளியேற்றலாம். இறால் பண்ணைகளிலிருந்து வெளியேறும் நீரைத் தேக்கி, அதிலுள்ள திடக்கழிவுகள், மற்றும் துகள்களை நீக்கியும் நீரை சுத்திகரிக்கலாம். அல்லது தேக்கிய குளங்களில் பொருத்தமான பிற மீன் இனங்கள், கடல்பாசிகள், மெல்லுடலிகளை வளர்த்து, குளத்தில் உள்ள உரச்சத்துக்களை குறைத்தும் நீரை வெளியேற்றலாம். மாசுபட்ட நீரைத் தேக்க குறைந்தது பண்ணையின் பரப்பில் 30 சதவீத இடத்தை ஒதுக்குவது நல்லது.

குள அமைப்பு

பண்ணையானது பல குளங்களைக் கொண்டதாக இருக்கும். பண்ணையில் உள்ள இடத்தை நல்ல முறையில் பயன்படுத்த குளங்களை சீரிய முறையில் அமைத்தல் வேண்டும். நீரைக் கால்வாய்களில் கொண்டு செல்லவும், இறால் மற்றும் தீவனத்தை நல்ல முறையில் கையாளவும், கரையுள்ள குளங்களை பயன்படுத்தும்போது, குளங்களின் அமைப்பு மிக முக்கியம். பண்ணையிலுள்ள இடத்தின் பயன்பாட்டை பொருத்த வரையில் செவ்வக வடிவிலான குளங்களே சிறந்தவை. இந்த பண்ணைக் குட்டைகள் அமைப்பு என்பது நன்னீர் மற்றும் உவர்நீர் இறால் வளர்ப்பு ஆகிய இரு பண்ணைகளுக்குமே பொருந்தும். இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றி பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டால் இறால் வளர்ப்பு என்பது மிகுந்த லாபகரமான தொழிலாக அமையும் என்பது உறுதி’’ என்கிறார்.
தொடர்புக்கு:
டாக்டர் விஜய் அமிர்தராஜ்:
99944 50248.

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi