டெல்லி : டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் அழைப்பு விடுத்துள்ளார். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது போக்சோ சட்டத்தில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரை கைது செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் 2 மாதங்களாக தொடர் போராட்டங்களை செய்து வருகின்றனர்.
இதனிடையே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஜ்ரங் புனியா, அந்த சந்திப்பு குறித்து வெளியில் எதுவும் பேசக்கூடாது என்று தங்களிடம் தெரிவித்துவிட்டு, அரசு தரப்பிலேயே தகவல் கசியவிடப்பட்டதாக குற்றம் சாட்டினார். தாங்கள் பணிக்கு திரும்ப உள்ளதாக செய்திகள் வெளியானதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் புகார் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா உறுதி அளித்ததாகவும் பஜ்ரங் புனியா தெரிவித்தார்.
இதனிடையே பிரஜ் பூஷண் சரண் சிங்கிடம் டெல்லி போலீசார் 2 முறை விசாரணை நடத்தியதாகவும் வழக்கு தொடர்பாக 200 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மல்யுத்த வீரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அழைப்பை ஏற்று இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.