Wednesday, May 15, 2024
Home » முடியாதுன்னு எதுவுமே இல்லை!

முடியாதுன்னு எதுவுமே இல்லை!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

ஃபுட் டெலிவரியில் கலக்கும் ரிஹானா

என்னடா வாழ்க்கைன்னு சலிப்பு வருதா..? ஒரு முறை ரிஹானாவை பார்த்துவிடுங்கள். பரபரப்பான சென்னையின் சாலைகளில் வாகனத்தில் பயணித்து உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனத்தின் உணவு ஆர்டர்களை டோர் டெலிவரி செய்து வருகிறார் ரிஹானா சுல்தான்.

உணவு டெலிவரிதானே..?

இதிலென்ன ஆச்சரியம் என நீங்கள் நினைத்தால் ஆச்சரியமேதான்..! ஆம், ரிஹானாவால் சுத்தமாக நடக்க முடியாது. குழந்தையில் 90 சதவிகிதமும் போலியோவால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களிலும் நடக்கும் திறனை இழந்த மாற்றுத்திறனாளி பெண் இவர். சென்னை ஐஐடி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக மாடல் வண்டியை பயன்படுத்தி உணவு டெலிவரி செய்து வருகிறார் இவர்.

“என்னைப் பார்த்தால் மாற்றுத்திறனாளி மாதிரியே சுத்தமாகத் தெரியாது. அந்த அளவுக்கு என் அவுட் லுக்கை கெத்தாக வைத்திருப்பேன்” என்கிற ரிஹானா, பார்க்க ஸ்டைலாக உடை உடுத்தி… கூலர் அணிந்து… நேர்த்தியான அழகுடனே எப்போதும் வலம் வருகிறார். ரிஹானாவை பார்க்கும் நமக்கும் வாழ்க்கை மீதான நம்பிக்கை பசக்கென ஒட்டிக்கொள்கிறது.

‘‘தமிழ்நாட்டில், அதுவும் தலைநகர் சென்னையில் உணவு டெலிவரி செய்கிற முதல் மாற்றுத்திறனாளிப் பெண் நானாகத்தான் இருப்பேன்’’ என்றவர், ‘‘சென்னையின் சாலைகளில் நடந்து போகணும்… மழையில் நனையணும்… வெயிலை உணரணும் என்றெல்லாம் எனக்கு ஆசைகள் உண்டு. இப்ப என் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை.

ஆண்டுக்கணக்காய் கூண்டுக்குள் அடைபட்ட பறவையை, இனி நீ எங்கும் பறக்கலாம் எனக் கூண்டை திறந்துவிட்ட ஃபீலிங்தான். டிராஃபிக் நெரிசலில், வண்டியோடு சாலைகளில் என்னைப் பார்ப்பவர்கள், என்ன வண்டி இது? எதுவும் புது மாடலா… என வண்டியின் மீதே கவனம் வைப்பர். பிறகுதான் இது வீல்சேர் பேஸ்டு வண்டி. நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை உணர்கிறார்கள்…’’ புன்னகைக்கிறார் ரிஹானா.

‘‘நான் படிக்கும்போதே இந்த வண்டிய கண்டுபிடிச்சுருந்தா இன்னேரம் டபுள் டிகிரி வாங்கியிருப்பேன். படிப்பு மேல எனக்கு அவ்வளவு ஆசை’’ என்றவர், 10ம் வகுப்பில் 413 மதிப்பெண் எடுத்திருக்கிறார். ‘‘அடுத்து +2 படிக்க முயற்சித்தபோது எனக்கான வகுப்பறை மாடியில் இருந்தது. தினமும் மாடிப்படிகளில் என்னைத் தூக்கிச் சென்று அமரவைக்க என் சகோதரி ரொம்பவும் கஷ்டப்பட்டதால் நானே படிப்பை நிறுத்திட்டேன்…’’ படிக்க முடியாமல் போனதின் ஏக்கம் ரிஹானாவின் விழிகளில் அப்பட்டமாய் தெரிகிறது.

‘‘நான் நினைக்கிற இடத்திற்கு அழைத்துச் செல்லும் கால்கள் இப்போதைக்கு இந்த வண்டிதான். நியோமோஷன் (NEOMOTION) என்கிற நிறுவனம் சொமோட்டோ ஃபுட் டெலிவரியோடு டைஅப் செய்து, என்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகளை தேடிக் கண்டுபிடித்து வண்டியோடு வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தருகிறார்கள். வண்டி என் கைக்கு வந்து நான்கு மாதம் ஆச்சு. டிரைவிங் தெரியாம, ரோட் நாலேஜ் இல்லாமலேதான் ஓட்ட ஆரம்பிச்சேன்.

ஓட்ட ஓட்ட எல்லாமே புரிய ஆரம்பிச்சுறுச்சு. வண்டியும் ஓட்ட சுலபமா இருக்கு. ஒரு லட்சத்திற்கு மேல் விலையுள்ள வண்டிய எனக்கு இலவசமாக கொடுத்திருக்காங்க. அதற்கு பதிலாக ஆறு மாதம் சொமோட்டோ நிறுவனத்தில் உணவு டெலிவரி வேலையை கட்டாயம் செய்ய வேண்டும் என்பது கண்டிஷன். இதில் வரும் ஊதியம் முழுமையாக எனக்குத்தான் என்றாலும், எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகளை வெளியே கொண்டு வருவதுதான் நிறுவனத்தின் நோக்கம்’’ என்கிறார் ரிஹானா.

‘‘வீட்டைவிட்டு வெளியில் வராமல் இருந்த என்னை, இன்று யார் துணையும் இன்றி பல்வேறு இடங்களுக்கும் பயணிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்த நியோமோஷன் நண்பர்களுக்கும், சொமோட்டோ நிறுவனத்திற்கும் நன்றி’’ என்றவர், ‘‘ஈசிஆர் சாலையில் தொடங்கி திருவான்மியூர், அடையார், பெருங்குடி, ஓ.எம்.ஆர், தரமணி, வேளச்சேரி வரை இந்த வண்டியிலேயே பயணிக்கிறேன்’’ என்கிறார் தம்ஸ்அப் காட்டி.

‘‘உணவு டெலிவரியில் ஒரு ஆர்டருக்கு 20 முதல் 22 ரூபாய் வரை எனக்குக் கிடைக்கும். மதிய நேரத்தில் ஆர்டர்கள் அதிகம் வரும்போது ஒரு ஆர்டருக்கு 30 முதல் 45 வரையும் கூடக் கொடுக்கிறார்கள். 7 நாளும் வேலை உண்டு. மதியம் வண்டியை எடுத்தால் மாலை வரை டெலிவரி இருக்கும். ஒரு நாளைக்கு 6 முதல் 7வரை டெலிவரி செய்கிறேன். வீடு பக்கம் பக்கமாக அமைந்தால் 10 வரை டெலிவரி செய்ய முடியும். வாரத்திற்கு 1000 வரை இதில் சம்பாதிக்கிறேன். ஆர்டர்களை உணவகங்களில் எடுப்பதற்கான வெயிட்டிங் ஹவர்ஸ் இதில் அதிகமாகிறது. சில ஆர்டர்கள் வெவ்வேறு திசைகளில் இருந்தும் வரும்’’ என்றவரிடம், சென்னை நெரிசலில் வண்டி ஓட்டுவது சவாலாக இல்லையா என்றதற்கு?

‘‘30 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்துட்டேன். அதனால் வெளியில் கிடைக்கும் எல்லா விஷயங்களையும் சந்தோஷமாக ஏத்துக்கறேன். நெரிசல், கூட்டம், டிராஃபிக்ஜாம் இதற்கெல்லாம் பெரிதாக நான் அலட்டிக்கொள்வதே இல்லை. மழையோ, வெயிலோ எனக்கு அது பெரிய மேட்டரே கிடையாது. என் மேல் விழுகாமலே இருந்த மழைத்துளியும், என் மேல் படாமலே இருந்த வெயிலும் சந்தோஷத்தையே எனக்குத் தருது.

25 கி.மீ. வரை பயணிக்க பேட்டரி வண்டியில் நிற்கும். சார்ஜ் குறைந்தால் அனுமதிக்கும் கடைகளில் சார்ஜ் போட்டுக்கொள்வேன். மொபைல் சார்ஜ் செய்வது மாதிரி நார்மல் பிளெக்பாயின்ட்தான் இதற்கு. பெரிதாக கரென்ட் செலவு கிடையாது. வண்டியை ரிவர்ஸ் எடுக்க ரிவர்ஸ் பட்டன் உண்டு. ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்க கியர் பட்டனும் இருக்கிறது. பள்ளத்தில் வண்டி மாட்டினாலும் மூன்றாவது கியரைத் தட்டி வேகத்தைக் கூட்டலாம்.

சூப்பர் மார்க்கெட், மால்கள், சினிமா தியேட்டரென டெலிவரிக்கு செல்லும்போது முகப்புவரை சென்று, உள்ளே நுழையும்போது மோட்டாரை முன்பக்கத்தோடு தனியாகப் பிரித்து லாக் செய்து வைத்துவிட்டு, பின் பகுதியை வீல்சேராக பயன்படுத்தி உள்ளே செல்லலாம். இதுவொரு டிடாச்சபிள் (detachable) வண்டி.

ஃபுட் டெலிவரி வேலையில் எவ்வளவு பாஸிட்டிவிட்டி இருக்கோ அந்த அளவுக்கு நெகட்டிவ்களும் உண்டு. பள்ளங்களில் வண்டி மாட்டும்போது ஏதாவது இரண்டு கரங்கள் என் பின்னால் வந்து, வண்டியை தள்ளிவிட்டு, நான் சொல்லும் நன்றியை எதிர்பார்க்காமலே கூட்டத்தில் மறைவதை தினம் தினம் பார்க்கிறேன். அதேநேரம் ஒருசில ஆட்டோக்காரர்கள் நான் ஓரமாகச் சென்றாலும் “ஓரமா போம்மா…” என்பது மாதிரியான கமென்ட்களை அசால்டாக அள்ளி வீசுவார்கள். அவர்களின் பார்வை “எதுக்கு இந்த வண்டிய எடுத்துக்கிட்டு ரோட்டுக்கெல்லாம் இது வருது” என்பது மாதிரி அலட்சியமாகவே இருக்கும்.

‘‘அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகளின் ஆர்டர்களை அவர்கள் ப்ளோர் வரை சென்று கொடுக்க என்னால் முடியாதுதான். அப்போது நான் வீல்சேர் பெர்ஷன் எனச் சொன்னால், சிலர் கீழேயே வந்து வாங்கிச் செல்வார்கள். ஒருசிலர் மட்டும் “நீயெல்லாம் எதுக்கு உணவு டெலிவரி வேலைக்கு வந்த” என்கிற மாதிரி முரண்படுவார்கள்’’ என்கிற ரிஹானா, ‘‘நாங்களும் மனுஷங்கதானே… எனக்கான உணவு, உடை, இருப்பிடம், பொருளாதாரத்தை நான்தானே தேடிக்கணும். நாங்க வாழ வேண்டாமா?’’ என்கிற கேள்வியை அழுத்தமாகவே முன்வைக்கிறார்.

‘‘முதுகுத் தண்டுவடத்தில் இருந்தே எனக்கு பாதிப்பு என்பதால், சுத்தமாக நடக்க முடியாது. தவழ்ந்துதான் வீட்டுக்குள் செல்வேன். துவக்கத்தில் என் இயலாமையை அடுத்தவர் முன் காட்டத் தயங்கி ஒதுங்கியே இருந்தேன். ஏன் மற்றவர் முன் என்னை மறைக்கணுமென யோசித்து, என் தயக்கத்தை நானே உடைத்தேன். கால்களால் பிறர் நடக்குறாங்க. என்னால அது முடியல. எது எனக்கு வருதோ அதை முயற்சிக்கிறேன்’’ என நான்ஸ்டாப்பாய் பேசும் ரிஹானா, எப்போதும் சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்.

‘‘நம்மால முடியாதுன்னு எதுவுமே இல்லை. முடியாதுன்னா மழை நீரிலும் கால் வைக்க முடியாது. முடியும்னா சந்திர மண்டலத்திலும் கால் வைக்கலாம். மனசுதான எல்லாத்துக்கும் காரணம். இந்த வேலைய எப்படி நான் செய்ய முடியும் என்றே மாத்தி யோசிப்பேன்’’ என்கிற ரிஹானா, மரத்தால் ஆன ஒரு சதுர வடிவ வண்டியில் நான்கு முனைகளிலும் சக்கரத்தைப் பொருத்தி அதில் அமர்ந்து வீட்டுக்கும் வாசலுக்குமாக நகர்கிறார்.

பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சேரை நகர்த்தி, வீட்டை சுத்தம் செய்து துடைப்பது… வாசல் பெருக்குவது… துணி துவைத்து காய வைப்பது… சமையல் செய்வதென… எப்படி தன்னால் வேலைகளை செய்ய முடியுமென யோசித்து, அதற்கேற்ற சாதனங்களை உருவாக்கி பயன்படுத்துகிறார். உயரத்தில் இருக்கும் சுவிட்சுகளை ஆன் செய்யக்கூட யாரையும் எதிர்பார்க்காமல் நீண்ட குச்சியை பயன்படுத்துகிறார். தனக்கான ஆடைகளை பவர் மெஷினில் அவரே வடிவமைக்கிறார். தன்னம்பிக்கையோடு உழைப்பவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்களே… பெருமைப்படுத்தப்பட வேண்டியவர் ரிஹானா சுல்தான்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

You may also like

Leave a Comment

11 + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi