சென்னை: டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெங்கு நோய் பாதிப்பை எவ்வாறு கையாளவேண்டும், சிகிச்சை எவ்வாறு வழங்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் (குறிப்புகளை) உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை, வெயில் என நிலையில்லாமல் வானிலை இருந்து வருவதால் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைவலி, காய்ச்சல், சளி, இருமல், உடல்வலியுடன் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலும் பொதுமக்களை மிரட்டி வருகிறது.
செப்டம்பர் மாதம் தொடக்கத்திலிருந்தே வெயில், மழை என மாறி மாறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வானிலை நிலவரம் இருப்பதால் கொசுப்புழு உற்பத்தி அதிகரித்திருப்பதாக தெரிய வருகிறது. இதனால் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெங்கு நோய் பாதிப்பை எவ்வாறு கையாளவேண்டும், அறிகுறி என்ன, சிகிச்சை எவ்வாறு வழங்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் (குறிப்புகளை) உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, டெங்கு பாதிப்பு இருந்தால் காய்ச்சல், வயிற்று வலி, தொடர்ந்து வாந்தி, சளி, ரத்தப்போக்கு, சோம்பல், அமைதியின்மை, கல்லீரல் வீக்கம், ரத்த வெள்ளை அணுக் குறைவு உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்ட உடன் பரிசோதனை செய்யப்பட வேண்டும். பரிசோதனை டெங்கு இல்லை என்று தெரியவந்தால் பாராசிட்டமல் மாத்திரை எடுத்துக்கொண்டு நன்றாக ஓய்வு எடுக்கவேண்டும். பரிசோதனையில் டெங்கு பாதிப்பு என்றால் உடனடியாக மருத்துவமனையை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் காய்ச்சல் வெப்பநிலை, உட்கொள்ளும் திரவ அளவு, சிறுநீரக அளவு, வெள்ளை அணுக்கள் உள்ளிட்டவை தொடர்ந்து கண்கணிக்க வேண்டும். பரிசோதனையில் டெங்கு கடுமையாக பாதிக்கப்பட்டால் சுவாசக் கோளாறு, கடுமையான ரத்தப்போக்கு, கடுமையான உடல் உறுப்பு குறைபாடு உள்ளிட பிரச்னை உண்டாகும். எனவே தாமதிக்காமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்க வேண்டும். இதுபோன்று பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பின்பற்ற என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.