புதுடெல்லி: நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மெகா மோசடி நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ரூ.22.44 கோடி வரை மோசடி நடந்துள்ளது தணிக்கையில் தெரிய வந்துள்ளது. பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் திட்டம் சுகாதாரத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து கண்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் சார்பில் தணிக்கை செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒன்றிய அரசு சார்பில் 2022 நவம்பருக்குள் 10.74 கோடி பயனாளிகள் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தேசிய சுகாதார ஆணைய அறிக்கைப்படி 7.87 கோடி பயனாளிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். அதை விட முக்கியமாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் போலி பயனர்கள் பலர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதற்கான இணைய தளத்தில் தவறான பெயர்கள், இல்லாத பிறந்த தேதிகள், போலி சுகாதார ஐடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த போலி பயனர்கள் மூலம் ஆயுஷ்மான் பாரத்திட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.22.44 கோடி வரை பலன்களைப் பெற்றுள்ளனர். இதை விட மிகப்பெரிய மோசடியாக ஒரே மொபைல் எண் பலருக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 9999999999 என்ற அலைபேசி எண்ணில் 7.49 லட்சம் பேர் பயனாளிகளாக பதிவு செய்துள்ளனர். ஒருவேளை பதிவுக்காக இந்த எண்ணை பயன்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. இவை தணிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.