Wednesday, June 5, 2024
Home » கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

எனக்கு 50 வயதாகிறது. இரு வருடங்களுக்கு முன்பு குடல் இறக்கத்தால் அவதிப்பட்டேன். இதனால் அறுவைசிகிச்சை செய்தார்கள். மருந்துகள் எல்லாம் சரியாகவே எடுத்துவருகிறேன். ஆனாலும் தற்போது, அவ்விடத்தில் வலி இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன?

– ரா.ஸ்டீபன், திருப்பரங்குன்றம்.

நெஞ்சுச் சளி, மலச்சிக்கல், இருமல், அதிக வலுவைத் தூக்குதல் போன்ற காரணங்களால் குடல் இறக்கம் ஏற்படுகிறது. இரு வருடங்களுக்கு முன்புதான் அறுவைசிகிச்சை செய்திருக்கிறார்கள் என்கிறீர்கள். இதனால், உங்களுக்குக் குடலில் வலை வைத்து அறுவைசிகிச்சை செய்யவில்லை என நினைக்கிறேன். வலைவைக்காத சாதாரண அறுவைசிகிச்சையே பலருக்குப் போதுமானதாக இருக்கிறது. கடுமையான வலி குடலிறக்கத்துக்கான அறிகுறி.

அவசியம் எனில் மீண்டும் அறுவைசிகிச்சை செய்து குடல் இறங்காதபடி வலைவைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். குடல் சரிவு முற்றினால் விதைப்பை அருகே சென்றுவிடும். அப்போது வலி கடுமையாக இருக்கும். சிறுநீர் கழிக்கச் சிரமமாக இருக்கும். இவர்கள் கடுமையான வேலை செய்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

எனக்கு 70 வயதாகிறது. பேஸ் மேக்கர் வைக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். பேஸ் மேக்கர் என்பது என்ன? அதை வைப்பதால் இதயம் எப்படிச் செயல்படும்?
– சி.ராமசுப்பு, ஒரத்தநாடு.

இருதயமானது தசையும் நாணும் இணைந்த ஓர் உறுப்பு, அதில் நான்கு அறைகள், ரத்த ஓட்டம் அந்த நாலு அறை (Chambers) வழியாகவும் செல்லுவதை ஒரு வழிப்படுத்துவதற்கு என்று சாதனங்கள், வால்வ், (Valves) உண்டு. இரண்டு ஏட்ரியம் (Atrium) மற்றும் இரண்டு வென்ட்ரிகிள் (Ventricle) என்ற அறைகள் கொண்டது நம் இதயம். இவை முறையே வலப்புற ஏட்ரியம் (Right Atrium) வலப்புற வென்ட்ரிகிள் (Right Ventricle) மற்றும் இடது ஏட்ரியம் (Left Atrium) மற்றும் இடது வென்ட்ரிகிள் (Left Ventricle) எனப்படுகின்றன.

அசுத்த ரத்தம் உடலின் எல்லா உறுப்புக்களில் இருந்து இதயத்தை அடைந்து அங்கிருந்து நுரையீரலை அடைந்து சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் இதயத்தை அடைந்து ரத்தநாளங்கள் மூலமாக எல்லா உறுப்புகளையும் அடைய வேண்டும். இதயத்தின் தசைகள் ஒரு சேர இறுகி அழுத்தும்போது ரத்தமானது ஒருவழிப் பாதை மூலம் ஒரு அறையிலிருந்து மற்ற அறைக்குச் செல்லும். இவற்றில் இடது வென்ட்ரிகிள் மிகவும் முக்கியமானது. ஏன் என்றால் இது சுத்தப்படுத்தப்பட்ட ரத்தத்தை உடலுக்கு அனுப்பும்.

இதயத்தின் தசைகள் உடலின் மற்ற தசைகளைப் போல் அல்ல. அவை தானே துடிக்கும் தன்மையும் ஒரு சேர இறுகும் தன்மையும் கொண்டது. எந்தத் தசையும் வேலை செய்ய நரம்புத் தூண்டுதல் (Neural Stimulation) மிக அவசியம். இதயம் துடிக்க அதன் வடிவமைப்பிலேயே நரம்புகள் உள்ளன. இவை நம் உடலின் மற்ற நரம்புகளைப் போல் நமது மூளையின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்காதவை (Autonomous Nervous System). இந்த நரம்புகள் நமது இதயத்தைத் துடிக்கச் செய்யும். மேலும், இவை நமது இதயத்தின் அறைகளை ஒரு சீரான வேகத்துடன் உடலின் தேவைக்கு ஏற்பத் துடிக்கச் செய்யும்.

மேலும் ஏட்ரியம் மற்றும் வென்ட்ரிகிள் ஒன்றாக இறுகுவதில்லை, முதலில் ஏட்ரியம் இறுகும், அதைத் தொடர்ந்து வென்ட்ரிகிள் இறுகி ரத்தத்தை இருதயத்திலிருந்து வெளியே செலுத்தும். இதனை வால்வ் ஒருவழிப்படுத்தும். இருதயத்தின் நரம்புகள் இந்த அறைகள் இறுகிக் குறுகுவதைத் துவக்கி வைக்கும் (Stimulation and Initiation), மேலும் அவை ஒன்றன்பின் ஒன்றாகக் குறுகுவதை சீர்படுத்தும்.

இந்த நரம்பு அமைப்பைக் கண்டக்சன் பாதை (Conduction System) என்று அழைப்போம். இது வலப்புற ஏட்ரியம் அருகில் உள்ள சைனோ ஏட்ரியல் நோடில் (Sino atrial node) ஆரம்பித்து, ஏட்ரிய வென்ட்ரிகிள் தடத்தின் (Atrioventricular pathway) வழியே ஏட்ரிய வென்ட்ரிகிள் நோடை (Atrioventricular node) அடைந்து அங்கிருந்து வென்ட்ரிகிள் தடத்தின் (Ventricular pathway) வழியாக வென்ட்ரிகிளை அடைந்து அதைத் துடிக்கச் செய்யும்.

ஒவ்வொரு இருதயத் துடிப்பையும் சைனோ ஏட்ரியல் நோடில் ஆரம்பிக்கும் சிறிய மின்சாரத் துகள் (electrical impulse) துவக்கி வைக்கும். இந்தத் துகள் தடத்தில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு தசைகளைத் துடிக்கச் செய்து நம் இருதயத்தை இயங்க வைக்கும். சைனோ ஏட்ரியல் நோட். இதனால் இதயத்தின் பேஸ்மேக்கர் (pacemaker) என்றழைக்கப்படுகிறது. இந்தப் பாதையில் எந்த இடத்தில் ரத்து ஏற்பட்டாலும் இதயம் சரியாக இயங்காது. இதனை கண்டக்சன் ப்ளாக் (Conduction Block) என்று கூறுவோம். சரியான துவக்கம் இல்லாததால் நமது வென்ட்ரிகிள் குறைந்த வேகத்தில் துடிக்கும்.

இதனால் உடல் தளர்ச்சி, அசதி உண்டாகும். கண்டக்சன் ப்ளாக் (conduction block) மாரடைப்பு (Heart attack/ Myocardial infarction), வால்வுகளின் வியாதிகள் போன்றவற்றால் ஏற்படுகிறது. இருதயத் துடிப்பை 24 மணிநேரத்துக்கு இசீஜி மூலம் ஆராய்ந்து (24 hour ECG ) மிகக் குறுகிய வேகத்தில் அது துடிப்பது உறுதியானால் எக்ஸ்டெர்னல் பேஸ்மேக்கர் (pacemaker) பொருத்தப்படும். இந்தக் கருவி நம் இருதயம் துடிக்க வேண்டிய வேகத்தில் அதைத் துவக்கி இயங்க வைக்கும். இவற்றில் பல்வேறு விதங்கள் உண்டு, அவற்றைப் பற்றி மற்றுமொரு கட்டுரையில் பார்ப்போம்.

பேஸ்மேக்கர் பொருத்துவது இருதயத்தின் துடிப்பைச் சீர்படுத்தி, அதன் மூலம் இருதயத்தின் செயல்பாட்டினை, தன்மையோடு செயல்பட வைக்கும் நோக்கத்துடன் செய்யும் சிகிச்சையாகும். பேஸ்மேக்கர் பொருத்திக் கொண்டவர்கள் மாடி ஏறி இறங்குவதில் தவறு இல்லை. தொடர்ந்து அசதி, மூச்சு முட்டுவது இருந்தால் உங்கள் இருதயநல மருத்துவரை அணுகவும். ஏன் என்றால் பேஸ்மேக்கர் செக் தேவைப்படலாம்.

எனக்கு வயது முப்பது. இரு கண்களிலும் கீழ், இமை மற்றும் மேல் இமை நுனிகளில் அடிக்கடி கண்கட்டி வருகிறது. நாமக்கட்டியை அரைத்துப் பூசினால் சற்று சரியாகிறது. ஆனால் நிரந்தரத் தீர்வு இல்லை. சில நாட்கள் கழித்து மீண்டும் வருகிறது. எதனால் இப்படி அடிக்கடி கண்கட்டிகள் தோன்றுகின்றன?

– மா.ஜெயசீல ராஜன், ஈரோடு.

நமது கண்களின் இமைப் பகுதியில் சீபச் சுரப்பிகள் இருக்கின்றன. இச்சுரப்பிகளில் ஏற்படும் அடைப்பின் காரணமாக சீபம் சுரப்பது தடைப்பட்டு சிலருக்கு கட்டிகள் உருவாகின்றன. இமை முடிகள் முளைக்கும் ஜீஸ் என்ற சுரப்பியில் அடைப்புகள் ஏற்படுவதால் இக்கட்டிகள் உருவாகின்றன. கண் இமைகளின் நடுப்பகுதியில் உள்ள மெய்போமியன் சுரப்பியில் அடைப்பு ஏற்பட்டால் உட்புறத்தில் சிலருக்குக் கட்டிகள் ஏற்படும். பொதுவாக வெளிப்புறக் கட்டிகளில் காற்று படுவதாலும் கைகளால் அவை தொடப்படுவதாலும் தொற்றுகள் உருவாகி, சீழ் பிடித்து, வலி உருவாகும். உட்புறக் கட்டிகள் நாட்பட்டவையாக இருந்தாலும் அவற்றால் வலி இருக்காது.

சிலருக்கு மிதமான வலி இருக்கும். சிலருக்கு வலி அதிகமாக இருக்கும். இதற்கு காலை மாலை இரு வேளையும் ஐந்து நிமிடங்களுக்கு வெந்நீர் ஒத்தடம் தரலாம். கண்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. சர்க்கரை நோய் அதிகமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும் இருப்பவர்களுக்கு முதலில் கண்களில் தோன்றும் இக்கட்டிகள் முகத்தில் பிற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. கண்கட்டிக்கு நாமக்கட்டி இடுவது போன்ற சுயவைத்தியம் மட்டுமே செய்துகொண்டிராமல், அருகில் உள்ள வைத்தியரைப் பார்த்து நல்ல சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

You may also like

Leave a Comment

18 + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi