Monday, May 20, 2024
Home » தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.8,250 கோடி வசூலித்த பாஜ: புதிய ஆவணங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.8,250 கோடி வசூலித்த பாஜ: புதிய ஆவணங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

by Ranjith

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய ஆவணங்களை தேர்தல் ஆணையம் நேற்று தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதன்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.8250 கோடியை ஒன்றியத்தில் ஆளும் பாஜ வசூலித்துள்ளது அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு கடந்த2018ல் அறிமுகம் செய்தது. கருப்பு பணத்தை ஒழிக்க உதவும் என்ற முழக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், ஒரு கட்சிக்கு யார், யார்? நிதி கொடுத்தார்கள் என்ற விவரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

ஆளும் பாஜ பெரிய தொழில் நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. இதனால் தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பளித்தது. அப்போது, தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததோடு, இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி குறித்த முழு விவரத்தையும் மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவிட்டது.

ஆனால், பல தரவுகளை சேகரிக்க வேண்டி இருப்பதால் ஜூன் மாதம் வரை கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ மீண்டும் முறையிட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், கடந்த 12ம் தேதி தன்னிடம் உள்ள தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ வழங்க வேண்டும். 15ம் தேதிக்குள் அந்த விவரங்கள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, எஸ்.பி.ஐ வழங்கிய 763 பக்க ஆவண தரவுகளை தேர்தல் ஆணையம் கடந்த 13ம் தேதி இணைய தளத்தில் வெளியிட்டது.

இதில், கம்பெனிகள் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய தேதி, தொகை பற்றிய விவரம் தனியாகவும், அரசியல் கட்சிகள் அதை வங்கியில் சமர்ப்பித்த தேதி, தொகை விவரம் தனியாகவும் இருந்தது. எந்த கட்சிக்கு எந்த கம்பெனி நிதி கொடுத்தது என்பதை கண்டுபிடிப்பதை தடுக்க தேர்தல் பத்திரத்தின் எண் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. கடந்த 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் தீர்ப்பு வெளியான கடந்த பிப்ரவரி 15ம் தேதி வரையில் விற்ற தேர்தல் பத்திரங்கள் குறிதத தகவல்கள் அதில் இடம் பெற்றிருந்தது. அதன்படி, மொத்தம் ரூ.6,060 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பாஜ பெற்றிருந்தது தெரியவந்தது.

இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கடந்த செப்டம்பர் 30ம்தேதி வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரத்தை அவர்களிடம் இருந்து பெற்று தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, நாட்டில் உள்ள 523 அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி விவரங்களை தேர்தல் ஆணையம் திரட்டியது.

இதன்படி அரசியல் கட்சிகள் திட்டம் தொடங்கப்பட்டது முதல் தங்களுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதி விவரத்தை தாக்கல் செய்திருந்தனர். அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் குறித்த அனுப்பிய தபால்களை சீல் உடைக்காமல் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது. இந்த தபால்களை உச்ச நீதிமன்ற பதிவுத் துறை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது. அதில் இருந்த விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது.

நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்ட இந்த ஆவணங்களில் ஒவ்வொரு கட்சியும் அளித்த விவரங்கள் இருந்தன. இதன்படி ஒன்றியத்தில் ஆளும் பாஜவுக்கு அதிகபட்சமாக ரூ. 6,986 கோடி வசூலித்திருந்தது. இதில், ரூ.2,190 கோடி திட்டம் துவங்கிய 2018 மார்ச் முதல் 2019 ஏப்ரல் 11ம் தேதி வரை வசூலாகியிருந்தது. அதே நேரத்தில் ஏற்கனவே உள்ள தரவுகளின்படி 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் திட்டம் ரத்து செய்யப்பட்ட தேதி வரை பாஜவுக்கு ரூ.6,060 கோடி வசூலாகியிருந்தது.

