புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான். இவரது மனைவி ஆயிஷா முகர்ஜி. தன்னைவிட 10 வயது மூத்த ஆயிஷாவை ஷிகர் தவான் 2012ம் ஆண்டு நவம்பர் 30ல் திருமணம் செய்தார். இருவர் இடையே பிரச்னை ஏற்பட்டதால் டெல்லி குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு ஷிகர் தவான் மனுத்தாக்கல் செய்தார். இதை ஏற்று நீதிமன்றம் நேற்று விவாகரத்து வழங்கியது.
இதுகுறித்து நீதிபதி ஹரிஷ் குமாரின் தீர்ப்பில், ‘ 2020 ஆகஸ்ட் 8 முதல் அவர்கள் கணவன்-மனைவியாக வாழவில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஷிகர் தவானுக்கு மனைவி ஆயிஷா மெண்டல் டார்ச்சர் கொடுத்தது உறுதியாகிவிட்டதால், இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது. மேலும் ஆயிஷா முகர்ஜி, மகனை அடிக்கடி இந்தியா கூட்டி வந்து ஷிகர் தவானுக்கு காட்ட வேண்டும். வீடியோ காலில் தனது மகனுடன் உரையாடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.