Saturday, February 24, 2024
Home » பிணிக்கு மருந்து

பிணிக்கு மருந்து

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இவ்வுலகில் வாழப் பல செல்வங்கள் வேண்டியிருந்தாலும், அவற்றுள் ஒன்று மிகச் சிறந்ததாக உள்ளது. அது எது எனில் “நோயற்ற வாழ்வே’’. அதனால்தான், “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” எனும் பழமொழி அறிகின்றோம். வாழ்வில், பல இன்னல்களைத் தோற்றுவிப்பது நோயாகும். இந்த நோய் இரு வகைப்படும். ஒன்று உடலுக்கு, உடல் உறுப்புகட்கு வருவது. மற்றொன்று உள்ளத்திற்கு வரும் நோயாகும். இந்நோய்கள் நீங்கினால்தான் நலமாக வாழ முடியும்.

நோய் எனும் போது பிணி என்னும் சொல் நினைவிற்கு வருகிறது.

`வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம்
புகுவரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில்
பதினையாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத்
துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா
நகருளானே’.
– என்றார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

இங்கு நோய் என்பது பிணி என்னும் சொல்லால் குறிக்கப் பெறுகிறது. நோய், பிணி எனும் இரு சொற்கட்கும் பொருள் ஒன்றே எனினும், ஒரு வேறுபாடு உள்ளது. தலைவலியோ, வயிற்றுவலியோ போன்ற நோய் வந்தால், உடன் மருந்து உட்கொள்கிறோம். வலி நீங்கிவிடுகிறது. இயல்புநிலை மீள்கிறது. ஆனால், பிணி என்பது அத்தகையது அன்று.

உலக வழக்கில் இரண்டு பிணிகளைக் கூறுகின்றோம். ஒன்று பசிப்பிணி மற்றொன்று கர்ப்பிணி. பசி என்பது ஒரு நோயே எனலாம். பசி நீங்க உணவு தேவைப்படுகிறது. உண்டதும் பசி தணிகின்றது. ஆனால், நீங்கிவிடுவதில்லை. சில மணிநேரம் கழித்து மீண்டும் பசி தலையெடுக்கிறது. மீண்டும் உணவு தேவைப்படுகிறது.

பிறந்தவுடன் குழந்தை அழத் தொடங்குகிறது. தாய்ப்பால் குடித்ததும் அமைதி கொள்கிறது. மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை உணவின்றி வாழ்தல் இயலாது. இறந்த பின்பும், வாய்க்கரிசி போடும் பழக்கமும் காண்கின்றோம் அல்லவா. யான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. சாப்பாடு என்பது இரு சொற்களின் சேர்க்கையாகும். `சா’ என்பது சாதலைக் குறிக்கும். `பாடு’ என்றால் துன்பம். சாகின்ற வரை இந்தத் துன்பத்தை, அதாவது உண்ணும் நிலையை அனுபவிக்க வேண்டியுள்ளது. பசி பற்றி ஒரு பாடல் அடியேன் நினைவிற்கு வருகிறது.

`மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை –
தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல்
பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்’

இப்பாட்டின்படி பார்த்தால், நமக்குப் பசி வந்ததும் உணவு உட்கொள்ளாமல் போனால், பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட நேர்கிறது. நமக்கு நன்மை தரும் பலவும் நம்மிடமிருந்து நீங்கி விடுகின்றன.

பசி கொடிய நோய். எனினும், அது நம்மைத் தற்காலிகமாகப் பிணித்து தளர்த்தி மீண்டும் பிணித்துவிடுகிறது. நோய் வந்தால் தீரும். பசி என்னும் பிணி வந்தால், தற்காலிகமாகத்தான் தீரும். இதே போன்று கர்ப்பிணியும் ஆகும். இப்பிணி, பசிப்பிணியைக் காட்டிலும் கடுமையானது. பிரசவ வலி மிகுந்த துன்பத்தைத் தருகிறது. பிரசவிக்கும்போது, ஒரு பெண் இனி குழந்தை பெற்றுக் கொள்ளவே கூடாது என்று நினைக்கிறாள். ஆனால், பெற்ற குழந்தையை பார்த்ததும், அதன் அழகில் வளர்ப்பில் மயங்கி, மீண்டும் கருவுறுகின்றாள். இப்பிணி மீண்டும் பிணிக்கின்றது. நோய் என்பது முற்றிலும் நீங்கக்கூடியது.

