Sunday, May 26, 2024
Home » பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே!

பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே!

by Kalaivani Saravanan

வைகுண்ட ஏகாதசி 23-12-2023

ஏகாதசி பிறந்த கதை

முரன் என்னும் அசுரன் தன்னுடைய வர பலத்தால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் தொல்லை அளித்து வந்தான். அவனை அழித்து தங்களை காக்குமாறு தேவர்கள் ஈசனைத் துதித்தனர்.

“நீங்கள் மகாவிஷ்ணுவை சரணடைந்தால், உங்கள் துன்பம் தீரும்” என்று கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவைச் சரணடைந்தனர். அவர்களைக் காக்க எண்ணிய மகாவிஷ்ணு, முரனோடு பெரும் போர் புரியத் தொடங்கினார். 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது போர். ஒரு கட்டத்தில் மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து சற்று ஓய்வெடுத்தார். அந்த நேரத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ‘முரன்’ பகவானைத் கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி, ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்துச் சாம்பலாக்கியது.

பகவான் நாராயணனிடமிருந்து, பதினோராம் நாள் தோன்றிய அந்த சக்திக்கு “ஏகாதசி” என பகவான் பெயரிட்டார். இந்த நாளில் விரதம் இருந்து போற்றுவோருக்கு, சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து, தன்னுள் அந்த அந்த சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே, ஏகாதசி என்பது பகவானின் சக்தியே. அன்று விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி என்று ஏன் பெயர்?

மார்கழி மாத ஏகாதசிக்கு “வைகுண்ட ஏகாதசி” என்று பெயர். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த வரலாறு `ஸ்ரீபிரஸன்ன சம்ஹிதையில்’ தெரிவிக்கப்படுகின்றது. நாராயணன் பிரளயத்துக்குப் பின்னர், ஆலிலையின் மேல் பள்ளிகொண்டு, தம்முடைய நாபிக் கமலத்தில் இருந்து, உலகத்தைப் படைப்பதற்காக நான்முகக் கடவுளை படைத்தார். ஸ்ரீமன் நாராயணனின் பிள்ளை பிரம்மா என்று புராணங்கள் கூறுகின்றன. பிரம்மாவிடம் வேதத்தைக் கொடுத்து உலகத்தைப் படைக்கச் சொன்னார்.

வேதத்தினை ஆதாரமாகக் கொண்டு நான்முகன் உலகங்களையும், உலகத்தின் உயிர்களையும் படைக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் தன்னால் மட்டுமே இந்த உலகத்தை படைக்க முடியும் என்கின்ற ஒரு ஆணவம் நான்முகனுக்கு வந்துவிட்டது. ஒருவருக்கு வந்த ஆணவம், சரியான நேரத்தில் போகாவிட்டால், ஆணவமே அவரை அழித்துவிடும் என்பதை உணர்ந்த ஸ்ரீமன் நாராயணன், நான்முகனின் ஆணவத்தை அழிக்க திருவுள்ளம் கொண்டார். மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்களை அனுப்பி வைத்தார். இருவரும் பிரம்மாவின் கையிலிருந்த வேதத்தை அபகரித்துக் கொண்டு மறைந்துவிட்டனர்.

கைப்பொருளை இழந்த நான்முகன், படைக்கும் வழி அறியாது தவித்தார். திகைத்தார். தன் தவறை உணர்ந்தார். திருமாலிடம் சென்று முறையிட்டார். தனக்கு வேதங்களை மீட்டுத் தருமாறு வேண்டி நின்றார் ஹயக்ரீவ அவதாரமும், வைகுண்ட ஏகாதசியும் திருமாலும், ஹயக்ரீவராக அவதரித்து, மது கைடபர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். மனித உடல் அமைப்பில், வெள்ளைக் குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது. மதுகைடபர்கள் பெருமாளிடம் தங்களுக்கு வைகுண்டம் தருமாறு பிரார்த்தனை செய்தனர். அவர்களிடம் பகவான்,

‘‘மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி
அன்று உங்களுக்கு மோட்சம் தருகின்றேன்’’ என்று வாக்களித்தார்.

முதல் ஏகாதசி

பொதுவாக ஏகாதசி விரதம் மார்கழியில் துவங்கி கார்த்திகையில் முடியும். மார்கழியில் இரண்டு ஏகாதசிகள் வரும். வளர்பிறை ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசி அல்லது வைகுண்ட ஏகாதசி என்று பெயர். தேய்பிறை ஏகாதசிக்கு உற்பத்தி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசிதான் முதல் ஏகாதசி.

பகல் பத்து உற்சவம் எப்படி வந்தது?

திருவரங்கத்தில் அப்பொழுது மார்கழிமாத உற்சவ காலம் வந்தது. நாதமுனிகள் யோசித்தார். நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு இத்தனை ஏற்றத்தை திருமங்கையாழ்வார் செய்தாரே, அந்த திருமங்கையாழ்வார் ஈரத் தமிழில் பாடிய பிரபந்தங்களையும், மற்ற ஆழ்வார் பிரபந்தங்களையும் இணைத்து இவ்விழாவை விரிவாக்கினால் என்ன என்று நினைத்தார். திருவாய் மொழியைத் தவிர, மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களும் பத்து நாட்கள் பாட வேண்டும் என்று, ஏகாதசிக்கு முன்னதாக பத்து நாட்களைச் சேர்த்தார்.

மற்ற ஆழ்வார்களின் பாடல்களை பிற்பகலில் பாடுவதால் இத்திருநாட்கள் “பகல் பத்து உற்சவம்” என்று அழைக்கிறார்கள். நிறைவாக இயற்பாவையும் சேர்த்தார். இயலும், இசையும், அபிநயமுமாக 21 நாட்கள் இந்தத் திருநாள், திருமொழி திருநாள், திருவாய்மொழி திருநாள் என்ற பெயரோடு மாறியது. 21 நாட்கள் முத்தமிழ் விழாவாகவே நாதமுனிகள் வடிவமைத்தார்.

சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு

மார்கழி மாத ஏகாதசி அன்று வைகுண்டத்தின் வடக்கு வாசல் கதவைத் திறந்து மது கைடபர்களை உள்ளே அனுமதித்தார். அதனால் மது கைடபர்களுக்கு வைகுண்டம் தந்த ஏகாதசி என்பதால் “வைகுண்ட ஏகாதசி” என்று சொல்கின்றார்கள். அன்று மது கைடபர்கள், “இந்த நல்ல நாளிலே யாரெல்லாம் விரதம் இருப்பார்களோ, அவர்களுக்கும் இந்த வைகுண்டம் அளிக்க வேண்டும்” என்று வேண்ட, திருமால் அதற்கு இசைந்தார்.

எனவேதான், மார்கழி மாத ஏகாதசியில் பெருமாள் கோயில்களில் உள்ள வடக்கு வாசல் கதவை, வைகுண்ட வாசலாகக் கருதி, மக்கள் பயபக்தியோடு, அந்த வழியாகச் சென்று பெருமாளை வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்கின்றனர். ஒருவகையில் இது நிஜமான வைகுண்டத்தை அடைவதற்கு முன் நடக்கும் ஒத்திகையைக் காட்ட வந்த விழா என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இராபத்து திருநாள்

அழகிய மணவாளன் மண்டபத்தில் நம்மாழ்வாரை எழுந்தருளச் செய்து, பத்து நாட்கள் திருவாய்மொழியை, திருமங்கையாழ்வார் தேவகானத்தில் அபிநயத் தோடு இசைத்தார். பத்தாம் நாள் வேதங்களைச் சொல்லி முடித்த பிறகு, இரவு திருவாய் மொழியைப் பாடி முடித்து, நம்மாழ்வார், பெரிய பெருமாளின் திருவடிகளில் சேர்ந்ததை, ஒரு நாடகமாக நடித்துக் காண்பித்தார். அழகிய மணவாளனையும் நம்மாழ்வாரை ஏக ஆசனத்தில் இருத்தினார்.

திருவாய்மொழியின் ஈழத்தமிழை கேட்டு உகந்த பெருமாள், நம்மாழ்வாருக்கு மாலைபிரசாதம், கஸ்தூரி திருமண் காப்பு முதலியவைகளைத் தந்து ஆழ்வாருக்கு விடை தர ஆழ்வார், திரும்ப தன் ஆஸ்தானமான திருநகரிக்கு மேள, தாள, பல்லக்கு மரியாதைகளுடன் புறப்பட்டார். ஆழ்வார் திருநகரியில் சேர்த்துவிட்டு திரும்ப வருகின்ற பொழுது தை மாதம் அஸ்த நட்சத்திரம் ஆகிவிடும். இந்த உற்சவம் திருமங்கை ஆழ்வார் காலம் வரையில், வருடா வருடம் இதே முறையில் நடந்தது. அப்பொழுது 10 நாட்கள் மட்டுமே இரவில் திருவாய் மொழியைப் பாடுகின்ற திருவாய்மொழித் திருநாளாக நடைபெற்றது. இதனை இரவில் நடத்துவதால் இராபத்து திருநாள் என்று பெயர்.

மோட்ச உற்சவம் என்றால் என்ன?

வளர்பிறை ஏகாதசி முதல் பஞ்சமி முடிய 10 நாட்கள் நடத்த வேண்டிய உற்சவத்திற்கு ‘‘மோட்ச உற்சவம்’’ என்று பெயர். அத்யயன உற்சவம் பகலில் செய்ய வேண்டிய உற்சவம். மோட்ச உற்சவம் இரவில் செய்யவேண்டிய உற்சவம். இந்த உற்சவங்களில் பகவானை மண்டபத்தில் எழுந்தருளச் செய்து உற்சவங்களை நடத்த வேண்டும். ஏகாதசியன்று பகவத் சந்நதிகளில், வேதங்களை ஆரம்பித்து, பத்து நாட்கள் தொடர்ச்சியாக நடத்தி, பத்தாவது நாளில் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஆகமங்களில் சொல்லப்பட்ட விதி. திருமங்கையாழ்வார் காலம் வரையிலும் இந்த விதிப்படியே நடந்தது.

வேடுபறி உற்சவம்

இராப்பத்து, எட்டாம் திருநாள் “வேடுபறி உற்சவம்” நடைபெறும். `வேடர் பறி உற்சவம்’ என்றும் சொல்வார்கள். திருமங்கை ஆழ்வார் ஒரு காலத்தில், பெருமாளை வழி மறித்து, நகை பறித்த நிகழ்ச்சி நடத்திக் காட்டப்படும்.

“மாலைத் தனியே வழி பறிக்க வேணும் என்று
கோலிப் பதிவிருந்த கொற்றவனே வேலை
அணைத்து அருளும் கையால் அடியேன்
வினையைத் துணித்து அருள வேணும் துணிந்து’’

– என்பது இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் ஸ்ரீசோமாசி ஆண்டான் அருளிச் செய்த தனியன்.

வேடுபறி உற்சவம் வெகு கோலாகலமாக இருக்கும். பெருமாளைத் தூக்கிக் கொண்டு முன்னும் பின்னும் ஓடுவதும் திரும்புவதும் என அற்புதமாக இருக்கும். அன்று சந்நதி வாசலில் பெருமாள் குதிரை வாகனத்தில் கிழக்குமுகமாக எழுந்தருளி இருப்பார். அன்று பரமபதவாசல் வழியாகப் பெருமாள் செல்ல மாட்டார். பெருமாள் புறப்பாடாகி கோயிலின் கிழக்குப் பக்கமுள்ள மணல் வெளிக்குச் செல்வார். அங்கே நீண்ட நடை கொட்டகை போடப்பட்டிருக்கும்.

பெருமாளுடைய குதிரைக்கு கடலைச் சுண்டலும், பெருமாளுக்கு பாசிப்பருப்பு, பானகமும் திருவமுது (நிவேதனம்) ஆகும். அப்போது திருமங்கையாழ்வார் வந்து பெருமானைச் சுற்றிக் கொண்டு போவார். வழிப்பறி நாடகம் கோலாகலமாக நடக்கும். பிறகு திருமங்கை ஆழ்வாருக்கு திருஎட்டெழுத்து மந்திர உபதேசம் ஆகி, பெரிய திருமொழி முதல் பதிகம் சேவிக்கப்படும்.

மோகனா அவதாரம்

பகவான் மோகினி அவதாரம் செய்வதற்கு ஒரு சரித்திரம் உண்டு. மார்கழி சுக்ல தசமி அன்று திருப்பாற்கடல் கடையப்பட்டது என்கிறார்கள். அன்று தேவர்களுக்கு அமுதம் தர பகவான் மோகனா (மோஹினி) அவதாரம் எடுத்தார். அதற்காகவே மோஹினி அலங்காரம் செய்யப்படுகிறது. இன்னொரு விதத்தில் திருமங்கை ஆழ்வார் தன்னை நாயகியாக பாவித்துக் கொண்டு “கள்வன் கொல்” என்ற பதிகத்தை அருளிச் செய்தார். இப்பொழுதும் திருநகரியில் (திருவாலி) திருக்கார்த்திகை உற்சவத்தில், ஆழ்வார் நாயகி பாவத்தில் பெண்வேடம் போட்டுக் கொண்டு, பெருமாளுடன் ஏக ஆசனத்தில் இருப்பார்.

திருமங்கை யாழ்வாரின் இந்த நாயகி பாவத்தை பார்த்த பெருமாள், தனக்கும் இந்த கோலத்தை ஆதரித்து அலங்காரம் செய்து கொண்டார் என்றும் சொல்கிறார்கள். பகல் பத்து பத்தாம் திருநாள் அன்று பகவானுக்கு இந்த அவதார அலங்காரத்தைச் செய்வார்கள். இதற்கு “நாச்சியார் திருக்கோலம்” என்றும் பெயர். பெருமாள் நாச்சியாராக அலங்கரித்துக் கொண்டு கருட மண்டபம் வந்து காட்சி தருவார்.

திருக்கைத்தல சேவை

இராப்பத்து உற்சவம், ஏழாம் நாள், கைத்தல சேவை என்று ஒரு சேவை உண்டு. அன்றைய தினம் பெருமாள் அதிகமான திருவாபரணங்கள் சாத்திக் கொள்ள மாட்டார். திருவாய்மொழி ஏழாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி, ‘‘கங்குலும் பகலும்’’ சேவிக்கப்படும். நாச்சியார் விஷயமாக ஸ்ரீஸ்தவம், ஸ்ரீகுண ரத்னகோஸம் சேவிக்கப்படும். பெருமாள் அர்ச்சகர்களின் திருக்கரங்களில் எழுந்தருளி திருமாமணி மண்டபத்தின் மேல் குறட்டுக்கு வந்து, ஆழ்வாருக்கு சேவை சாதிப்பார். இப்படி அர்ச்சகர்களின் கையில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி “கைத்தல சேவை” எனப்படும். கைத்தல சேவைக்காக உத்தம நம்பி சமர்ப்பிக்கும் சர்க்கரைப் பொங்கல், பெருமாளுக்கு அமுது செய்விக்கப்படும்.

அரையர் சேவை

திருமங்கையாழ்வார் காலத்திலும் சரி, நாதமுனிகள் காலத்திலும் சரி, திருவரங்கத்தின் பெருவிழாவாக, மார்கழித் திருவிழா முத்தமிழ் விழாவாகவே மலர்ந்திருந்தது. இந்த மூன்று தமிழையும் உள்ளடக்கிய ஒரு தொண்டு “அரையர் சேவை” என்று அழைக்கப்படுகிறது. அரையன் என்றால் அரசன் என்று பொருள். (புள் அரையன் கருடன்). இப்பொழுது தமிழகத்தில் திருவரங்கம் திருவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி ஆகிய திருத்தலங்களில் இக்கலை வடிவம் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாகவும் பின்பாகவும் இந்த அரையர் சேவை நடக்கும். நாதமுனிகள் ஆழ்வார்களின் பாசுரங்களைப் பரப்புவதற்காக தமது மருமக்களாகிய மேலை அகத்து ஆழ்வான், கீழை அகத்து ஆழ்வான் ஆகிய இருவருக்கும் இசையுடன் பாசுரங்களைக் கற்றுக் கொடுத்தார். அவர் வழியினர்களே, இசை நாடக அபிநயத்தோடு பாசுரங்களைப் பாடும் “அரையர்கள்.” அரையர் சேவையின் மிக முக்கியமான விஷயம் மேடை இருக்காது. இறைவன் முன்னால் பிரபந்தப் பாடல்களை இசையோடு பாடுவார்கள். அவர்கள் கையில் உள்ள ஒரு தாளத்திற்கு நாத முனிகள் என்று பெயர்.

ஒரு தாளத்திற்கு நம்மாழ்வார் என்ற பெயர். தலையில் வெல்வெட்டால் செய்யப்பட்ட குல்லாய் அணிந்திருப்பார்கள். நாதமுனிகள் பேரரான ஆளவந்தார் தம்முடைய குமாரனுக்கு திருவரங்கப் பெருமாள் அரையர் என்று பெயர் சூட்டினார். திருவரங்கப் பெருமாள் அரையர் ராமானுஜரின் ஐந்து ஆசிரியர்களில் ஒருவர். இந்த அரையர்கள் திருவரங்கத்தில் முத்தமிழ் கைங்கரியத்தைச் செய்வதற்காகவே இருந்தனர். வரம் தரும் பெருமாள் அரையர் ‘‘நாத வினோத அரையர்’’ என்ற அருளப் பாடுகள் உண்டு.

பெருமாள் கேட்கும் வீணை

பெருமாளுக்கு `வீணை ஏகாந்தம்’ என்ற ஒரு இசை சமர்ப்பணம் உண்டு. பெருமாள் வெளியே மண்டபத்திலிருந்து தன்னுடைய ஆஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது ஏகாந்த வீணை வாசிக்கப்படும். இதற்கென்றே வீணை வாசிக்கக்கூடிய பரம்பரை பெரியவர்கள் உண்டு. அவர்களுக்கு வீணை மிராசுகாரர்கள் என்று பெயர். பெரிய திருநாளில் தினம்தோறும் ராத்திரி உள்ளே சங்கீதம் கேட்பதற்காக மௌனமாய், அழகாய், அசைந்து, நம்பெருமாள் படி ஏறுவார் என்று வியாக்கியானத்தில் வருகின்றது. ரத்னாங்கி சேவையும், முத்தங்கி சேவையும், வைகுண்ட ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பரமபத ஏகாதசி, அத்யயன உற்சவம் என்று பல பெயர்களால் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி அன்று மது கைடபர்களை, நம்பெருமாள், உத்தர துவார மார்க்கமாக (பரமபத வாசல், வடக்கு வாசல்) வழியாக மோட்சம் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

அன்று பெருமாள் ரத்னாங்கி சாத்திக் கொண்டு தம்முடைய திவ்யமான வடிவழகைக் காட்டி அருளுவார். இதைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திருவரங்கத்தில் திரள்வார்கள். விலை உயர்ந்த துப்பட்டாவை சமர்ப்பித்து அரங்கனின் திருவருளைப் பெறுவார்கள். பெருமாள் பகிரங்கமாக துப்பட்டா சாத்தி கொள்ளும் சந்தர்ப்பம் இது. ஏகாதசி தினமும், அதை அடுத்த சில தினங்களும் முத்தினால் செய்த அங்கியை மூலவர் அணிந்து கர்ப்பக் கிரகத்தில் காட்சி தருவார். இந்த சேவையை “முத்தங்கி சேவை” என்று சொல்கிறார்கள்.

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi