புதுடெல்லி: நாடு முழுவதும் மருத்துவ மேல்படிப்பு படிப்பவர்களுக்கு பிஜி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒன்றிய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்ட அறிக்கையில், நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதாக திடீரென அறிவித்தது. இந்நிலையில், @nishant3858 என்ற டிவிட்டர் பதிவர் வெளியிட்ட பதிவில், ‘ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவின் மகள் திஷா மாண்டவியா, முதுகலை 2023 நீட் தேர்வில் வெறும் 160 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 291 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததால், அவரால் முதுகலை மருத்துவப் படிப்பில் சேரமுடியவில்லை. அதனால் நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதால், அவரால் முதுகலை படிப்பில் சேர முடியும். இதற்கான முரண்பாட்டைத் தெளிவுபடுத்துங்கள்’ என்று கூறியுள்ளார். மேலும் மற்றொரு பதிவில், ‘தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் அமைச்சரின் மகள் சேர்ந்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஒன்றிய அரசின் தரப்பில் எவ்வித விளக்கமும் தரவில்லை.