பிணி என்பது தற்காலிகமாகத்தான் நீக்கப்படுகிறது. எனவே, நோயைக் காட்டிலும் பிணி வலிமை உடையது. இன்னொரு பிணி உள்ளது. `நான்’ எனும் சொல் இரு பகுப்புக்களை உடையது. ஒன்று உடல். இது கண்ணுக்குத் தெரிகின்றது. ஐம்புலன்களாலும் செயல்படுகின்றது. இன்னொன்று உடலை இயக்கும் ஆன்மா ஆகும். இதனை உள்ளம் என்றோ உயிர் என்றோ கூறலாம். இது கண்ணுக்குத் தெரிவதில்லை.

உயிர் எழுத்தும், மெய் எழுத்தும்கூடி, உயிர்மெய் ஆவதுபோல, உடலும் உயிரும் சேர்ந்து இயங்கக் காண்கின்றோம். நாம் எல்லாம் மனிதப் பிறவி கொண்டுள்ளோம் என்பது உண்மை. புழு, பூச்சி முதல் மனிதன் வரை, பல்வேறு நிலையில், ஆன்மா உடல் பெற்று வாழக் காண்கின்றோம். “பிற” என்பது நமக்குச் சொந்தமானது அன்று என்றுதானே தோன்றுகிறது. இயல்புநிலை விடுத்து வேறு நிலையில், அதாவது பிறிதான நிலையில் இருப்பதுதான் பிறவியாகும்.

அப்படியானால் நம் இயல்பான நிலை என்ன?

ஏன் பிறவி எடுத்துள்ளோம் எனச் சிந்திக்கத் தோன்றுகிறது. எந்த ஒரு செயலுக்கும் விளைவு உண்டு. பசிக்கின்றது, உண்கின்றோம். பசி நீங்குகின்றது. கற்கின்றோம், அறியாமை நீங்குகின்றது. இங்ஙனம் நாம் நம்வாழ்வில் புரியும் தீமையோ நன்மையோ எதுவாயினும் அதன் பலனை அனுபவிக்க நேர்கிறது. அந்தச் செயலை கர்மம் எனக் கூறுவார்கள். இங்கே நம்மாழ்வார் கூற்று கவனிக்கத்தக்கது. சடகோபரிடம் மதுரகவியார் ஒரு வினா தொடுத்தார்.

‘‘செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்பதே அவ்வினா. அதற்கு நம்மாழ்வார் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என மொழிந்தார். ஞானமற்ற ஜடப் பொருளான உடம்பில் நுட்பமான ஆன்மா புகுந்தால், அதாவது பிறவி கண்டால், அது எவ்வாறு வாழும் எனக் கேட்டதற்கு, அவரவர் செய்த வினையின் பயனாகப் பிறவி கண்டதால், அவரவர் செய்த புண்ணிய பாவங்களை அனுபவித்துக் கொண்டு வாழ்வர் என்னும் பதிலால், நாம் செய்த நன்மை தீமைகளை அனுபவிக்கவே பிறவி கண்டுள்ளோம்.

வினைகளை அனுபவிக்க உடல் தேவைப்படுகிறது. அவற்றைத்தான் விதி என்கிறோம். மனிதப் பிறவியே உயர்ந்தது. மற்ற உயிர்களைக்காட்டிலும், நாம் பகுத்தறிவு, அறம், நீதி போன்ற பண்புகளைப் பெறும் வாய்ப்பு இம்மனிதப் பிறவியே பெறமுடிகிறது. நாமும் இறைவன் படைப்பில் தோன்றியதால் அவ்விறைவன் மாட்டே செல்ல வேண்டுமன்றோ.

ஆனால், நாம் அதனை மறந்து, உலக இன்ப துன்பங்களுக்கு ஆட்பட்டு வாழ்வதே வாழ்வு என்பதால், எடுத்த உடலுக்கு ஆயுள் குறித்த காலமே. ஆதலால், நம் வினைப் பயனை ஏறிட மீண்டும் பிறவி கொள்ள நேர்கிறது. பிறவா நிலை எய்தாமல் விடாமல் மீண்டும்மீண்டும் பிறவி காண்பதால் அப்பிறவியை “பிறவிப்பிணி’’ என்னலாம். இப்பிறவிப்பிணியே மற்ற பிணிகளிலும் கொடியது எனச் சான்றோர் கூறுவர்.

எனில், இப்பிறவிப்பிணி நீங்க என்ன மருந்து உள்ளது என்பதைப் பெரியோர் வாழ்வாலும் வாக்காலும் அறியலாகும். ஒருவன், எல்லா தர்மங்களையும் விட்டு என் ஒருவனையே பற்றினால், அவனுடைய எல்லாத் துன்பங்களையும் போக்குவதாக கண்ணன் கீதையில் தெரிவித்துள்ளான். தர்மங்களை அதாவது புண்ணியச் செயல்களை கைவிடுதல், அத்தனை எளிதன்று. செயல்களின் பயன்களை எதிர்பார்ப்பது இயல்பாகிவிடுகிறது. எம்பெருமானிடம் சரண் புகுவது பிறவி நீங்க வழியாகும்.வீடு என்பது விடுதலையைக் குறிப்பது. எல்லாத் துன்பங்களினின்றும் விடுபட்டு விளங்குவதே வீடாகும். அவ்வீட்டை

எய்துவதற்கு மனம், மொழி, மெய்யால்
இறைவனைப் பற்றி சிந்திப்பதே ஆகும்.
தூயோமாய் வந்து நாம் தூமலர்
தூவித் தொழுது வாயினால் பாடி
மனத் தினால் சிந்திக்க போய பிழையும்
புகு தருவான் தீயினில் தூசாகும்
– என்கிறாள் ஆண்டாள்.

மங்கை மன்னனும் உய்யும் வழியாக, அதாவது பிறவி நீங்க நாராயணன் நாமமே நவில்க என்கிறார்.

`துஞ்சும் போது அழைமின், துயர்வரில்
நினை மின், துயரிலீர் சொல்லினும்
நன்றாம் நஞ்சு தான் கண்டீர் நம்முடை
வினைக்கு நாராயணன் நாமமே

– என்கிறார்.

நமக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மை பயக்கும் என்பதைப் பின் வரும் பாடலால் உணரலாம்.

`குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு
கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்’

இறைவனுக்குத் தொண்டுபுரிவது நம் பிறவி நீங்க வழிவகுக்கும். “எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று” என்கிறார் கோதை. “மற்றெல்லாம் பேசிடும் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை” என்கிறார் பரகாலர்.

இறைவனுக்குத் தொண்டுபுரிவதும், இறை அடியாருக்குப் பணிபுரிவதும் வீடு பெற வழிவகுக்கும் எனச் சான்றோர் இயம்புவர். பராங்குசர் தம் திருவேங்கடப் பதிகத்தில்;

`ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாண் மலராம் அடித்தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே’

என விளம்புதலால் மூப்பு, பிறப்பு, இறப்பு இவற்றைப் பிணியெனக் கொண்டு, இப்பிணி நீங்க வேங்கடவனை, வாயாலும் மனத்தாலும் உணர பிணி மீண்டும் பீடிக்காமல் நீங்கும் என்பர். அவற்றை உணர்ந்து, வாழ்வதே வாழ்வின் பயன் என்பதை சிந்திப்போம். செயல்படுவோம். சீர் பெறுவோம்.

தொகுப்பு: கு.அரங்கநாதாச்சாரியார்

You may also like

Leave a Comment

ten + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi