Wednesday, May 8, 2024
Home » வித்தியாசமான வழிபாடுகள்

வித்தியாசமான வழிபாடுகள்

by Porselvi

*அந்தியூர் – பவானி பாதையில், பருவாச்சி கிராமத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள பாளையம் மாரியம்மன் ஆலயத்தில் மாசி மாத முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பிரார்த்தனை மிகப் பிரபலம்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தைச் சுற்றி விடிய விடிய நடப்பார்கள். இதனால் பல்வேறு பிரச்னைகளும் தீர்வதாக நம்பிக்கை.
* காஞ்சிபுரம் திருமுக்கூடலில் உள்ள அப்பன் வெங்கடேசப் பெருமாள் ஆலய கர்ணகுண்டல ஆஞ்சநேயருக்கு வடைமாலைக்கு பதிலாக தேன்குழல் மாலை சாற்றப்படுகிறது. தேன்குழல் மாலை சாத்தி இந்த அனுமனை வணங்கினால் கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
* வாஸ்து தோஷம் உள்ள வீட்டிற்குச் சொந்தக்காரர்கள் திருச்சி – கீழப்புலிவார் சாலையில் உள்ள பூலோகநாத சுவாமி கோயிலில் நடக்கும் வாஸ்து பூஜையில் கலந்து கொண்டால் அத்தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.
*கும்பகோணம், இன்னம்பூர் எழுத்தறிநாதர் ஆலயத்தில், சரியாகப் பேச்சு வராத குழந்தைகளுக்கு அர்ச்சகர் தேனைத் தொட்டு நாக்கில் குச்சியால் எழுதுகிறார். அதன்பின் குழந்தைகள் நன்றாகப் பேசுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
*தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள கண்டமங்கலம் பெருமாள் ஆலயத்தில் அருளும் அனுமனுக்கு மட்டைத் தேங்காய் கட்டி வழிபட தடைப்பட்ட திருமணம், குழந்தைப்பேறு கிடைக்கிறது.
*திருவாரூர் அருகேயுள்ள வீரவாடியில் உள்ள வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை, வில்வமாலை சாத்தி தயிர்சாதம் படைக்க செவ்வாய் தோஷம் நீங்குகிறது.
*ஈரோடு, கோபியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் மொடச்சூரில் அருளும் வேட்டைக்கார சாமிக்கு அப்பகுதி வாகன ஓட்டிகள் தேங்காய் உடைத்து வழிபட்டுவிட்டே செல்கின்றனர். விபத்துகள் ஏற்படாமல் காக்கும் சாமி இவர்.
*கிருஷ்ணகிரி – கோட்டையூரில் நூற்று ஒன்று சாமிமலையில் உள்ள குகையில், ஓரடி உயரமுள்ள கல் அகல் விளக்கில் இளநீர் விட்டு எரித்தால் அது அழகாக எரிகிறது. அதில் விளக்கேற்றுபவர்களின் துன்பங்கள் நீங்கி, மன அமைதி கிட்டுகிறது.
*திருப்போரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள காட்டூர் வைத்தியலிங்கேஸ்வரர் ஆலய தையல்நாயகி அம்மனுக்கு மூன்று வெள்ளிக்கிழமைகள் நெய் விளக்கேற்ற கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆவதாக நம்பிக்கை.
*தர்மபுரி கல்யாண காமாட்சிக்கு ஆடிப்பூரத்தன்று நடைபெறும் வளைகாப்பு வைபவத்தில் அம்மன் மடியில் முளைப்பயிறு கட்டுதல் நடக்கும். குழந்தை வரம் வேண்டுவோர் அந்த பிரசாதத்தை உண்டு, அந்த வரத்தைப் பெறுகின்றனர்.
*சென்னை ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் கோயிலுக்கு வெளியே அருளும் சுதர்சன நரசிம்மருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் கறுப்பு உளுந்தால் (தோலோடு கூடிய) வடைமாலை சாத்த அனைத்து கோரிக்கைகளும் தப்பாமல் நிறைவேறுகிறது.
*திருச்சி – உறையூரில் உள்ள வெக்காளியம்மன் சந்நதியில் வெக்காளி அம்மன் துணை என்று சீட்டில் எழுதி கட்டினால், ஞாபக சக்தியைப் பெருக்கி, தேர்வு நன்கு எழுத அம்மன் அருள்புரிகிறாள்.
*சேலம் – கோட்டை மாரியம்மன் ஆலயத்தின் கருவறை பிராகாரத்தை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மூன்று முறை வலம் வரும் ‘அடியளந்து கொடுத்தல்’ எனும் பிரார்த்தனையை செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.
*காரைக்குடி – பிள்ளையார்பட்டி வழியில் உள்ள கீழக்கரையில் ஒரே இடத்தில் 108 விநாயகர்களை சங்கடஹரசதுர்த்தியன்று தரிசிக்க, எல்லாவிதமான சங்கடங்களும் தொலைகின்றன.
* மன்னார்குடியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள வடபாதி மங்கலம் சுயம்பு சுந்தரேஸ்வரருக்கு வியாழக்கிழமைகளில் அபிஷேகம் செய்து வழிபட, வெளிநாட்டு வேலை வேண்டுவோர்க்கு அது கிட்டுகிறது.
*சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள காளஹஸ்தீஸ்வரரை தரிசிக்க, ராகு – கேது தோஷங்கள் நீங்குகின்றன.
vகாஞ்சிபுரம் காந்தி ரோடு மூங்கில் மண்டபம் அருகே உள்ள வழக்கறுத்தீஸ்வரர் ஆலயத்தில் 16 வாரங்கள் விளக்கேற்றி வழிபட, வழக்குகளில் வெற்றி கிட்டும்.
*திருவொற்றியூரிலிருந்து ரெட்ஹில்ஸ் செல்லும் பாதையில் உள்ள விளாங்காடு பாக்கம் இலபுரீஸ்வரரை வணங்க பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். ராமனின் மகனான லவன், ராமர் – சீதை ஒன்று சேர்வதற்காக இந்த ஈசனை பூஜித்தாராம்.
*கும்பகோணம் அருகிலுள்ள வன்னிகுடி முழையூரில் அருளும் அம்பிகை சௌந்தரநாயகியின் சந்நதி முன்னே அமர்ந்து சாந்தி முகூர்த்த நேரம் குறித்தால் நல்ல அறிவுள்ள குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை.
*சென்னை – முத்தியால்பேட்டையில் உள்ள மல்லிகேஸ்வரரும் மரகதாம்பிகையும் கர்ப்பப்பைக் கோளாறுகளை தீர்ப்பதில் நிகரற்றவர்களாகக் கருதப்படுகின்றனர்.

 

You may also like

Leave a Comment

3 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi