Wednesday, April 24, 2024
Home » அண்ணா, கலைஞரின் பிரமிக்க வைக்கும் நினைவிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

அண்ணா, கலைஞரின் பிரமிக்க வைக்கும் நினைவிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

by Mahaprabhu

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் மிகப் பிரமாண்டமாக, காண்போரை எல்லாம் கவரும் மகத்தான வரலாற்றின் சாட்சியாக நிற்கிறது. கலைஞரின் குழந்தை பருவம் முதல் அவரது அரசியல் பயணம் வரை அமைந்த பிரமிக்க வைக்கும் கண்காட்சி மற்றும் நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டு வரலாற்றில் 19 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்து, தமிழ்நாட்டை வளப்படுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி; இந்திய அரசியலில் எழுச்சியை ஏற்படுத்தி, உலக வரலாற்றில் உன்னதப் புகழ்ச் சின்னமாகத் திகழ்பவர் கலைஞர் கருணாநிதி. இவர் 95ம் வயதில் 2018 ஆகஸ்டு 7ம் தேதி மறைந்தார். நீதிமன்றத்தின் ஆணை பெற்று அண்ணா நினைவிடம் அருகிலேயே கலைஞருக்கு நினைவிடம் அமைந்தது. அண்ணா, கலைஞரின் நினைவிடங்கள் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் அண்ணா நினைவிடம் – கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் எதிரில் அமர்ந்து படிப்பது போன்ற தோற்றத்தில் பேரறிஞர் அண்ணா சிலை, வலபுறம் இளங்கோவடிகள், இடப்புறம் கம்பர் சிலைகள் உள்ளன.

இருபுறங்களிலும் பசுமையான புல்வெளிகள் அமைந்துள்ளன. இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியம் அமைந்துள்ளது. அண்ணா சதுக்கம் அமைந்துள்ள பகுதியை சுற்றி அமைந்த மண்டபங்கள் வெண்மை நிறத்தில் பளிச்சிடுகின்றன. அண்ணா சதுக்கத்தை கடந்து சென்றால் கலைஞர் அமர்ந்து எழுதும் வடிவிலான சிலை காணப்படுகிறது. எதிரே கலைஞர் சதுக்கம். ‘ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ எனும் தொடர் கலைஞரின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது. இருபுறமும், தமிழ் செம்மொழி என ஒன்றிய அரசு ஏற்ற முடிவைத் தெரிவித்து பாராட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கலைஞருக்கு 8-11-2005 அன்று எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. சதுக்கத்தின் பின்புறம் கலைஞர் புன்னகை பூத்தமுகம் பொன்னிறத்தில் மிளிர்கிறது. சுற்றிலும் மின்விளக்குகள் விண்மீன்களாக ஒளிர்கின்றன. கீழே நிலவறைப் பகுதியில், ‘கலைஞர் உலகம்’ எனும் பெயரில் ஓர் அருமையான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் உலகம் பகுதியில் இடப்புறம் சென்றால் திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை படங்களாக அமைக்கப்பட்டுள்ளன. வலப்பக்கம் திரும்பினால், இடப்பக்கச் சுவரில் தமிழ்த்தாய் வாழ்த்து பொறிக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ்ப்புறம், தமிழ்த்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும் என கலைஞர் 23-11-1970 அன்று பிறப்பித்த அரசாணையும், தமிழ்த் தாய் வாழ்த்து மாநிலப் பாடல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் 17-12-2021 அன்று பிறப்பித்த அரசாணையும் அவர்களின் படங்களுடன் இடம் பெற்றுள்ளன. அருகில், கலைஞரின் எழிலோவியங்கள் எனும் அறை உள்ளது. அதில் கலைஞரின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், கலைஞரின் படைப்புகள் அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் நமக்கு மலைப்பைத் தருகின்றன. அடுத்து ‘உரிமைப் போராளி கலைஞர்’ எனும் தலைப்பை கொண்ட அறை. இதற்குள் நுழைந்தால் – தேசியக் கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றிட உரிமை பெற்றுத் தந்த கலைஞரின் வெற்றியைக் குறிக்கும் காட்சி அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டையில் முதன் முதல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கலைஞர் உரையாற்றும் காட்சி அமைப்புடன் பின்புறம் தலைமைச் செயலகத்தின் முகப்புத் தோற்றம் அமைந்து நம்மை வரவேற்கிறது.

அடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருக்கும் தோற்றம். இதன் அருகில் நின்று புகைப்படம் எடுக்கலாம். சில நிமிடங்களில் புகைப்படம் நமக்கு கிடைக்கும். வலப்புறத்தில் கலைஞரின் மெழுகுச் சிலை. இதற்கு பின், ‘அரசியல் கலை அறிஞர் கலைஞர்’ என்கிற அறை. இதி்ல் கலைஞரின் பெரிய நிழற்படம். வலப்பக்கம் இருக்கைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் எதிரில் வெள்ளித்திரை. அதில், ஏறத்தாழ 20 நிமிடங்கள் கலைஞரின் பிறப்பு முதல் இறுதி நாள் வரையான முக்கிய வரலாற்று நிகழ்வுகள் அருமையான படக் காட்சிகளாக, கலையும் அரசியலும் எனும் தலைப்பில் நம்முன் தோன்றுகிறது. அறைகளுக்கு வெளியே அமைந்துள்ள நடையில் இருபுறங்களிலும், பெண்ணிய காவலர், ஏழைப் பங்காளர், நவீன தமிழ் நாட்டின் சிற்பி, உலகளாவிய ஆளுமைகளுடன் கலைஞர் முதலான தலைப்புகளில் அமைந்த அரிய புகைப்படங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் 5 தொலைக்காட்சி பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கலைஞர் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. நேர் எதிரே- கலைஞர், மு.க.ஸ்டாலின் தோன்றும் புகைப்படம் பெரிய அளவில் அமைந்து “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” எனும் குறள் தொடரை தலைப்பாக கொண்டுள்ளது. இப்பகுதியின் இறுதியில் காந்தவிசையை பயன்படுத்தி அமர்ந்த நிலையில் கலைஞர் அந்தரத்தில் மிதக்கும் காட்சி நம்மை அற்புத உலகிற்கு அழைத்துச் செல்கிறது. நடைபாதையை விட்டு, வெளியே வந்தால், நேர் எதிரே கலைஞர் புத்தக விற்பனை நிலையம் அமைந்துள்ளது.

அங்கே, கலைஞர் எழுதிய நூல்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கண்டு வெளியே வர முனைந்தால் வழியில் வலப்புறச் சுவர்களில் – தமிழர்களின் கலாச்சார மையம், வள்ளுவர் கோட்டம், பாம்பன் பாலம், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முகப்பு கட்டிடம், மெட்ரோ ரயில், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய கலைஞர் படைத்த நவீனங்களின் தோற்றம் வண்ண விளக்கொளியில் மயங்க வைக்கின்றன. இவற்றை முழுமைாக கண்டு வெளியே வரும்போது, கலைஞருடன் கலந்து பேசிப் பழகிய ஓர் புதிய அற்புத உணர்வு ஏற்படும். வெளியே வரும்போது இருபுறங்களிலும் கலைஞரின் பொன்மொழிகள் கற்பாறைகளில் தமிழிலும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடமும், கலைஞரின் புதிய நினைவிடமும் பல ஆண்டுகள் வரை நம் நெஞ்சைவிட்டு என்றும் நீங்காமல் நம்மை ஆட்கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி. முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிகரில்லா பெருமைகளை தரணியில் உயர்த்தி, நிலைநாட்டிய ஒப்பிலாத் தலைவர்களான அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் நாளை (திங்கள்) மாலை 7 மணி அளவில் திறந்து வைக்கிறார்.

You may also like

Leave a Comment

twenty + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi