Friday, May 10, 2024
Home » கடந்த ஒன்பது ஆண்டுகாலத்தில் பாஜ அரசு செய்த 37 துரோகத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப திமுக முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

கடந்த ஒன்பது ஆண்டுகாலத்தில் பாஜ அரசு செய்த 37 துரோகத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப திமுக முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

by Karthik Yash

சென்னை: கடந்த ஒன்பது ஆண்டுகால பாஜ அரசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள 37 துரோகத்தை பட்டியலிட்டதோடு, தமிழ்நாட்டு மக்களை புறக்கணித்து ஏமாற்றியதை நாடாளுமன்ற கூட்ட தொடரில் உரக்க குரலெழுப்புவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20ம் தேதி தொடங்க உள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 11 வரையில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட அனைத்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். எழுப்ப வேண்டிய மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: கடந்த ஒன்பது ஆண்டுகால பாஜக அரசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, தமிழ்நாட்டை- தமிழ்நாட்டு மக்களை புறக்கணித்து ஏமாற்றியதை வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உரக்கக் குரலெழுப்புவோம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதில் விளம்பரத்தில் மோகம்; ‘வங்கி கணக்கு ஒவ்வொன்றிலும் “15 லட்சம் ரூபாய் போடுவதற்கு பதில்” ஒவ்வொரு குடும்பத்திலும் விதவிதமான வரி வசூல். “மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வரிப் பங்களிப்பில் உரிய நிதி வழங்காமல் வஞ்சிப்பது.

“பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைப்புக்குப் பதில்” இந்த மூன்றின் விலையையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தியது; “ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்பு வழங்குவதற்கு பதில்” ஒட்டுமொத்த இளைஞர்களையும் வேலையில்லா திண்டாட்டத்தில் கொண்டு வந்து விட்டது; ‘‘கூட்டுறவு கூட்டாட்சி” என்று கூறிவிட்டு-மாநில அரசுகளை முனிசிபாலிட்டிகளாக ஆக்கிவிட துடிப்பது; ‘உழவர்களின் தோழன்’ என்று கூறிக்கொண்டே அவர்கள் வாழ்க்கையை – வாழ்வாதாரத்தை குழி தோண்டி புதைக்கும் உழவர்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியது-எதிர்த்து போராடிய உழவர்களை அலட்சியம் செய்ததும், பின் அனைத்துத் தரப்பு எதிர்ப்பினை கண்டு பயந்து பின்வாங்கியது; ஏழைகளுக்கு கடனளிக்க எந்த திட்டமும் இல்லை நம் இந்திய நிதி அமைச்சரிடம்;

ஆனால், பா.ஜ.வால் கார்பரேட் முதலாளிகளின் கண்ணசைவில் இயங்கும் கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடிகள்-வரிச் சலுகைகள் வழங்குவது; எல்.ஐ.சி முதல் ஏர்இண்டியா வரையிலான பொதுத்துறை நிறுவனங்களை தனியார் முதலாளிகளுக்கு விற்பதில் ஆர்வம் காட்டுவது; கேஸ் சிலிண்டர் தொடங்கி மூக்குபொடி வரை ஜி.எஸ்.டி. போடுவது; மணிப்பூர் மாநிலமே பற்றி எரிகிற போது உலகம் சுற்றி அறிவுரை கூறுவது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை போற்றிப் பாதுகாப்பதற்குப் பதில், அதை தகர்த்தெறியும் பணியை அன்றாட நடவடிக்கையாக மேற்கொண்டு வருவது; அரசியல் சட்ட அமைப்புகளின் தன்னாட்சியை கட்டிக் காப்பதற்கு பதில் அமலாக்கத்துறை, சிபிஐ, ஒன்றிய விழிப்புணர்வு ஆணையம், தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், வருமான வரித்துறை, நீதித்துறை என அனைத்தின் சுதந்திரத்தையும் பறித்து இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்திற்கே ஆபத்தை உருவாக்கி வருவது;

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒரே என்ற முழக்கத்துடன் அனைத்தையும் மாற்றி வருவது; நடுநிலையான ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என்ற சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைக்குப் பதில், அரசியல் சட்ட பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் எண்ணம் உள்ளவர்களை ஆளுநர்களாக நியமித்து எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை முடக்குவது. மாநிலத்தின் நிர்வாகச் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்குப் பதில் உச்சநீதிமன்ற தீர்ப்பையே திருத்தும் வகையில் டெல்லியில் அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவது; மண்ணைத் தொட்டு வணங்கிய நாடாளுமன்றத்தின் மாண்பை காப்பதற்கு பதில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் யாரையும் மாற்றுக் கருத்து பேச விடாமல் – பிரதான எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கும் செவி சாய்க்காமல் -நாடாளுமன்ற மாண்பை சிதைத்துள்ளது; அதானி குழுமத்தின் மெகா முறைகேடு பற்றிய இண்டென்பர்க் அறிக்கை குறித்த விவாதத்தை, நாடாளுமன்றத்தில் அனுமதிக்க மறுப்பது;

ஆரோக்கியமான மற்றும் வலுவான ஜனநாயகம் என்று கூறிவிட்டு – நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்குவது; தொன்று தொட்டு நிலைநாட்டப்பட்டு வந்த சமூக நீதியை அடியோடு ஒழிக்க பொருளாதாரத்தின் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது. அனைவருக்குமான அரசு என்ற நிலைக்குப் பதில், சிறுபான்மையினரை நசுக்க-அவர்களின் உரிமைகளை பறிக்க பா.ஜ. ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் உச்சகட்டமாக, இப்போது பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று தேர்தல் முழக்கத்தில் இறங்கியிருப்பது;

அனைத்திற்கும் மேலாக இந்தியாவின் குடியரசுத் தலைவரையே இந்திய நாடாளுமன்றத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு அழைக்காமல் புறக்கணித்தது. தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில், தொழிலாளர் நலச் சட்டங்களை, நான்கு சட்டங்களாக ஒருங்கிணைத்து தொழிலாளர்களை வஞ்சிப்பது, என ஜனநாயக இந்தியா – சமத்துவ இந்தியா- சமூக நீதி இந்தியா – பன்முகத்தன்மையின் பூந்தோட்டமாக இருக்கும் இந்தியா என்பது பா.ஜ.வின் வெறுப்பு அரசியலால் – சனாதன அரசியலால் – இன்று எதேச்சாதிகார இந்தியாவாக மாற்ற இன்னொரு முறை வாக்களியுங்கள் என்று விரைவில் பிரதமர் மோடி அவர்களும் – அவரது சகாக்களும் வரப் போகிறார்கள். ஆனால், முதல் ஐந்து ஆண்டுகளிலும் சரி – இந்த ஐந்து ஆண்டுகளிலும் சரி தமிழ்நாட்டிற்கு பா.ஜ. அரசு தந்தது என்ன?

* ஜி.எஸ்.டி இழப்பீடு பறிப்பு;
* மின்கட்டணத்தை ஏற்றும் உதய் திட்டம்;
* ஒற்றைச் செங்கல்லுடன் எய்ம்ஸ் மருத்துவமனை;
* தமிழ்நாட்டிற்கும் – தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராகச் செயல்பட ஒரு ஆளுநர்;
* பொது விநியோகத்திற்குத் தேவையான கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு, அரிசி குறைப்பு. மான்யங்கள் குறைப்பு;
* திட்டங்களுக்கு ஓன்றிய அரசின் நிதி பங்கு குறைப்பு;
* நிதி ஆணையத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி குறைப்பு;
* மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதலும் தராமல் – நிதியும் அளிக்காமல் இழுத்தடிப்பது;
* ரயில்வே திட்டங்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது;
* தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் மருத்துவம் படிக்க கூடாது என கொண்டு வந்த நீட் தேர்வு;
* தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் – ரயில்வே உள்பட, தமிழ்நாட்டு இளைஞர்களையே வேலைக்கு அமர்த்தக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவது;
* அன்னைத் தமிழ் மொழியை அடியோடு புறக்கணித்து – சமஸ்கிருதத்தையும், இந்தியையும் மடியில் வைத்து சீராட்டிக் கொண்டிருப்பது – தமிழைப் புறக்கணித்து இந்தியைத் திணிக்கத் திட்டம் போட்டு பணியாற்றுவது;
* தமிழ்மீது காதல் என்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி-நம் இளைஞர்களை தமிழில் போட்டி தேர்வுகளைகூட எழுத விடாமல் தடுத்தது;
* சமூகநீதி அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூட நீதிபதிகளை நியமிக்காமல் வஞ்சித்தது என தமிழ்நாட்டிற்கு கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ. தந்தது, “நிதியும் இல்லை. திட்டங்களும் இல்லை. ஒன்றிய அரசு வேலை வாய்ப்புகளிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இடமுமில்லை” என்பதுதான் என்பதை இந்த கூட்டம் பதிவு செய்ய விரும்புகிறது. இன்றைக்கு நாட்டில் வெறுப்புவாத அரசியல் பற்றி எரிகிறது. மணிப்பூர் கலவரத் தீ இன்னும் அடங்கவில்லை. தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு என அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு விண்ணை முட்டி நிற்கிறது.

வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. இந்தியாவின் புகழை உலக நாடுகள் மத்தியில் கொண்டு சென்ற சமூக நீதி-சமத்துவம்-மதச்சார்பின்மை-ஜனநாயகம் எல்லாம் இன்றைக்கு பாஜக ஆட்சியில் தலை கவிழ்ந்து கிடக்கின்றன. நாட்டின் அரசியல் சட்டம்-அந்த அரசியல் சட்டத்தை நிலைநாட்டும் நீதித்துறை எல்லாம் ஒன்றிய அரசின் வரம்புமீறிய அதிகாரத்திற்கும் – மிரட்டலுக்கும் உள்ளாக நேரிடுகின்றன. இப்படியொரு சூழலில் தான், ‘அனைவருக்கும் நான் பிரதமர்’ என்ற பிரதமரே, பொது சிவில் சட்டம் என்ற “வெறுப்பு முழக்கத்தை” முன்வைத்துள்ளார். எம்.எல்.ஏ- எம்.பி.க்களை விலைக்கு வாங்கும் கலாசாரத்தின் கதாநாயகனாக பாஜக என்ற கட்சியை மாற்றி – பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்றவர்கள் எல்லாம் வலுப்படுத்திய கட்சி தாவல் தடைச் சட்டத்தை “காட்சிப் பொருளாக்கி” வேடிக்கை பார்க்கிற பாஜகவுக்கு இனியொரு முறை மக்கள் வாய்ப்பை கொடுத்தால் இந்தியாவும் தாங்காது-இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் சட்டமும் தாங்காது.

அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சமதர்ம மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்ற சொல்லையேகூட நீக்கிவிடும் பேராபத்தில் நாமெல்லாம் இருக்கிறோம் என்பதை பதிவு செய்யும் இக்கூட்டம்-வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக அரசால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, தமிழ்நாட்டை-தமிழ்நாட்டு மக்களை ஒன்பது ஆண்டுகாலம் புறக்கணித்து ஏமாற்றியதை, அவசர அவசரமாக கொண்டுவர துடிக்கும் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்ட மசோதாக்களை, ஆளுநர்களின் அத்துமீறல்களை, பாஜக ஆட்சியில் ஜனநாயகத்திற்கு – மதச்சார்பின்மைக்கு-சமூக நீதிக்கு-அடிப்படை உரிமைகளுக்கு-மாநில உரிமைகளுக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்தை விளக்கிடும் வகையில், திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உரக்க குரல் எழுப்பி, தமிழ்நாட்டு மக்களுக்காகவும் – இந்தியாவுக்காகவும் செயல்படுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 37 பிரச்னைகளை எழுப்புவது என்று முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, இந்தப் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னைகளை எழுப்ப திமுக முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

4 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi