Saturday, May 11, 2024
Home » ஆளுநரின் அத்துமீறிய நடவடிக்கைகள் மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால்; அச்சுறுத்தலுக்கு பயப்படுபவர்கள் அல்ல நாங்கள்:திமுக அரசின் 2 ஆண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேச உரை

ஆளுநரின் அத்துமீறிய நடவடிக்கைகள் மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால்; அச்சுறுத்தலுக்கு பயப்படுபவர்கள் அல்ல நாங்கள்:திமுக அரசின் 2 ஆண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேச உரை

by Suresh

சென்னை: ஆளுநரின் அத்துமீறிய நடவடிக்கைகள் ஏதோ எனக்கும் ஆர்.என்.ரவிக்குமான பிரச்னை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் பிரச்னை மட்டுமல்ல. இந்திய மக்களாட்சியின் பிரச்னை. மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால். அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் அல்ல நாங்கள் என திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேச உரையாற்றினார்.கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்து அதனால் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் திமுக அரசின் 2ம் ஆண்டு சாதனைகளை விளக்கிடும் வகையில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று மாலை கன்டோன்மென்ட் பல்லாவரம் பகுதியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டை ஆளும் பொறுப்புக்கு 6வது முறையாக திமுக வந்துள்ளது. திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் 1,222 பொதுக்கூட்டங்கள் இன்றும், நாளையும், நாளை மறுநாளும் நடத்த உள்ளோம். சமூகநீதி – சமத்துவம் – சுயமரியாதை – மொழிப்பற்று – இன உரிமை – மாநில சுயாட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திமுக. தொழில் வளர்ச்சி – சமூக மாற்றம் – கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் என்று விரும்பினோம். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அது தான் திராவிட மாடல் வளர்ச்சி. ‘திராவிடம்’ என்றால் காலாவதியான கொள்கை என்று சொல்லி இருக்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி. திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல. சனாதனத்தை காலாவதி ஆக்கியது திராவிடம். ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும் தான் உண்டு. எத்தகைய அன்னியப் படையெடுப்புகளாக இருந்தாலும் ஆரியப் படையெடுப்புகளாக இருந்தாலும் அதனை வீழ்த்தும் ஆயுதம் தான் திராவிடம். அதனால் தான் ஆளுநர் அதனைப் பார்த்து பயப்படுகிறார். திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது, உருவாக்கும்.

ஆளுநர் உரை அறிவிப்புகள், என்னால் சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ்வெளியிட்ட அறிவிப்புகள் என இதுவரை அறிவிக்கப்பட்டதில் 85 விழுக்காடு அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அதிமுக போன்ற எதிர்க்கட்சிகள் பேசுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அப்படித் தான் பேசுவார்கள். ஆனால் அரசு நிர்வாகத்தின் ஒரு அங்கமாக இருக்கின்ற ஆளுநர் எதற்காக எதிரிக்கட்சித் தலைவரைப் போல செயல்பட வேண்டும். எந்த நோக்கத்துக்காக அவர் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அமைதியைக் குலைக்க வந்திருக்கிறாரா. தமிழ்நாட்டின் சமூகச் சூழலை ஏதாவது பேசி குழப்புவதற்காக அனுப்பி வைக்கப்பட்டவரா அவர் என்பது தான் சந்தேகம்.

சில நாட்களுக்கு முன்னால் ஆளுநர் ஆர்,என்.ரவி, ஆங்கில நாளேட்டுக்கு ஒரு பேட்டியை அளித்துள்ளார். அதில் திமுக அரசு மீது பல்வேறு அவதூறான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார். அதே பேட்டியில், முதலமைச்சர் நல்ல மனிதர் என்றும், என்னிடம் அன்பாக நடந்து கொள்கிறார் என்றும், நானும் அவரிடம் அன்பாக நடந்து கொள்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் நட்பையும் கொள்கையையும் குழப்பிக் கொள்ள மாட்டேன். தனிப்பட்ட நட்புக்காக கொள்கையை விட்டு தந்து விட மாட்டேன்.

கடந்த ஜனவரி மாதம் 9ம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உரையாற்ற வந்த ஆளுநர், நாம் தயாரித்து வழங்கிய உரையை வாசிக்காமல் அதனை திருத்தி வாசித்தார். நாம் எழுதித் தந்ததை விட்டுவிட்டும் அவராகச் சில செய்திகளைச் சேர்த்தும் வாசித்தார். அவருக்கு அவை நடவடிக்கைகள் பற்றித் தெரியவில்லை. அப்படி அவர் நடந்து கொண்டது அவையின் உரிமையை மீறிய செயல் என்பதால் தான், நாம் தயாரித்து அனுப்பிய உரையே அவைக் குறிப்பில் இடம் பெறும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம்.அவையின் மாண்பைக் காப்பதற்கு இதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரையை ஏன் வாசிக்கவில்லை, திருத்தினேன் என்பதை பொதுவெளியில் மிக நீண்ட பேட்டியாகவும் ஆளுநர் கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இல்லை என்று ஆளுநர் சொல்லி இருக்கிறார். பாஜ ஆளுகிற மணிப்பூர் மாநிலம் இதோ பற்றி எரிகிறதே – அது போல தமிழ்நாடு பற்றி எரிகிறதா? என்ன பேசுகிறார் ஆளுநர். சில நாட்களுக்கு முன்னால் கர்நாடக மாநிலத்தில் கலவரம் நடந்ததே. அது பாஜ ஆளும் மாநிலம் அல்லவா. அதுபோல இங்கு நடந்ததா.23.9.22 ஆன் தேதி கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் சில மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தோம். குற்றவாளிகளைக் கைது செய்தோம். அன்றைய தினமே வழக்கு பதிந்தோம். மூன்றாவது நாளிலேயே தேசிய முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கு தொல்லை ஏற்படுத்திய நபரை உடனடியாக கைது செய்தோம். கட்சியை விட்டே நீக்கினோம். சர்வதேச போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் கும்பல் ஒன்றுக்கு தமிழ்நாட்டிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆளுநர் சொல்கிறார். திமுக ஆட்சி அமைந்த பிறகு அப்படி எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை. தர்மபுரம் ஆதீனத்துக்கு தான் சென்ற போது தனது வாகனம் வழிமறித்து தாக்கப்பட்டதாக ஆளுநர் அபாண்டமாக பொய் சொல்கிறார். சிதம்பரத்தில் குழந்தை திருமணங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்ததால் வழக்கு பதியப்பட்டது. இதில் இவருக்கு என்ன வந்தது? குழந்தைத் திருமணத்தை தடுப்பதில் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. யார் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்கிறாரா? குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறாரா?

மதுரையில் அமையும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தமிழ், ஆங்கில நூல்கள் தான் வாங்குகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழிகளின் புத்தகங்களையும் வாங்க வேண்டுமாம். குஜராத் மாநில நூலகத்தில் தமிழ் புத்தகங்களை வைப்பார்களா? நாகாலாந்து ஆளுநராக இருந்தாரே அங்கு உள்ள நூலகத்தில் எல்லாம் எல்லா மொழி புத்தகங்களையும் வைக்கச் சொல்லி சட்டம் போட்டாரா. என்ன பேசுகிறார் ஆளுநர்? அட்சய பாத்திரா திட்டத்தை எதற்காக ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்கிறார். தமிழ்நாடு அரசே, காலைச் சிற்றுண்டித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். பிறகு எதற்காக தனியார் நிறுவனத்தை ஊக்குவிக்க வேண்டும். ஏற்கனவே, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கையெழுத்துப் போடாமல் இழுத்தடித்தவர் இந்த ஆளுநர். யாரோ சிலரின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார் என்ற சந்தேகம் தான் இதன் மூலமாக உறுதிப்படுகிறது. ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு ஆட்சி நடத்தப் பார்க்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஒன்றிய அரசை ஆளும் அதிகாரம் இந்தியாவின் தலைமை அமைச்சரான பிரதமருக்கும், அமைச்சரவைக்கும் இருக்கிறது. மாநிலத்தை ஆளும் அதிகாரம், மாநிலத்தின் முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் இருக்கிறது. சட்டத்தை இயற்றும் அதிகாரம், நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் இருக்கிறது. இதனை மாற்றி தனக்கு ஏதோ சர்வ அதிகாரங்களும் இருப்பதைப் போல ஆளுநர் நினைத்துக் கொள்கிறார். ஏராளமான சட்டங்களையும், சட்டத் திருத்தச் சட்டங்களையும் நிறைவேற்றுகிறோம் என்றால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நிறைவேற்றுவது இல்லை. அனைத்துமே அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டே நிறைவேற்றப்படுகின்றன. அதில் ஆளுநருக்கு சந்தேகம் இருக்குமானால், மாநில அரசிடம் விளக்கம் கேட்கலாம். அதனைச் சொல்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். மாறாக, பரிசீலனை செய்கிறேன் என்ற போர்வையில் அதனை ஊறுகாய் பானையில் போட்டு ஊற வைப்பதைப் போல ஆளுநர் மாளிகையில் முடக்க நினைத்தால் அதனைக் கேள்வி கேட்கும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உண்டு. இது எனது அதிகாரம் மட்டும் அல்ல, மக்களின் அதிகாரம். எனது உரிமை மட்டும் அல்ல, மக்களின் உரிமை ஆகும்.

அதனால் தான், இப்படி நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டத்தின் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அவையில் இருந்த அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானம் இது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ,டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இதனை ஆதரித்து எனக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இது மிகச் சரியான தீர்மானம் என்பதை வழிமொழிந்திருக்கிறார்கள். இது ஏதோ தனிப்பட்ட ஸ்டாலினுக்கும், ஆர்.என்.ரவிக்குமான பிரச்னை மட்டுமல்ல.தமிழ்நாட்டின் பிரச்னை மட்டுமல்ல. இது இந்தியாவின் பிரச்னை. இந்திய மக்களாட்சியின் பிரச்னை ஆகும்.

கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்து அதனால் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டத்தை ஒரு நியமன ஆளுநர் நிறுத்தி வைப்பாரேயானால் அதை விட மக்களாட்சிக்கு அவமானம் இருக்க முடியுமா. ஆளுநர் கையெழுத்து தேவை என்பதையே அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நீக்க வேண்டாமா. அதற்கான குரலைத்தான் எழுப்பி வருகிறோம். அதனையும் இந்த திராவிட மாடல் அரசு செயல்படுத்திக் காட்டும். ஆளுநர் மூலமாகவோ – வேறு எதன் மூலமாகவோ பயமுறுத்த நினைத்தால் அதற்கெல்லாம் பயப்படுபவர்கள் அல்ல நாங்கள்.

ஆட்சியாக இருந்தாலும்-கட்சியாக இருந்தாலும்-தொண்டர்கள் என்னோடு இருக்கிறார்கள் என்ற துணிச்சலில் தான் நான் இருக்கிறேன். இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம். தமிழ்நாட்டை முன்னேற்றிய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்ப்போம். ஒன்றிய அளவில் ஒற்றுமையை உருவாக்கி உன்னதமான அரசை தலைநகர் டெல்லியிலும் அமைப்போம். அத்தகைய நாடாளுமன்றத் தேர்தல் நம்மை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. தயாராவோம், தயாராவோம், தயாராவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, க.சுந்தர் எம்எல்ஏ, க.செல்வம் எம்.பி, தலைமை தீர்மானக் குழு செயலாளர் மீ.அ.வைதியலிங்கம், எழிலரசன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வீ.தமிழ்மணி, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ து.மூர்த்தி, மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன், ஜி.சி.அன்புச்செழியன், க.அன்புச்செல்வன், ஆதிமாறன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆர்.மனோகரன், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி தலைவர் செம்பருத்தி துர்கேஷ், தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி. தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், மண்டலகுழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், இலக்கிய அணி அமைப்பாளர் ஜெயராம் மார்த்தாண்டன், கோல்டுபிரகாஷ், ஜெகதீஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

3 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi