Tuesday, May 14, 2024
Home » வகுப்புவாத, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க 2024 தேர்தலில் பாஜ வீழ்த்தப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

வகுப்புவாத, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க 2024 தேர்தலில் பாஜ வீழ்த்தப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

by Mahaprabhu

சென்னை: வகுப்புவாத, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க 2024 தேர்தலில் பாஜ வீழ்த்தப்பட வேண்டும். சிஏஜி அறிக்கை வெளியிட்ட ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் பற்றி பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சிஏஜி எழுப்பிய ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடுகளும் பிரதமரின் மவுனமும் என்ற தலைப்பில் இந்தியாவுக்காக பேசுவோம் என்ற ‘பாட்காஸ்ட் சீரிசின்’ 2வது அத்தியாயத்தில் கூறியதாவது: கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கியவுடன், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு தாய்மார் கேட்கிற பதிவு. ‘‘எங்க முதல்வர் சொன்ன ஆயிரம் ரூபாய் வந்தாச்சு, பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சு?” இது தமிழ்நாட்டில் வைரல் ஆகிவிட்டது. 2014ம் ஆண்டு ஏமாந்தது போல் – 2019ம் ஆண்டு ஏமாந்தது போல் – 2024ம் ஆண்டும் நாடு ஏமாந்துவிட கூடாது. 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு – குஜராத் மாநிலத்தை முன்னேற்றி அங்கே தேனாறும் பாலாறும் ஓடுவதுபோல பொய் செய்திகளை பரப்பி அதன் மூலமாக, தன்னை வளர்ச்சியின் நாயகனாக காட்டி கொண்டார் பிரதமர் மோடி.

60 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் ஆட்சி செய்திருக்கிறது. எனக்கு 60 மாதம் கொடுங்கள். இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன் என்று சொன்னார் மோடி. 60 மாதம் மட்டுமில்லை – கூடுதலாக, இன்னொரு 60 மாதம் ஆட்சி செய்கிற அளவிற்கு வாய்ப்பை இந்திய மக்கள் வழங்கினார்கள். வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றிவிட்டாரா? எந்த வகையில் இந்தியாவை வளர்த்திருக்கிறார் என்று பட்டியல் போட அவரால் முடியுமா? 5 T-தான் எனக்கு முக்கியம் என்று முதல் முறை பிரதமானபோது மோடி சொன்னார். Talent- திறமை, Trading-வர்த்தகம், Tradition- பாரம்பரியம், Tourism- சுற்றுலா, Technology- தொழில்நுட்பம். இதில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? என்னை பொறுத்தவரையில், 5 Cக்கள் கொண்டதாகத்தான் இன்றைய பாஜ ஆட்சி இருக்கிறது. Communalism-வகுப்புவாதம், Corruption- ஊழல் முறைகேடுகள், Corporate Capitalism- மூலதன குவியல், Cheating- மோசடி, Character Assassination- அவதூறுகள். இப்படித்தான் சொல்ல முடியும். இதை இதுவரை விளம்பர வெளிச்சங்கள் மூலமாக பாஜ மறைத்து வந்தது.

ஆனால் இப்போது உருவான இந்தியா கூட்டணியும், அதன் தலைவர்களின் பரப்புரையும் பாஜ கட்சியின் முகத்திரையை பிரதமர் மோடி என்ற பிம்பத்தை கிழித்துவிட்டது. இதை அரசியலுக்காக சொல்லவில்லை. உண்மையான தரவுகளின் அடிப்படையில்தான் சொல்கிறோம் என்று சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்திவிட்டது. இந்தியா கூட்டணியை ஊழல்வாதிகளின் கூட்டணி என்று குற்றம் சாட்டுகிற மோடி, உங்கள் ஆட்சியை பற்றி சிஏஜி அறிக்கை என்ன சொல்லியிருக்கிறது என்று படித்து பார்த்தீர்களா? இதை பற்றி சிறப்பு கூட்ட தொடரில் விவாதித்தீர்களா? இல்லை பதில் சொன்னீர்களா? அயோத்தியா திட்டத்தில்கூட ஊழல் செய்த கட்சிதான் பாஜ என்று சிஏஜி அறிக்கை சொல்லியிருக்கிறது. எல்லா திட்டங்களுக்கும், நம்முடைய வாய்க்குள் நுழையாத பெயராக பார்த்து வைப்பார்கள். அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதாவது ராமாயணம் நடந்த இடங்களுக்கு எல்லாம் பயணிகளை அழைத்து செல்லும் சுற்றுலா திட்டம் அது. இதை உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், இமாச்சலபிரதேசம், சிக்கிம், கோவா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் செயல்படுத்த போவதாக சொன்னார்கள். அதை செயல்படுத்தியதில், பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக சிஏஜி குற்றம்சாட்டியிருக்கிறது.

அடுத்து, உதான் திட்டம். ஏழைகள் விமானத்தில் பயணிக்கலாம், நடுத்தர நகரங்களிலும் விமான நிலையம் அமைக்கப்போகிறோம் என்று 2016ம் ஆண்டு தொடங்கிய திட்டம். இதற்காக ஒன்றிய அரசு ரூ.1,089 கோடி ஒதுக்கியது. திட்டமிடப்பட்ட 774 வழித்தடங்களில் விமான சேவை வழங்க முடிவு செய்ததில் 7 விழுக்காடு தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகிறது. 93 விழுக்காடு தடங்களில் விமானங்கள் இயக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் சேலம், தஞ்சாவூர், ராமநாதபுரம், வேலூர் நகரங்களுக்கு உதான் திட்டத்தில் விமான சேவை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், சேலத்திற்கு மட்டும்தான் விமானம் இயக்கப்பட்டது. அதுவும் இப்போது இல்லை. 720 வழித்தடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை.

* அடுத்து ரயில்வே. 2021-22ம் ஆண்டில் ரயில்வே துறை, 100 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்காக 107 ரூபாய் செலவழித்து இருப்பதாகவும், இதனால் இந்திய ரயில்வேயின் நிதிநிலை கவலைக்குரியதாக மாறிவிட்டதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

* அடுத்து, ஒன்றிய அரசின் பல்வேறு ஓய்வூதிய திட்டங்களில் 2017 முதல் 2021ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட நிதி, ஒன்றிய அரசின் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு முறைகேடு நடந்திருக்கிறது என்று அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முறைகேடுகளுக்கெல்லாம் உச்சம் டோல் பிளாசா. பொதுமக்களிடம் தினமும் மாபெரும் மோசடியான வசூல் நடந்திருக்கிறது. 5 டோல் பிளாசாக்களை மட்டும் தணிக்கை செய்ததில், விதிகளுக்கு புறம்பாக, வாகன ஓட்டிகளிடம் ₹132 கோடியே 5 லட்சத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூலித்து இருப்பதாக சிஏஜி அறிக்கை குற்றம்சாட்டியிருக்கிறது.

அடுத்து, நாடு முழுவதும் இருக்கும் சாலைகளை இணைக்க பாரத்மாலா என்ற திட்டத்தை 2015ம் ஆண்டு கொண்டு வந்தார்கள். அதில், ஒரு கிமீ தூரத்திற்கு 15 கோடியே 37 லட்சம் என்பதை, 32 கோடியே 17 லட்சமாக ஆக்கி ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இந்த 8 ஆண்டு காலத்தில் 13 ஆயிரம் கிமீட்டருக்குத்தான் சாலை போடப்பட்டிருக்கிறது. 40 விழுக்காடு கூட வேலைகள் முடியவில்லை. இதேபோல், துவாரகா விரைவு நெடுஞ்சாலை திட்டம், பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்திலும் முறைகேடுகள் நடந்திருக்கிறது. திட்டமிட்ட மதிப்பைவிட 1,278 மடங்கு கூடுதல் தொகை செலவிடப்பட்டிருக்கிறது.

அடுத்து, சுகாதார துறை. இந்தியாவிற்கே முன்னோடியாக ‘கலைஞர் காப்பீட்டு திட்டம்‘ தமிழ்நாட்டில்தான் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து, 2018ல் பிரதமர் மிக பிரமாண்டமாக அறிவித்த திட்டங்களில் ஒன்று ஆயுஷ்மான் பாரத் திட்டம். ஏழை குடும்பங்களுக்கு ₹5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுவதாக பாஜ சொல்கிறது. இந்த திட்டத்தின்கீழ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று இறந்த நோயாளிகளுக்கு, இறந்த பின்பும், சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லி காப்பீட்டு தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில், ஒரு நோயாளி பல மருத்துவமனைகளில், அனுமதிக்கப்பட்டிருப்பதாக கணக்கு காட்டுவது, ஒரே ஆதார் நம்பரை பலருக்கும் கொடுப்பது, ஒரே போன் நம்பரை பலரும் பதிவு செய்வது, ஏன், போன் நம்பரே கொடுக்காமல் பதிவு செய்வது என்று எக்கச்சக்கமாக முறைகேடுகள் நடந்திருக்கிறது. இவ்வாறு, அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை என ₹7.5 லட்சம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி அளவிட்டிருக்கிறார்கள்.

இதுவரை பிரதமரோ சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களோ பதில் சொல்லவில்லை. மக்களை திசைதிருப்ப வெவ்வேறு அரசியலை கையில் எடுக்கிறார். ஆனால், ஏழை, எளிய – பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடியின – மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருபவர்தான் மோடி என்று, இப்போது நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்து விட்டார்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலிலும் பாஜ வீழ்த்தப்பட்டிருப்பதே இதற்கான அடையாளம். 2024 தேர்தலில், பாஜ ஒட்டு மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும். வகுப்புவாத- ஊழல்- கார்ப்பரேட் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய நாட்டு மக்கள் அனைவரும் ஒரே குரலாக முழங்க வேண்டும். பரந்து விரிந்த நம் நாட்டை காப்பாற்றுகிற கடமை நம் எல்லோரின் கையிலும்தான் இருக்கிறது. இந்த முதல்வர் ஸ்டாலின் குரலை, இந்தியாவின் குரலாக எல்லோரிடமும் கொண்டு செல்லுங்கள். தொடர்ந்து இந்தியாவுக்காக பேசுவோம். இந்தியாவை காப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

Leave a Comment

sixteen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi