கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 9வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஃபாப் டூபிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. அந்த போட்டியில் விராட் கோலி 82 ரன்கள் விளாசி மிரட்டினார். தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல் மீது எதிர்பார்ப்பு உள்ளது. பந்துவீச்சில் சிராஜ், ஹர்சல் படேல், ஆகாஷ் தீப், டேவிட் வில்லி, கரண் சர்மா வலு சேர்க்கின்றனர்.
மறுபுறம் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மழையால் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில் ஜேசன்ராய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் அடுத்த போட்டியில் தான் அணியுடன் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஷகிப் அல்ஹசனும் விலகி உள்ளார். லிட்டன்தாஸ் அணியில் இணைய இன்னும் ஒரு வாரம் ஆகும். இதனால் மன்தீப் சிங், அனுகுல் ராய், ரஸ்சல், ரஹ்மானுல்லா ரன் அடிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். சுழலில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், வேகத்தில் சவுத்தி, உமேஷ் யாதவ் ஆகியோர் அசத்தலாம்.
இரு அணிகளும் இதுவரை 30 போட்டியில் மோதி உள்ளது. இதில் 16ல் கொல்கத்தா, 14ல் பெங்களூரு வென்றுள்ளன. கடந்த சீசனில் மோதிய ஒரே போட்டியில், ஆர்சிபி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.