Tuesday, May 28, 2024
Home » டெல்டா உரிமைகளை திமுக அரசு விட்டுக்கொடுக்காது: தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

டெல்டா உரிமைகளை திமுக அரசு விட்டுக்கொடுக்காது: தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

by Karthik Yash

திருச்சி: ‘டெல்டா உரிமைகளை திமுக அரசு விட்டுக்கொடுக்காது’ என்று தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி பாசன பகுதியில் உள்ள கால்வாய்களை தூர் வாருவதற்காக 2021-22ம் ஆண்டில் 62 கோடியே 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3859கி.மீ நீளம் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. மேட்டூரில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நாளான ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் விளைவாக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் இருந்து வரலாற்று சாதனையை நாம் எட்டினோம். 4 லட்சத்து 90ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும், 13 லட்சத்து 341 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் செய்தோம். அதில் 39 லட்சத்து 73ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தோம்.

அதை சாதனை என்று சொல்வதைவிட வேளாண் புரட்சி நடந்தது என்றே சொல்லலாம். தொடர்ச்சியாக 2022-23 ம் ஆண்டில் வரவு செலவு திட்டத்தில் காவிரி பாசன பகுதியில் தூர்வாருவதற்காக 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடைமடை வரை தண்ணீர் சென்றடையும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற்றது. மேட்டூர் அணை மிகச்சீக்கிரமாக மே மாதம் 24 ஆம் தேதி முன்கூட்டியே திறக்கப்பட்டது. தண்ணீர் வந்து சேருவதற்கு முன்பே 4964கி.மீ தூரத்திற்கு கால்வாய்கள் அனைத்தும் முழுமையாக தூர்வாரப்பட்டது. உழவர்களுக்கான இடுபொருள்கள், கூட்டுறவு கடன்கள் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. 2021-22ம் ஆண்டு சாதனையை முறியடிக்கும் வகையில், 2022-23 ஆம் ஆண்டில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி, 13 லட்சத்து 53 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும், செய்யப்பட்டது.

இதன்மூலம் 41 லட்சத்து 45ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தாண்டும் வேளாண் புரட்சி தொடர்ச்சியாக நடைபெற்றது. தூர்வாரும் பணிகளை செய்வதற்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 4773 கி.மீ நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டன. 96 சதவீத பணிகள் முடிவடைந்தது. அதேபோல் வேளாண் பொறியியல் துறை மூலம் 5 கோடி செலவில் 1146கி.மீ தூரத்திற்கு கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில் 651கி.மீ தூரமுள்ள பணிகள் முடிவடைந்தது. எஞ்சியுள்ள 45 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்படும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் 27 கோடியே 17 லட்சம் செலவில் 1433 கி.மீ சிறிய கால்வாய்களை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. 8 கோடியே 13 லட்சம் செலவில் 25 வகையான குளம், குட்டைகள் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் மேட்டூர் அணையில் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. நான் மேட்டூர் சென்று டெல்டா பாசனத்திற்காக அணையை திறந்து வைக்க உள்ளேன். மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக டெல்டா பகுதிக்கு வந்து சேருவதற்கு முன்பே அனைத்து தூர்வாரும் பணிகளும் முடிக்கப்படும். வீட்டு இணைப்பு பொறுத்தவரை மின் கட்டணம் உயர்த்தப்படாது. அனைத்து மின்சார இலவச சலுகைகளும் தொடரும், வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார சலுகைகளும் அப்படியே தொடரும். ஒன்றிய அரசின் விதிமுறைப்படி 4.7 சதவீத கட்டணம் அதிகரிக்க வேண்டும். ஆனால் 2.18 சதவீதமாக குறைத்து அந்த தொகையும், மானியமாக தமிழக அரசு ஏற்றுக்கொண்டு மின்வாரியத்திற்கு தருவதற்காக அரசு உத்தரவிட்டுள்ளது.
வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் 13 பைசாவில் இருந்து 21 பைசா வரை உயர்வு இருக்கும். மற்ற மாநிலங்களில் இதைவிட அதிக மின் கட்டணம் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் செங்குத்தாக மின்கட்டணத்தை உயர்த்தினார்கள். மின்வாரியத்தை கடனில் மூழ்கடித்துவிட்டு சென்றனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உதய் திட்டத்தில் கையெழுத்திட்டது அதிமுக ஆட்சி. இவ்வாறு முதல்வர் கூறினார்.

* சென்னை பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயர்
சென்னை பல்கலைக்கழகத்திற்கு கலைஞரின் பெயர் சூட்டப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், ‘சென்னை பல்கலைக்கழகத்திற்கு கலைஞரின் பெயர் சூட்டப்படுவது குறித்து நிச்சயமாக பரிசீலிக்கப்படும். ஏற்கனவே இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயர் வைக்கலாமா. அல்லது புதிதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு பெயர் வைக்கலாமா என்பது குறித்து பரிசீலித்து யோசித்து முடிவு செய்வோம்’ என்றார்.

You may also like

Leave a Comment

2 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi