Thursday, May 16, 2024
Home » எடப்பாடி கொடுத்த ‘சீக்ரெட் சிக்னல்’ தேர்தலுக்கு பின் அதிமுகவில் சசிகலா? டிடிவி, ஓபிஎஸ்சுக்கு கல்தா

எடப்பாடி கொடுத்த ‘சீக்ரெட் சிக்னல்’ தேர்தலுக்கு பின் அதிமுகவில் சசிகலா? டிடிவி, ஓபிஎஸ்சுக்கு கல்தா

by Karthik Yash

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே உள்ளார். சசிகலாவுடன் இணைந்து செயல்பட தயார் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார். சசிகலாவை சந்திக்கவும் ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். ஆனால் இதுவரை அவரை சசிகலா சந்திக்கவில்லை. மக்களவை தேர்தலில் டிடிவி.தினகரன் தேனியிலும், ஓபிஎஸ் ராமநாதபுரத்திலும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சசிகலா பிரசாரத்துக்கும் செல்லவில்லை. சசிகலா சைலன்ட் மோடில் இருப்பது அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அதிமுகவினரையும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதுபற்றி சசிகலா வட்டாரத்தில் விசாரித்த போது, ‘ஒருங்கிணைந்த அதிமுக என்பது தான் சசிகலாவின் எண்ணம். அது இப்போதைக்கு வாய்ப்பில்லை. தினகரனும் துரோகம் செய்து விட்டார். ஓபிஎஸ் தனி மரமாகி விட்டார். எனவே எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் ஐக்கியமாக சசிகலா முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சசிகலா தரப்பு, எடப்பாடி தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாம். அப்போது சசிகலா கட்சிக்குள் வந்தால் அவரது ஆதரவாளர்கள் மாஜி அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களிடம் மீண்டும் வசூல் வேட்டையை ஆரம்பித்து விடுவார்கள். இது கட்சிக்கு நல்லதல்ல என்று எடப்பாடியிடம் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

சசிகலா தரப்பினர் வசூல் வேட்டையில் இறங்காமல் பார்த்துக்கொள்வோம். இதுதொடர்பாக சசிகலாவிடம் பேசி விடலாம் என்று எடப்பாடி, அவர்களை சமாதானப்படுத்தினாராம். அதன்படியே சசிகலாவிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். கூவத்தூரில் சசிகலா காலில் எடப்பாடி விழுந்த விவகாரம் பிரசாரத்தில் எதிரொலித்தது. இதுபற்றி விளக்கம் அளித்த எடப்பாடி, வயதானவரின் காலில் விழுந்தது என்ன தப்பு. நான் என்ன 3வது மனுசன் காலிலா விழுந்தேன் என்று கூறியிருந்தார். எடப்பாடியின் இந்த விளக்கம், சசிகலா தரப்புக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இது சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கான மறைமுக சிக்னல் என்றும் பேசப்படுகிறது.

சசிகலாவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் 2026 தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணையும் என்று கூறியிருந்தார். எனவே மக்களவை தேர்தலுக்கு பின் சசிகலா, எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் ஐக்கியமாக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் ஓபிஎஸ், டிடிவி.தினகரனை அதிமுகவில் சேர்ப்பதில்லை என்பதில் எடப்பாடி உறுதியாகி உள்ளாராம்’ என்றனர். ‘சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்திடலாம் என்று கூறுவார்கள்’. அதன்படி சசிகலாவிடமே சரண்டர் ஆகிவிடலாம் என்று எடப்பாடி எண்ணுவதாக கூறப்படுகிறது. காரணம், டெல்டா, தென் மாவட்டங்களில் எடப்பாடிக்கு எதிர்ப்பு நிலவுகிறது. இதை சரி கட்ட சசிகலா தயவு எடப்பாடிக்கு தேவைப்படுகிறது. அதே நேரத்தில் பாஜவையும் எதிர்க்க வேண்டுமென்றால் ஒருங்கிணைந்த அதிமுக எடப்பாடிக்கு தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டே சசிகலாவுக்கு எடப்பாடி மறைமுக சிக்னல் கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

* நடத்தை விதிகளை மீறி பெரியார் பல்கலை. இணையதளத்தில் பிரதமர் விளம்பரம்
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசு அலுவலகங்கள், பொதுவெளிகளில் இருந்த அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், விளம்பரங்கள், நலத்திட்டம் குறித்த கல்வெட்டுகள் முழுமையாக மறைக்கப்பட்டன. அரசின் சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடுதல், பணிகளை தொடங்குதல் மற்றும் நலத்திட்டங்களை வழங்க தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக இணையதளத்தில் பிரதமர் மோடியின் விளம்பரம் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன் கூறுகையில், ‘‘தேர்தல் நடத்தைவிதிகளை மீறி பெரியார் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில், பிரதமர் மோடியின் விளம்பரம் இன்னமும் இடம்பெற்றுள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும். இதற்காக பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்க உள்ளோம்,’’ என்றார்.

* மதுவிலக்கு பேசிய அன்புமணி போதையில் நெருங்கிய தொண்டர்: பாமக கூட்டத்தில் அலப்பறை; பாஜவுடன் கூட்டணியால் ஆட்கள் வரல…
அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் பாலுவை ஆதரித்து காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது மதுவுக்கு எதிரான கொள்கை கொண்ட கட்சி பாமக. தமிழத்தில் 2,211 டாஸ்மாக் கடைகளை மூடியவர் தான் வேட்பாளர் என்று முழங்கியபடி இருந்தார். அப்போது, திடீரென மேடையில் ஏறிய பாமக தொண்டர் ஒருவர் மதுபோதையில் தள்ளாடிய படி அன்புமணியிடம் தலைவர் வாழ்க தலைவர் வாழ்க என கூறிக் கொண்டே செல்ல முயன்றார். அங்கு இருந்த அன்புமணியின் பாதுகாவலர் அவரை மடக்கி பிடித்தார்.

பின்னர் அவரை மேடையில் இருந்து கீழே இறக்கினர். மேடைக்கு மேடை மதுவுக்கு எதிராக பேசி வரும் பாமகவினர், முதலில் அவர்களின் கட்சியினரை மதுவில் இருந்து விடுவிக்க வழிவகை செய்யட்டும். அதற்பிறகு நாட்டில் இருந்து மதுஒழிப்பை பற்றி பேச வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் கிண்டலடித்தனர். முன்பு எல்லாம் பாமக தொண்டர்கள் புடைசூழ அன்புமணி பேசுவார். ஆனால் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதால் கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தற்போது பாஜவுடன் கூட்டணி வைத்து உள்ளதால் பலரும் பாமகவை கேலி செய்தும், கிண்டலடித்தும் சமூக வலைதளங்களிலும் பதிவு போடுவதாலும், கட்சியிலிருந்து வெளியேறியும், கட்சியே வேண்டாம் என்றும் தொண்டர்கள் ஒதுங்கி இருந்து வருகின்றனர். இதனால் காட்பாடி பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசும்போதும் சேர்கள் காலியாக கிடந்தது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அன்புமணி பேசினார். ஆங்காங்கே இருந்த தொண்டர்களிலும் சிலர் மதுபோதையில் சேரில் அமர்ந்தபடியே தூங்கிக் கொண்டு இருந்தனர். இதனால் பாமக நடத்துவது பொதுக்கூட்டமா? அல்லது தெருமுனை பிரசார கூட்டமா? என்று அந்த வழியாக சென்றவர்கள் பேசிக் கொண்டனர்.

* அம்மா இப்போ இல்லையே… கண்கலங்கிய ஜோதிமணி: மனதை கரைய வைத்த பிரசார மேடை
கரூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது சொந்த ஊரான பரமத்தி ஒன்றியம் சின்ன திருமங்கலத்தில் ஓட்டு கேட்டு பேசினார். அப்போது, ‘நீங்கல்லாம் கை சின்னத்தில் ஓட்டு போடுங்க என கேட்க வேண்டியது இல்லை. இது நம்ம ஊரு.மொத்தம் 4 வருஷம் 9 மாதம் 24 நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். பல சமயங்களில் ராத்திரியில்தான் நம்ம ஊருக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு பணிச்சுமை இருக்கும். பட் அம்மா இருந்தாங்கன்னா…, (உதட்டை கடித்து, கண்ணை மூடி அழுகையை அடக்குகிறார்) எதுவும் தெரிஞ்சிருக்காது. இவ்வளவு நாளா நீங்கதான் என்னோட குடும்பமா இருந்திருக்கீங்க. உங்க எல்லாருக்கும் நன்றி,’ என பேச்சை முடித்துக்கொண்டு கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே பிரசார வாகனத்தில் இருந்து இறங்கிவிட்டார். இதை பார்த்து சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள் அழாதம்மா…. நாங்க எல்லாருமே உனக்கு அம்மாதான்…. என ஆறுதல் கூறியது காண்போர் மனதை கரையச் செய்வதாக இருந்தது.

You may also like

Leave a Comment

six − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi