
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.எஸ்.வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட பொருளாளர் சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பயிர்கடன் வழங்கும்போது உள்ள பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு, சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர் மேல் எடுக்கும் அடுத்த நடவடிக்கைகளும் முழுமையாக விளக்கி கொள்ளப்பட வேண்டும்.
கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்ட பயிர்கடன், நகைகடன், மகளிர் சுயஉதவிக் குழு கடன்கள் அனைத்திற்கும் உரிய தொகையை வட்டி இழப்பின் அனைத்து சங்கங்களுக்கும், வரவு வைக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை தலைவர்கள் சிவஞானம், கண்ணபிரான், இணை செயலாளர் சந்தானகிருஷ்ணன், மண்டல இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.