டெல்லி : பாஜக வெளியிட்டுள்ள அனிமேஷன் வீடியோவில் இந்தியாவின் பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. வெளிநாடுகள் உடனான பிரதமர் மோடியின் உறவுகள் குறித்து பாஜக அண்மையில் அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதில் பிரதமர் மோடி, உலக வரைபடம் ஒன்றை பார்வையிடுவது போன்ற காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
அந்த வரைபடத்தில் இந்தியாவின் பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் சாடி உள்ளது. வரைபட பிழையை சுட்டிக் காட்டிய பின்னர், குறிப்பிட்ட காட்சியை இணையதளத்தில் இருந்து பாஜகவினர் நீக்கிவிட்டதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது இந்திய பிராந்திய ஒருமைபாட்டின் மீதான தாக்குதல் என்று கூறியுள்ள காங்கிரஸ், நிகழ்ந்த தவறுக்கு பாஜக தலைவர் ஜே.பி.நாட்டவும் பிரதமர் மோடியும் இந்திய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.