Sunday, June 16, 2024
Home » ஜனநாயகம் பொலிவு பெற பாஜக-வை தோற்கடிப்பீர்!.. நாட்டை மு.க.ஸ்டாலின் ஆண்டால் என்ன தப்பு?: கி.வீரமணி கேள்வி!!

ஜனநாயகம் பொலிவு பெற பாஜக-வை தோற்கடிப்பீர்!.. நாட்டை மு.க.ஸ்டாலின் ஆண்டால் என்ன தப்பு?: கி.வீரமணி கேள்வி!!

by Nithya

சென்னை: இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தால் மு.க.ஸ்டாலின் ஆள வந்துவிடுவார் என்று பிரதமர் மோடி கூறுயிருந்த நிலையில் ஏன், மு.க.ஸ்டாலின் ஆண்டால் என்ன தப்பு? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தால் மு.க.ஸ்டாலின் ஆள வந்துவிடுவார் என்கிறார் பிரதமர்!

ஏன், மு.க.ஸ்டாலின் ஆண்டால் என்ன தப்பு?

தேர்தலில் வெற்றி – தோல்வி என்பதைவிட அறிவு நாணயமும், அரசியல் நாகரிகமுமே முக்கியம்!

ஜனநாயகம் பொலிவு பெற, பி.ஜே.பி.யையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிப்பீர்!

பா.ஜ.க. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது கட்சியினரின் தேர்தல் பிரச்சாரம் – அதன் ஏழு கட்டங்களிலும், ஒவ்வொரு கட்டம் முடிந்து, இறுதிக் கட்டங்களை நோக்கிடும் நிலையில், அவர்களது ‘‘400 கனவு’’ ஒருபோதும் நனவாகாது என்பதோடு, நாளுக்கு நாள் அவரது 10 ஆண்டுகால ஆட்சியின் அவலங்களை மக்கள் நன்கு புரிந்துகொண்டு, மோடி ஆட்சிக்கு வழியனுப்பு விழா நடத்த வட மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள் தயாராகி விட்டனர்; வாக்குகளையும் 5 கட்டங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக அளித்துள்ளனர்.

இந்தத் தோல்வியைத் தெளிவாக பா.ஜ.க.வும், அதன் பிரதான பரப்புரையாளரான பிரதமர் மோடியும் நன்கு புரிந்துகொண்டதால், நிலைகுலைந்து, ஜன்னி கண்ட நோயாளி பிதற்றுவதுபோல, உச்சவரம்பின்றி பொய்ப் பிரச்சாரங்களில் – முற்றிலும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக அவதூறு பேச்சினை – வெறுப்புரைகளை நாளும் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளனர். அதன்படியே, தமிழ்நாட்டினர் ‘திருடர்கள்’ என்று நாக்கில் நரம்பின்றி, வாக்கில் நேர்மையின்றி ஒடிசாவில் பேசியுள்ளார் பிரமதர் மோடி.

‘‘ஒரு பிரதமர் பேசும் பேச்சா?’’ என்று நாகரிக உலகமே நாணித் தலைகுனியும். ஒடிசாவில் பூரி ஜெகன்னாதர் கோவிலில் ஓர் அறை பூட்டியே கிடக்கிறதாம் – சாவி இல்லாமல் – அச்சாவி தமிழ்நாட்டிற்குக் கொண்டு போகப் பட்டதாக ‘‘மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று ஓர் அபத்தமான, அபாண்ட குற்றச்சாட்டினை தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்!. எத்தகைய கீழ்த்தரமான, ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் இது!.

தமிழ்நாட்டிற்கு ஒன்பது முறை வந்து பிரச்சாரம் செய்தபோது, தமிழ்மொழி, தமிழர்கள்பற்றியெல்லாம் உச்சிமேல் மெச்சி பேசிய பிரதமர் மோடி, இப்போது இப்படி ஒரு கேலிக் கூத்தான குற்றச்சாட்டைக் கூறுவது, அவரிடம் ஆக்கப்பூர்வ திட்டங்கள் குறித்துப் பேச ஏதுமில்லை – ‘மோடி கீ கியாரண்டி’ சாயம் வெளுத்துவிட்டது. எனவே, இப்படி நாலாந்தரப் பேச்சாளர் நிலைக்கு ஒரு பிரதமர் இறங்கிவிட்டார்!

நமது ‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இதற்குரிய சரியான கண்டனத்தை ‘சுரீர்’ என்று தைக்கும்படி ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளார்!. தமிழ்நாட்டின் கண்டனக் கணைகளை பல லட்சக்கணக்கில் அனைத்து மானமுள்ள தமிழர்களாலும் அனுப்பி, அவருக்குக் குவிய வேண்டும். அவரது சர்வ வல்லமை படைத்த உளவுத் துறைமூலம் அவர் கண்டறிந்து, சாவியை மீட்கலாமே! ஏன் அவர் அதனைச் செய்யவில்லை?.

‘‘மக்கள் பேசிக் கொள்கிறார்கள்’’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி, யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதலாம்; பேசலாமே. அது அவர்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்தால், நாட்டின் பொதுவாழ்வின் நாகரிகம் காற்றில் பறந்துவிடுமே!. தனி நபர் தாக்குதல் என்ற தரங்கெட்ட நடைமுறை நாயகமாகவே பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரைகள் நாளுக்கு நாள் – தோல்விப் பயம் பெருகப் பெருக மாறி வருவது இதற்குமுன் இந்திய நாட்டுப் பிரதமர்கள் எவராலும் நடத்தப்படாத ஒன்று.

உள்துறை அமைச்சர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் வகையில், ‘‘ஒடிசாவை ஒடிசாக்காரன் ஆளவேண்டும்; தமிழர்கள் ஆளுவதை அனுமதிக்கலாமா?’’ என்று (அங்குள்ள ஆற்றலாளர் பாண்டியன் அய்.ஏ.எஸ். அவர்களை மனதிற்கொண்டு) பிஜு ஜனதா தளத்தை உடைக்கத் தூண்டும் வகையில் தூபம் போடுவதுபோல் பேசுவதும், அதற்கு விரிவுரை எழுதுவதுபோல்தான் பிரதமர் மோடியின் இந்த அவதூறுப் பேச்சாகும். ஒடிசா கோவில் அறை சாவியைத் தமிழ்நாட்டவர் திருடிப்போய்விட்டார் என்று சொல்லியிருப்பது நாகரிகமானதுதானா?

‘‘இந்தியா கூட்டணிக்கு ஓட்டளித்தால், ஸ்டாலின் ஆள வந்துவிடுவார்’’ என்றும் இந்த ‘24 கேரட் தேச பக்தர்’ பேசுவது எந்த அடிப்படையில்? அப்படியே, மு.க.ஸ்டாலின் ஆண்டால்தான் என்ன தவறு? அவரது ஆட்சியின் திட்டங்கள், மற்ற இந்திய மாநிலங்கள் மட்டுமல்ல; கனடா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளும் பின்பற்றி, அத்திட்டத்தை செயல்படுத்துகிறார்கள்!. உண்மையான தேச பக்தர்கள், ‘‘பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’’ என்று கூறி, பெருமிதம் அல்லவா அடைவார்கள்!.

தேர்தல் வெற்றி – தோல்வி என்பதைவிட, அறிவு நாணயமும், அரசியல் நனி நாகரிகமும் முக்கியம் என்பதை உணரவேண்டாமா?. முன்னது தற்காலிகம்; பின்னது நிரந்தரமானது என்பதை அவர்களுக்கு வாக்காளர்கள் – நல்ல தோல்வியைத் தந்து, தக்க பாடம் புகட்டவேண்டும். அப்போதுதான், ஜனநாயகம் இழந்துவரும் பொலிவை, மீட்டெடுக்க முடியும்! என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

You may also like

Leave a Comment

eleven + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi