Sunday, September 1, 2024
Home » குழந்தை வரமருளும் குமரஞ்சேரி முருகன்

குழந்தை வரமருளும் குமரஞ்சேரி முருகன்

by Porselvi

திருவள்ளூர் மாவட்டம் மெதூர் அருகே அமைந்துள்ளது குமரஞ்சேரி. இங்கு எழுந்துள்ள முருகன் ஆலயம் கொண்டது, பெருங்கதை. குமரஞ்சேரி ஏரி கடந்த 2000 – ஆம் ஆண்டு கோடைகாலத்தில் வற்றியபோது, முருகனின் சிரசு மட்டும் வெளியேத் தெரிந்தது. அதைக் கண்ட ஊர் மக்கள் ஒன்றுகூடி, 10 அடி ஆழத்திலிருந்து முருகன் சிலையை வெளியே எடுத்து, ஏரிக்கரையில் கொட்டகைப் போட்டு, அதில் குமரனைக் குடியமர்த்தினார்கள். பின்னர், ஆலயத்திற்கு முருகன் இடம் பெயர்ந்தார். 2003-ஆம் ஆண்டு குடமுழுக்கிற்கு பின்னர்… குழந்தை வரம் வேண்டுவோர்க்கு குழந்தையும், புது வீடு வேண்டுவோர்க்குப் புதுவீடும் அளித்தான் இந்த வள்ளி மணாளன். மழை வேண்டிய மக்களுக்கு மழையைக்கூட தந்தருளினான். கல்யாண வரத்தோடு, வழக்குகளிலும் வெற்றியைத் தந்தான். வியாபார விருத்தி, கல்வி விருத்தியென இந்த முருகன் தந்த வரங்கள் ஏராளம். அற்புதமிக்க இந்த கந்தன், தனது அடியாள் பொருட்டு ஏரிக்கரையின் மீது எழிலாய் கோயில் கொண்டு திகழ்கின்றார். கருவறையுள், கருணை முகம் காட்டி, வலதுமேல் கரத்தில் அட்சமாலையும், இடதுமேல் கரத்தில் கமண்டலமும், கொண்டு, இடது கீழ் கரத்தைத் தொடையில் மடித்த வண்ணம் வலது கீழ்க்கரத்தில் அபயம் அளித்தபடி 7 அடி உயரத்தில் அருள் சுரக்கும் அழகுத் திருமேனியுடன் ஆஜானுபாகுவாகத் திருக்காட்சித் தந்து, முருகன் நம்மையெல்லாம் உருக வைக்கின்றார். உற்சவர் சிலையும் உடனுள்ளது.

வெளியே, மண்டபத்தில் கணபதிக் கோயில் கொண்டுள்ளார். எதிரே மயில் வாகனம் உள்ளது. இங்கே விஷேச வழிபாடாக, சித்ராப் பௌர்ணமி, சித்திரைக் கிருத்திகை, கந்தர்சஷ்டி ஆகியனச் சிறப்புடன் அனுசரிக்கப்படுகின்றன. சித்திரைக் கிருத்திகையில், பக்தர்கள் அலகுக் காவடி எடுத்து வருவதுச் சிறப்பு. ஒவ்வொருச் செவ்வாய் மற்றும் கிருத்திகைகளில், இங்கு முருகனுக்குப் பக்தர்களால் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்விக்கப்படுகின்றன. பக்தர்களைத் தனது மந்திரப் புன்னகையால் வசீகரிக்கும் இந்தக் குமாரசுவாமியிடம் குழந்தை வரம் வேண்டி வருபவர்கள், கிருத்திகையில் இங்கு தம்பதி சமேதராக வந்து, சுவாமியின் வலதுக்கரத்தில் ஒரு எலுமிச்சங்கனியை வைத்து, அர்ச்சனைச் செய்யவேண்டும். அதன்பின்னர், பிரசாதமாகத் தரப்படும் எலுமிச்சங்கனியை, முந்தானைத் துணியில் முடித்துக் கோயிலுக்கு வலப்புறம் உள்ள வேப்பமரத்தில் கட்டி, பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு செய்ய, விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதுப் பலரது அனுபவமாக உள்ளது.

புதுவீடு, நிலம் வாங்க விரும்புபவர்களும், தொழிலில் மேன்மையடைய நினைப்பவர்களும், தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகள், இந்தக் கோயிலுக்கு வந்து, 6 முறைக் கோயிலை வலம் வந்து, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனைச் செய்து, சம்பாசாதம் நிவேதனம் செய்து வழிபட, விரும்பியபடியே வீடு, நிலம் அமைகிறது. தொழிலிலும் அமோக வளர்ச்சிக் கண்டு, ஆனந்தம் அடையலாம்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி – பழவேற்காடுப் பேருந்துச் சாலையில் மெதூரிலிருந்து வடக்கே 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, குமரஞ்சேரி.பொன்னேரியிலிருந்துப் பனப்பாக்கம் செல்லும் பேருந்தில் பயணித்து, ஆலயத்தின் அருகே இறங்கிக் கொள்ளலாம்.

You may also like

Leave a Comment

2 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi