சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறும் 16வது லீக் போட்டியில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் மோதுகின்றன.
நியூசிலாந்து தனது முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, 2வது போட்டியில் நெதர்லாந்து, 3வது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. நாளையும் வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது. கேப்டன் வில்லியம்சன் கைவிரலில் காயம் அடைந்துள்ளதால் லதாம், அணியை வழிநடத்த உள்ளார். டோவன் கான்வே 229 ரன் எடுத்து சூப்பர் பார்மில் உள்ளார். ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். பவுலிங்கில் சான்ட்னர், மாட் ஹென்றி தலா 6 விக்கெட் வீழ்த்தி சிறந்த பார்மில் உள்ளனர். இவர்களுடன் போல்ட், பெர்குசன் வேகத்தில் அச்சுறுத்துவர். மறுபுறம் ஆப்கானிஸ்தான் முதல் 2 போட்டியில், வங்கதேசம், இந்தியாவிடம் தோல்வி அடைந்தாலும் கடைசி போட்டியில் வலுவான இங்கிலாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது.
பேட்டிங்கில் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியில் மிரட்டி வருகிறார். மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான், இக்ராம் அலிகில், ரஹ்மத் ஷா, கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, முகமது நபி ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. சுழலுக்கு சாதகமான சென்னையில் ரஷித்கான், முஜிப் உர் ரகுமான், பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பர். இவர்களை எதிர்கொள்வது நியூசிலாந்துக்கு கடும் சவாலாக இருக்கும். நியூசிலாந்து வெற்றியை தொடருமா அல்லது ஆப்கன் அதிர்ச்சி கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம். இதுவரை நேருக்கு நேர்… ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 2 முறை மோதி உள்ளன. இதில் 2015ம் ஆண்டு உலக கோப்பையில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2019 உலககோப்பையில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் நியூசிலாந்து வென்றது. நாளை 3வதுமுறையாக மோதுகிறது.