கோவை: கோவையில் 45 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேக்கரிகள், ஹோட்டல்கள், இனிப்பு, கார வகைகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பவர்கள், தீபாவளி பண்டிகைக்கு மட்டும் தயாரிப்பவர்கள் என அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் மொத்தம் உணவு பாதுகாப்பு துறை சார்பில் 9 குழுக்கள் தனியாக நியமிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை மொத்தம் 104 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 8 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோவிற்கும் அதிகமான நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 501 கிலோ அளவிலான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 1 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். அதேபோல 7 கடைகளில் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக உணவு மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
45 கடைகளுக்கு 2006 சட்டத்தின்படி 55ன் கீழ் நோட்டீஸ்-கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்த 7 கடைகளுக்கு தலா ரூ.2000 வீதம் 14 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தனசேகர் கூறுகையில், கோவையில் தீபாவளி பண்டிகை வரும் வரை தொடர்ந்து அனைத்து இடங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்படும். தினமும் கள ஆய்வுக்கு உட்படுத்தி அனைத்து இடங்களிலும் பரிசோதனை செய்து உணவு பொருட்கள் தரமானதாக உள்ளதா என உறுதி செய்யப்பட்ட பின்னரே, கடைகள் விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.