Sunday, September 1, 2024
Home » ரசாயனம் கலந்த காகிதங்களில் பரிமாறும் தின் பண்டங்களால் புற்றுநோய் அபாயம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

ரசாயனம் கலந்த காகிதங்களில் பரிமாறும் தின் பண்டங்களால் புற்றுநோய் அபாயம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

by MuthuKumar

பெரம்பூர்: இன்றைய இளைய தலைமுறையினருக்கு மறதி மிகப்பெரிய சவாலாக உள்ளது. தற்போதைய தலைமுறையினர் மட்டுமல்லாது இதற்கு முந்தைய தலைமுறையினரும் ஒரு வகையில் நம் முன்னோர்கள் விட்டுச் சென்றதை மறந்து, வாழ்க்கை முறையை தொடர்ந்ததால் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

அந்த வகையில் நம் முன்னோர்களின் உணவுப் பழக்க வழக்கமுறை, அந்த உணவை எடுத்துக் கொண்ட முறை, எந்த உணவு வகைகளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும், அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை அவர்கள் நமக்கு வகுத்துக் கொடுத்து விட்டுச் சென்றனர். ஆனால் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் ஒவ்வொன்றையும் நாம் தூக்கி எறிந்து விட்டு தற்போது கெமிக்கல்கள் கலந்த உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறோம்.

நோய்கள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் மருத்துவத்தை ஒரு நல்ல வணிகமாக பயன்படுத்தி பணம் ஈட்டி வருகின்றனர். நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற ஒவ்வொன்றையும் மாற்றி தங்களுக்கு ஏற்றவகையில் அதனை செதுக்கிக் கொண்டு இதுதான் நாகரிகம் என்ற பெயரில் தங்களது வாழ்நாளை படிப்படியாக குறைத்து வருகின்றனர்.

அந்த வகையில் நமது தாத்தா பாட்டி 80 வயதை கடந்தும் ஆரோக்கியமாக இருப்பதை பார்த்த நாம், தற்போது அறுபது வயதை கடந்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம். காலப்போக்கில் இந்த வயது வரம்பு மிகவும் குறைந்து மனிதனின் சராசரி ஆயுட்காலமும் குறைய வாய்ப்பு உள்ளதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணமாக உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர் என இவை மூன்றும் மேற்கோள் காட்டப்படுகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் மூன்று வேளை உணவு உண்ண வேண்டும் என்ற முறையை பழக்கப்படுத்திக் கொண்டார்கள். மூன்று வேளை உணவு என்பது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதில் எந்தவித கெமிக்கல்களும் கலந்து இருக்கக் கூடாது. அப்போதுதான் அது மனிதனுக்கு நன்மை பயக்கும் எனக் கூறப்பட்டாலும், தற்போதுள்ள காலநிலையில் கெமிக்கல்கள் கலக்காத உணவு என்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. கடைக்குச் சென்று வாங்கும்போதே இது சாதாரண காய்கறி, இது ஆர்கானிக் காய்கறி என அதையும் தரம் பிரித்து வைக்கின்றனர்.

ஆர்கானிக் காய்கறிகள் விலை அதிகமாகவும், சாதாரண காய்கறிகள் விலை குறைவாகவும் உள்ளது. இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால், ஆர்கானிக் காய்கறிகள் பூச்சி மருந்து தெளிக்காமல் இயற்கையான முறையில் தயார் செய்யப்படுவதாக கூறுகிறார்கள். இதிலிருந்து நம் கண் முன்னே நமக்கு கெமிக்கல் கலந்த காய்கறிகளை தருகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இவ்வாறு உணவு வகைகளில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால் அந்த உணவுகளை நாம் எவ்வாறு வாங்குகிறோம், எவ்வாறு சாப்பிடுகிறோம் என்று பார்த்தால் அதில் இதைவிட அதிகமான பிரச்னைகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

பொதுவாக அந்த காலகட்டத்தில் பால் வாங்க வேண்டும், அல்லது ஓட்டலுக்குச் சென்று சாம்பார் வாங்கி வர வேண்டும் என்றால் வீட்டிலிருந்து ஒரு கூடையில் பாத்திரத்தைக் கொண்டு சென்று அதில் உணவு வகைகளை வாங்கி வருவோம். ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் கூடை மற்றும் பாத்திரங்களை எடுத்துச் சென்றால் அதை இளைய தலைமுறையினர் அவமானமாக கருதுகிறார்கள் இதனால் ஸ்டைலாக கடைக்கு எந்தவித பொருட்களையும் எடுத்துச் செல்லாமல் அவர்கள் தரும் பிளாஸ்டிக் கலந்த கவர்களை பயன்படுத்தி சூடான சாம்பார் மற்றும் இதர பொருட்களை வாங்குகின்றனர்.

இதேபோன்று இன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பெரும்பாலான டீ கடைகளில் செய்தித்தாள்களில் மடித்து வடை, போண்டா, பஜ்ஜியை சாப்பிட தருகின்றனர். அதிலும் நம்மில் உள்ள சில அறிவாளிகள், போண்டா பஜ்ஜியில் உள்ள எண்ணெய்யை அதே தாளில் பிழிந்து தனியாக பிரித்து எடுத்துவிட்டு சாப்பிடுகிறார்கள். இவ்வாறு அந்த மை கலந்த பேப்பரில் வைத்து சாப்பிட்டால் எதுபோன்ற பாதிப்புகள் நமது உடலில் ஏற்படும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். ஓட்டல்களில் தற்போது பட்டர் பேப்பர் என ஒன்றை போடுகிறார்கள். அதில் எவ்வளவு எண்ணெய் அல்லது சூடான பொருள் வைத்தாலும் உடனடியாக அது ஓரளவுக்கு இழுத்துக் கொள்கிறது. அதில் ஒரு விதமான மெழுகுத் தன்மை உள்ளது.

இதுவும் ஒரு விதமான கெமிக்கல், உடலுக்கு கெடுதல்தான் என கூறுகிறார்கள். இதே போன்று தற்போது பெரும்பாலான ஓட்டல்களில் சில்வர் கலரில் உள்ள பேப்பர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் உடலுக்கு கெடுதல்தான் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதேபோன்று பெரும்பாலான பிரியாணி கடைகளில் பக்கெட் பிரியாணி என விற்கிறார்கள். அவர்கள் கூறும் அந்த பக்கெட் எந்த விதமான பிளாஸ்டிக் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.

இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களில் சூடான பொருட்களை போடும்போது ஒரு விதமான கெமிக்கல் சுழற்சி ஏற்பட்டு உண்ணும் உணவு கெமிக்கல் கலந்த உணவாக மாறி அது உடலுக்கு மிகப்பெரிய தீங்கை விளைவிக்கிறது. மேலும் பெரும்பாலான உணவகங்களில் சின்னச் சின்ன பிளாஸ்டிக் டப்பாக்களில் பச்சடி, கத்தரிக்காய் கூட்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தருகின்றனர். இன்னும் சில சைவ உணவகங்களில் கூட சாப்பாட்டை பார்சல் செய்யும்போது அனைத்தையும் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து தருகிறார்கள். அந்த டப்பாக்களில் சூடாக கட்டும்போது பல்வேறு கெமிக்கல் சுழற்சி ஏற்பட்டு உணவு வகைகள் அனைத்தும் கெமிக்கல் கலந்த உணவுகளாக மாறுகிறது.

சாப்பாடு எப்படி இருக்க வேண்டும், என்ன தரத்தில் இருக்க வேண்டும், எந்த ஓட்டலில் சாப்பிட வேண்டும் என பார்த்து பார்த்து சாப்பிடும் நம்மவர்கள், சாப்பாட்டை எதில் பேக் செய்கிறார்கள், எதில் வைத்து சாப்பிடுகிறோம் என்பதை மட்டும் மறந்து விடுகிறார்கள். இதனால் மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்குகிறார்கள். இது ஒரு புறம் இருக்க பிளாஸ்டிக் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது என்று கூறி, தற்போது பிளாஸ்டிக்குக்கு மாற்று என சிலவற்றை கொண்டு வருகிறார்கள். அதுவும் கெமிக்கல் கலந்த விஷயங்களாகவே உள்ளன. 100 ஓட்டல்களில் ஒரே ஒரு ஓட்டலில் மட்டும் வாழை இலையை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தப்படும் வாழை இலையில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை தற்போதுள்ள இளசுகள் அறிந்திருக்க மாட்டார்கள்.

எந்தவித கெமிக்கல்களும் இல்லாத வாழை இலை, மந்தாரை இலை, பாக்கு மட்டை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தும்போது உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது. அதே வேளையில் நாகரிகம் என்ற பெயரில் ஓட்டலுக்குச் செல்லும்போது ஓட்டல்களில் தரப்படும் சூடான பொருட்களை கவரில் கட்டி வாங்கக் கூடாது. வீட்டில் இருந்து பாத்திரங்களை கொண்டு சென்று வாங்கும் பழைய நடைமுறைகளை கொண்டு வர வேண்டும். மேலும் எக்காரணத்தைக் கொண்டும் பட்டர் பேப்பர், சில்வர் பேப்பர் மற்றும் காகிதங்களில் வடை, பஜ்ஜியை மடித்து வாங்கி வருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் என்ன பிரச்னை உள்ளது, அது எதனால் வந்தது என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் புதுப்புது நோய்கள் வந்து கொண்டிருக்கும்போது, உணவு சாப்பிடும் முறை மற்றும் பார்சல் எடுத்துச் செல்லும் முறையில் மாற்றங்களை கொண்டு வந்தால் அது வருங்கால சந்ததியினருக்கு வழிவகுக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

செய்தித்தாள்கள் மற்றும் பட்டர், சில்வர் பேப்பர் போன்றவற்றில் சூடான உணவுகளை வைத்து சாப்பிடும் போது ஏற்படும் பிரச்னைகள் குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ டாக்டர் சந்தோஷ் சரவணன் கூறுகையில், ‘‘பேப்பர்களில் உணவு வைத்து சாப்பிடும்போது அதில் உள்ள இங்க் உணவில் ஒட்டிக்கொள்ளும். அதேபோன்று சில்வர் கவர் மற்றும் பட்டர் பேப்பரில் பயன்படுத்தும்போதும் அதில் கெமிக்கல் கலந்து விடுகின்றன. உணவுப் பொருட்களை பொறுத்தவரை வாழை இலையில் கட்டி சாப்பிடும் போது அது உடலுக்கு நன்மை பயக்கும்.

பாலிதீன் பைகளில் டீ, காபி, சாம்பார் போன்ற சூடான பொருட்களை வாங்குவதால் பிரச்னை ஏற்படுகிறது. குறிப்பிட்ட பாலிதீன் பைகளில் சூடான உணவை சேர்க்கும் போது ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இதனை பிபிஏ என ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது ஒரு வேதியியல் மாற்றம். இந்த வேதியியல் மாற்றம் நடந்து விட்டால் அந்த உணவுப் பொருட்களில் கேன்சரை உண்டாக்கும் கிருமிகள் கலந்து விடும்.

தரமற்ற உணவுகளில் இருந்து பிரச்னை ஆரம்பிக்கிறது. இது போன்ற கெமிக்கல்கள் உடலில் சேரும்போது புற்றுநோய் வருகிறது. மேலும் உடலில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு குறைந்து மனிதர்களை உருக்கி விடுகிறது. உடலில் இந்த கெமிக்கல்கள் சேரும் போது கார்சி நோஞ்சன் எனப்படும் கிருமிகள் நமது உடலில் வந்துவிட்டால் நமது உடலில் உள்ள செல்கள் பாதிப்படைந்து படிப்படியாக நமக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும். எனவே நமக்கு உணவை விட உணவை எடுத்துக் கொள்ளும் பொருட்களில் இருந்து அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலர் நாங்கள் சிறுதானிய வகைகளை சாப்பிடுத்துகின்றோம், நல்ல தரமான எண்ணெய்களை பயன்படுத்துகிறோம், நல்ல உணவு வகைகளை சாப்பிடுகிறோம் என கூறுவார்கள்.

ஆனால் அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு விஷயத்திலும் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் கெமிக்கல்கள் உள்ளன என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இதனால் பெரும்பாலும் எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவர்களும் கூட, தங்களுக்கு புற்று நோய் எப்படி வருகிறது என தெரியாமல் இருப்பார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளன என்பதை அவர்கள் அறிய வேண்டும். சூடாக அல்லாத பொருட்களை பிளாஸ்டிக் மீது வைத்து சாப்பிட்டால் பெரிய அளவு பிரச்னை வராது. ஆனால் சூடான பொருட்களை பிளாஸ்டிக் கவர்களின் மீது வைத்து சாப்பிடும் போது ரசாயன மாற்றம் ஏற்பட்டு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

பல்வேறு இடங்களில் வாழை இலை போன்ற ஒரு இலையை நாம் பார்த்திருப்போம், அது பேப்பர் போன்று இருக்கும். ஆனால் பேப்பரில் உணவு வைத்தால் அது ஊறிவிடும் ஆனால் இந்த இலையில் உணவு வகைகள் ஊறாமல் அப்படியே இருக்கும். அந்த இலையின் மீது ஒரு கோட்டிங் இருக்கும். அது மெழுகுத்தன்மை போன்று இருக்கும். மெழுகு என்றால் அது ஒரு விதமான கெமிக்கல் கலந்த மெழுகு. அதிலும் பிரச்னை உள்ளது. இதேபோன்று டீ, காபி குடிக்கும்போது கடைகளில் பேப்பர் கப் பயன்படுத்துவார்கள்.

பேப்பர் என்றால் ஊற வேண்டும். ஆனால் அந்த கப் ஊறாது. ஏனென்றால் அதிலும் வேக்ஸ் கலந்துள்ளது. இவ்வாறு நாம் பயன்படுத்தும் பொருட்களில் கெமிக்கல்கள் அதிகமாக கலந்துள்ளது என்பதை பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும். முடிந்தவரை நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வியல் முறைகளை மீண்டும் எடுத்து பயன்படுத்தும்போது புதிது புதிதாக வரும் பிரச்னைகளில் இருந்து நாம் வெளியே வந்துவிடலாம்,’’ என்றார்.

பல ஆண்டுகள் கழித்து பாதிப்பு
பேப்பரில் மடித்து தரப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து குடல் மற்றும் ஈரல் அறுவை சிகிச்சை நிபுணர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘இங்க் என்பது ஒரு விதமான கெமிக்கல். உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் இங்க் கலந்த பேப்பர்களில் வைத்து கொடுக்கக் கூடாது. உணவுப் பொருட்களை எவ்வாறு சுத்தமாகவும் சுகாதாரமும் செய்ய வேண்டுமோ, அதே போன்று அதை பரிமாறும் போதும் கெமிக்கல் இல்லாத வகையில் பரிமாற வேண்டும். இதனால் கண்டிப்பாக ஈரல் பாதிப்பு ஏற்படும். ஈரல், கிட்னி ஆகியவை படிப்படியாக பழுதடையும் சூழ்நிலை ஏற்படும். மேலும் பாலிதீன் பைகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளும் உடம்புக்கு கெடுதலை ஏற்படுத்தும். இதில் சாப்பிட்ட உடனே நமக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது, பல ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தும் போது அல்லது உடலில் சேரும்போது பல ஆண்டுகள் கழித்துதான் பாதிப்படையச் செய்கிறது. எனவே பொதுமக்கள் முடிந்தவரை இவற்றை தவிர்ப்பது நல்லது,’’ என்றார்.

வாழ்வியல் முறையில் மாற்றம்
பெரும்பாலும் உணவகத்திற்குச் செல்லும் நபர்கள் வீட்டிலிருந்து பாத்திரங்களை கொண்டு செல்ல வேண்டும். சூடாக வழங்கப்படும் உணவுகளை பாத்திரங்களில் வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும் உணவுப் பொருட்களை வாழை இலையில் கட்டித் தர கடைக்காரர்களுக்கு அழுத்தம் தர வேண்டும். அதற்கான பணத்தையும் சேர்த்து கொடுத்துவிட்டால் கடைக்காரர்களும் கொஞ்சம் கொஞ்சமாக வாழை இலைக்கு மாறிவிடுவார்கள். மேலும் பாலிதீன் பைகளை தவிர்க்க வீடுகளில் இருந்து துணிப்பை அல்லது கூடைகளை எடுத்துச் செல்ல வேண்டும். மீண்டும் 50 வருடத்திற்கு முன்பு நம் முன்னோர்கள் வாழ்ந்த முறைக்குச் சென்று விட்டால் புதிது புதிதாக வரும் நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

விழிப்புணர்வு அவசியம்
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் பிளாஸ்டிக் டப்பாக்களை உணவு விஷயத்தில் பயன்படுத்த மாட்டார்கள். ஸ்டீல் கண்ணாடி போன்றவற்றை பயன்படுத்துவார்கள். குறிப்பாக குழந்தைகளின் பால் பாட்டிலை பார்த்தால் அதில் பிபிஏ ப்ரி என குறிப்பிட்டு இருப்பார்கள். அதாவது கெமிக்கல் இல்லாத பொருள் என குறிப்பிட்டு இருப்பார்கள். இதுபோன்ற பொருட்களின் விலை ₹400, 500 என போட்டு இருப்பார்கள். நமது ஊரில் 40, 50 ரூபாய்க்கு பால் பாட்டில் கிடைக்கும். ஆனால் மேலை நாடுகளில் மட்டுமல்லாமல் நமது நாட்டிலும் பி.பி.ஏ ப்ரி போன்ற பொருள் கிடைக்கிறது. ஆனால் 500 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும். இதில் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், கெமிக்கல் கலந்தது, கெமிக்கல் கலக்காதது என்பதுதான்.

நச்சு பிளாஸ்டிக்
சமீபத்தில் வடநாட்டை சேர்ந்தவர்கள் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் பொறுக்கி அதனை சூடு செய்து அதன்மூலம் பிளாஸ்டிக் சேர் மற்றும் குடங்கள் செய்கிறார்கள். அது போன்ற பிளாஸ்டிக் பொருட்களில்தான் தற்போது சிறிய டப்பாக்கள் செய்து உணவகங்களில் பயன்படுத்துகின்றனர். அதில் சூடான உணவுப் பொருட்களை போடும்போது ரசாயன மாற்றம் ஏற்பட்டு உணவு ஒரு விதமான ரசாயன மாற்றத்திற்கு தள்ளப்படுகிறது. இதுதான் புற்று நோய்க்கான ஆரம்ப புள்ளி. இது போன்ற பொருட்களை பயன்படுத்தும் போதுதான் புற்றுநோய் மனித உடலில் வந்து சேருகிறது.

You may also like

Leave a Comment

four × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi