Friday, May 10, 2024
Home » நீத்தார் வழிபாட்டை எப்படிச் செய்ய வேண்டும்?

நீத்தார் வழிபாட்டை எப்படிச் செய்ய வேண்டும்?

by Kalaivani Saravanan

ஆடி அமாவாசை – 16.8.2023

எந்த தலங்களில் செய்ய வேண்டும்?

ஒருவர் அன்னதானம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு அது பெரும் புகழ் தந்தது. “இவரைப்போல் உண்டோ?” என்று ஊரார் புகழ்ந்தனர். அப்பொழுது அவரைப் பற்றி நன்கு அறிந்த ஒருவர் சொன்னார்.

“ம்… என்ன செய்து என்ன புண்ணியம்? இவருடைய பெற்றோர்களை இவர் வீட்டைவிட்டு விரட்டிவிட்டாரே” சில இடங்களில் இப்படியும் நடந்துவிடுகிறது. அன்னதானம் செய்தால் நிச்சயம் புண்ணியம் வரும். அது நட்சத்திரம் போல. ஆனால், பெற்றோர்களுக்கு சோறு போடாத பாவம் சூரியனைப் போல. என்னதான் நட்சத்திரங்கள் பிரகாசித்தாலும், சூரிய ஒளி அந்த நட்சத்திரங்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.

இருக்கும் வரை பெற்றோர்களை கவனிப்பதும், அவர்கள் மறைந்த பிறகு, அவர்கள் நினைவைப் போற்றி வழிபாடு நடத்துவதும், ஒருவன் வாழ்வின் உன்னத நிலைக்கு உதவுபவை என்பதை நம்முடைய முன்னோர்கள் நன்கு உணர்ந்து, நமக்கு அறிவுறுத்தி இருக்கின்றனர். முன்னோர்கள் நினைவை போற்றும் வழிபாடுகளுக்கு என்று அமைந்த நாட்கள், தொண்ணூற்று ஆறு நாட்கள். அதில் 12 அமாவாசை மிக முக்கியம். முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.

தர்ப்பணம் செய்யும் நாட்களில் பூஜைபோன்ற சில அத்தியா வசியமான வழிபாடுகளை தவிர, வேறு சிறப்பு வழிபாடுகள், ஹோமங்கள் முதலியவற்றை நடத்தக்கூடாது. முன்னோர்கள் கடன் முடியும் முன்னரே வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம் இல்லை. தர்ப்பண நாளில் முதலில் நீத்தார் கடன் நிறைவேற்றிவிட்டு, அதற்குப் பிறகு, வழக்கமான பூஜை புனஸ்காரங்கள் செய்வது வழக்கம். அமாவாசை என்பது பிதுர் காரியங்களுக்கு என்று ஒதுக்கி வைக்கப்பட்ட நாள். பொதுவாக நல்ல நாட்களை இரண்டாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஒன்று சுபதினம்.

இன்னொன்று புண்ணிய தினம். அமாவாசை போன்ற நீத்தார் கடன் நிறைவேற்றும் நாட்களை புண்ணிய தினம் என்று சொல்லுவார்கள். சங்கல்ப மந்திரத்தில் இது வரும். நுட்பமாகக் கவனித்தால், புரோகிதர் இந்த நல்ல நாட்களை வித்தியாசப்படுத்தி சொல்வது தெரியும். தாயைக் குறிக்கும் சந்திரனும், தந்தையைக் குறிக்கும் சூரியனும் அமாவாசை அன்று இணைகின்றனர். அன்று அவசியம் ஏதோ ஒரு வகையில் முன்னோர்களை வழிபட்டு அவர்கள் ஆசியைப் பெற வேண்டும்.

சாஸ்திரரீதியாக எள்ளும் நீரும் தர்ப்பணம் செய்து விடுவது என்று இருந்தாலும்கூட, நம்முடைய தமிழக கிராம மக்கள், அன்று காலை விரத மிருந்து, அமாவாசை படையல் போட்டு, அதற்குப் பிறகு உணவு உண்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் இதிலிருந்து அவர்கள் விலகுவதில்லை. இது நம் ரத்தத்தில் ஊறிய நீத்தார் கடன் சிறப்பை உணர்த்துகிறது. சிலர் அன்று நீத்தார்களை நினைத்து அன்னதானம் செய்யலாம் என்று சொல்கின்றார்கள். உண்மைதான். அன்னதானம் செய்வது புண்ணியத்தைத் தரக்கூடிய செயல்தான்.

ஆனால், அது முறையான தர்ப்பணத்திற்கு இணை ஆகாது. முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்யாமல் அன்னதானம் செய்வதால் புண்ணியம் கிடைக்கும். ஆனால், நீத்தார் தாகம் தீராது. அவர்கள் மகிழ்ச்சியும் ஆசியும் பூரணமாகக் கிடைக்காது. அன்று கறுப்பு எள்ளையும், நீரையும் நாம் தர்ப்பணத்திற்கு உபயோகப்படுத்துகிறோம். கறுப்பு எள் என்பது மகா விஷ்ணுவின் அம்சம். அவர் நாம் செய்கின்ற முன்னோர் வழிபாட்டை காக்கின்றார். அவருக்கு “சிரார்த்தம் காப்பவர்” என்று பெயர்.

ஐந்து ரூபாய் எள்ளும் நீரும் முன்னோர்கள் தாகத்தையும் பசியையும் தணிக்கும். இதைச் செய்துவிட்டு அன்னதானம் போன்றவை செய்வதன் மூலம், பலன்கள் கோடிகோடியாகப் பெருகும். ஏகாதசி விரதம் சிறந்தது. அதைவிட துவாதசி பாரணை முக்கியமானது. அதைவிட அமாவாசை தர்ப்பணம் ஒருவனுக்கு புகழைத் தரக்கூடியது. அதைவிட நம்முடைய பெற்றோர்கள் இறந்த திதியில் செய்யும் சிரார்த்த பூஜை பல மடங்கு உயர்வான பலனைத் தரக்கூடியது. நீத்தார் வழிபாட்டு முறையில், பல முறைகள் உள்ளன.

1. அன்னம் தயார் செய்து, ஹோமம், பிண்டதானம் போன்றவற்றோடு வழிபாடு செய்வது “பார்ணவம்’’.

2. ஹோமம் பிண்டதானம் இல்லாமல் உணவு மட்டும் தயார் செய்து சிரார்த்தம் செய்வது “சங்கல்ப சிரார்த்தம்’’.

3. உணவுகள் தயார் செய்யாமல் ஒருவர் சமைத்து சாப்பிடுவதற்கான அரிசி காய்கறிகளை வைத்து, அவற்றோடு தட்சணையும் சேர்த்து செய்கின்ற
சிரார்த்தம் “ஆம சிரார்த்தம்’’.

4. இவற்றுக் கெல்லாம் எவ்வளவு செலவாகுமோ, அந்தச் செலவை வெற்றிலை பாக்கோடு தட்சணையாக கொடுத்து செய்கின்ற சிரார்த்தம் “ஹிரண்ய
சிரார்த்தம்’’.

எது எப்படி ஆனாலும், மிக எளிமையாக கறுப்பு எள்ளும், நீரும் கலந்து முன்னோர்கள் பெயரைச் சொல்லி வலது கை கட்டைவிரல் வழியாக தர்ப்பணம் செய்து, சூரியனைப் பார்த்து வணங்குவது அவசியமானது.

தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றை வீட்டிலும் செய்யலாம். குளம், நதிக்கரைகள் அல்லது புனிதத் தலங்களின் புஷ்கரணி கரைகளில் செய்யலாம். இதை சிறப்பாகச் செய்வதற்கான திருத்தலங்களும் உண்டு.

அவைகளில் சில ராமேஸ்வரம், கோவிந்தபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்திற்கு அருகில் நென்மேலி (அங்குள்ள பெருமாளுக்கு சிராத்த சம்ரட்சண பெருமாள், லட்சுமி நாராயணப் பெருமாள் என்று பெயர்) திருநெல்வேலி அருகில் தாமிரபரணிக்கரையில் கருங்குளம், திருவாரூருக்கு அருகில் திருவிளமல், பவானி கூடுதுறை சங்கமம், திருப்புல்லாணி, திருபூவனம், திருச்செந்தூர், புதன் தலமாகிய திருவெண்காடு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, பாபநாசம், திருவையாறு, திருவிடை மருதூர், ஸ்ரீவாஞ்சியம், மயிலாடுதுறை, சாயாவனம், அவிநாசி, தென்காசி முதலிய ஏராளமான தலங்கள் நீத்தார் கடன் செய்ய ஏற்ற தலங்களாக இருக்கின்றன.

எது எப்படி ஆயினும், இந்த ஆடி அமாவாசை அன்று, முன்னோர்களை நினைத்து அவசியம் நீத்தார் கடன் செய்தாக வேண்டும். அது ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் எல்லையற்ற நன்மையை அளிக்கும்.

You may also like

Leave a Comment

4 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi