சென்னை: ‘‘அரசு பள்ளி மாணவர்கள் 225 பேர், நாட்டில் உள்ள முதன்மை கல்வி நிறுவனங்களில் படிக்க தேர்வானதன் காரணமாக, அரசு பள்ளிகளின் கல்வி தரம் உயர்ந்துள்ளது என்ற உண்மை உலகுக்கு தெரியவந்துள்ளது’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். தமிழ்நாடு பள்ளி கல்வி துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உயர்கல்விக்கு செல்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதற்காக கொண்டுவரப்பட்டதுதான், ‘அனைவருக்கும் ஐ.ஐ.டி’ திட்டம். நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு 225 அரசு பள்ளி மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்து படிக்கப் போகிறீர்கள் என்பது நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.
தனியார் பள்ளி மாணவர்களால் மட்டும்தான் இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு போக முடியும் என்ற எண்ணத்தை உடைத்து, இன்றைக்கு நம்முடைய அரசு பள்ளி மாணவர்களும் போக முடியும் என்ற சாதனையை நீங்கள் படைத்திருக்கிறீர்கள். இதன் மூலமாக அரசு பள்ளியுடைய கல்வி தரம் உயர்ந்திருக்கிறது என்ற உண்மை உலகுக்கு தெரிய வந்திருக்கிறது. இந்திய அளவிலான பல்லையில் தமிழக மாணவர்கள்: தமிழ்நாட்டில் இருந்து கடந்த ஆண்டு முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 75. இந்த ஆண்டு 225.
இது மிகப்பெரிய சாதனை. கடந்த ஆண்டு ஐஐடி-க்கு போனவர் ஒரே ஒருத்தர்தான். ஆனால் இந்த ஆண்டு, 6 பேர் செல்கிறார்கள். கடந்த ஆண்டு தேசிய தொழில்நுட்பக் கழகம், இந்திய தகவல் தொழில்நுட்ப கழகங்கள், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றிற்கு சென்றவர்கள் 13 பேர். இந்த ஆண்டு 55 பேர். தேசிய தடய அறிவியல் பல்கலையில் கடந்த கல்வியாண்டில் சென்றவர்களின் எண்ணிக்கை, ஜீரோ. ஆனால் இந்த ஆண்டு 6 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். முழு ஸ்காலர்ஷிப்புடன் தைவான் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் படிப்பதற்கு இரண்டு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள்.
இந்தியன் கடல்சார் பல்கலையில் கடந்த ஆண்டு ஒருவரும் போகாத நிலையில் இந்த ஆண்டு 6 மாணவர்கள் செல்ல இருக்கிறார்கள். தேசிய சட்டக் கல்லூரியில் கடந்த ஆண்டு 4 பேர். இந்த ஆண்டு 9 பேர். ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் இன் லா-வுக்கு கடந்த ஆண்டு ஒருவர் தான்; இந்த ஆண்டு 7 பேர். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில் இந்த ஆண்டு 27 பேர் படிக்கப் போகிறார்கள். கடந்த ஆண்டு யாரும் போகவில்லை. கடந்த ஆண்டு மத்திய பல்கலைக்கழகங்களுக்கு 6 பேர் படிக்க போனார்கள்; இந்த கல்வியாண்டில் 20 பேர் செல்கிறார்கள். ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சருக்கு தான் இந்த ஆண்டு அதிகம் பேர் படிக்கப் போகிறார்கள்.
கடந்த ஆண்டு ஒரே ஒரு மாணவர்தான் அங்கே சென்றார். ஆனால் இந்த ஆண்டு 69 பேர் போகப் போகிறார்கள். இண்டியன் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அன்ட் ரிசர்க்கு கடந்த ஆண்டு ஒருவரும் போகாத நிலையில், இந்த ஆண்டு அந்த நிலை மாறி, 10 அரசு பள்ளி மாணவர்கள் போகிறார்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாட்டில் இருந்து கடந்த ஆண்டு முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 75. இந்த ஆண்டு 225. இது மிகப்பெரிய சாதனை. கடந்த ஆண்டு ஐஐடி-க்கு போனவர் ஒரே ஒருத்தர்தான். ஆனால் இந்த ஆண்டு, 6 பேர் செல்கிறார்கள்.