இதன்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.8,250 கோடியை பாஜ மட்டும் வசூலித்தது அம்பலமாகி உள்ளது. தேரதல் பத்திரங்கள் மூலம் வசூலான மொத்தம் ரூ.16,518 கோடியில் சுமார் 50 சதவீதம் பாஜவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று வௌியான தரவுகளின்படி, தேர்தல் பத்திர நன்கொடை வசூலில் 2வது இடத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ.1,397 கோடி கிடைத்துள்ளது. காங்கிரசுக்கு ரூ. 1,334 கோடியும், தெலங்கானாவின் பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.1322 கோடியும், ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜேடிக்கு ரூ.944 கோடியும், ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு ரூ. 442 கோடியும் கிடைத்துள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி ரூ.181 கோடி, மதசார்பற்ற ஜனதாதளம் ரூ. 89 கோடி, சிவசேனா ரூ. 60 கோடி, ஆர்ஜெடி ரூ. 56 கோடி, தேசியவாத காங்கிரஸ் ரூ. 50 கோடி, சமாஜ்வாடி கட்சி ரூ.14 கோடி, அகாலி தளம் ரூ. 7 கோடி, அதிமுக ரூ.6 கோடியும் பெற்றுள்ளன. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய தரவுகள் வெளியாகி உள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* நிதி கொடுத்தவர்கள் விவரத்தை வெளியிட்ட 11 கட்சிகள்
தேர்தல் பத்திரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தரவுகளை சமர்ப்பித்த அரசியல் கட்சிகளில் வெறும் 11 கட்சிகள் மட்டுமே தங்களுக்கு நிதி கொடுத்த நிறுவனங்களின் பெயர்களை அதில் குறிப்பிட்டுள்ளனர். பாஜ உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் நிதி கொடுத்தவர்களின் விவரங்களை அதில் குறிப்பிடவில்லை.

சில கட்சிகள் தங்களது பதிலில், அனுப்பியவர் பெயர் குறிப்பிடாமல் தபாலில் வந்தது, கட்சி அலுவலகத்தின் பெட்டியில் யாரோ போட்டிருந்தார்கள், அடையாளம் தெரியாத நபர் வந்து நேரில் கொடுத்தார், தேர்தல் பத்திரத்தில் யார் அதை வாங்கினார்கள் என்ற விவரம் இல்லை என்று விநோதமான காரணங்களை குறிப்பிடத்திருந்தனர்.

* தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறாத கட்சிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அனுப்பிய தகவலில், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறுவதில்லை என்று கட்சி முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ், மஜ்லிஸ், இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகளும் தங்களுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி எதுவும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளன.

* உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி கடந்த 2019 ஏப்ரல் 12 முதல் 2024 பிப்ரவரி 15ம் தேதி வரையிலான தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தது. அத்தகவல்களை தேர்தல் ஆணையம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டது. இந்நிலையில், தேர்தல் பத்திரம் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட 2018 மார்ச் 1ம் தேதி முதல் 2019 ஏப்ரல் 11ம் தேதி வரை விற்கப்பட்ட மற்றும் பணமாக்கப்பட்ட தேர்தல் பத்திரம் விவரங்களையும் வெளியிடக் கோரி குடிக்களின் உரிமை அறக்கட்டளை உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு செய்தது.

அந்த மனுவில், ‘தேர்தல் பத்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 76 சதவீத தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் 24 சதவீத தகவல்களையும் மக்கள் அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது. எனவே 2018 மார்ச் 1 முதல் 2019 ஏப்ரல் 11 வரை எஸ்பிஐ வங்கி விற்பனை செய்த மற்றும் பணமாக்கிய ரூ.4000 கோடி மதிப்பிலான 9,152 தேர்தல் பத்திரங்களின் பத்திர எண், வாங்கிய தேதி, மதிப்பு, நன்கொடையாளர்கள் பெயர் மற்றும் கட்சிகளின் பெயரை வெளியிட உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

* அருணாச்சல் எங்களுக்குதான்: சீன ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகிறார்

* 2019 மக்களவை தேர்தலுக்கு பாஜ வசூலித்த ரூ.2,190 கோடி
கடந்த 2019ல் நடந்த மக்களவை பொதுததேர்தலையொட்டி பாஜவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் பணமழை கொட்டியுள்ளது. அந்த தேர்தலுக்கு மட்டும் மொத்தம் ரூ.2,190 கோடியை பாஜ தேர்தல் பத்திரங்கள் மூலம் வசூலித்திருந்தது. திட்டம் தொடங்கிய 2018 முதல் அது ரத்து செய்யப்பட்டது வரை முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மொத்தம் ரூ.1,422 கோடி மட்டுமே வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

1 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi