Sunday, September 1, 2024
Home » அல்லல் களைந்திடும் அகஸ்தீஸ்வரர்

அல்லல் களைந்திடும் அகஸ்தீஸ்வரர்

by Porselvi

சைவத்திற்கு மேலே சமயம் ஏதும் கிடையாது என்கிற வாக்கிற்கு ஏற்ப, நமது சைவ மதத்தின் பெருமைகளை சொல்லில் அடக்கிவிட முடியாது. அப்படி சைவம் தழைத்தோங்கிய பகுதியாக விளங்கும் கொங்கு தேசத்தின் ஓர் முக்கிய க்ஷேத்திரமாக திகழ்கிறது தாராபுரம். இன்றைய தாராபுரமே அன்றைய விராடபுரம். கௌரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் ஐவரும், ஒரு வருட காலம் தலைமறைவாய் வாழ்ந்தனர். அப்போது, வடதேசம் விடுத்து, தென்பகுதிக்கு வந்த பாண்டவர்களுக்கு அடைக்கலம் தந்து ஆதரித்தார், அமராவதிக்கரை தேசமான விராட தேசத்து விராட மாமன்னர். அந்த விராடபுரமே இன்று தாராபுரம் என்று மருவியுள்ளது. மேலப் பொறுணையாறு என்று போற்றப்பட்ட அமராவதி நதியின் கரையில் அமைந்த இந்த பதி, ஆதியில் வஞ்சிபுரி என்று அழைக்கப்பட்டுள்ளது. அதுவே பின்னர், இராஜபுரம் மற்றும் பராந்தகபுரம் என்றும் வழங்கப்பட்டுள்ளது.

கயிலாயத்திலே கயிலைநாதருக்கும், அன்னை பார்வதி தேவிக்கும் நடந்த திருக்கல்யாண வைபவத்தில் ஏற்பட்ட சமநிலை மாற்றத்தை சரி செய்ய, ஈசனது கட்டளைப்படி பொதிகை மலையை நோக்கி வந்தார், கும்பமுனியாம் அகத்தியமாமுனிவர். அப்போது இந்த விராடபுரத்திலே தங்கிய அகத்தியர், அமராவதி நதிக்கரையில் சிவலிங்கம் ஸ்தாபிதம் செய்து, வழிபட நினைத்தார். தனது சீடர்களை காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வரும்படி பணித்தார். அவர்கள் வருவதற்கு தாமதமானதால், அமராவதி ஆற்றின் மண்ணைக் கொண்டு சிவலிங்கம் பிடித்து பூஜைகளை செய்து முடித்தார். இதனால் அகத்தியமாமுனிகள் போலவே அளவில் சிறியதாய் காட்சியளிக்கின்றார் இங்கே கயிலைநாதர். பின்னர் சீடர்கள் கொண்டு வந்த காசி விஸ்வநாதரையும் அருகே ஸ்தாபித்தார் குருமுனிகள். அகத்தியர் ஸ்தாபித்த லிங்கமாதலால், இத்தல பெருமான், அகத்தீஸ்வரர் என்று போற்றப்படுகின்றார். திருநாவுக்கரசர் ஆறாம் திருமுறையுள்ள க்ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில் கயிலாயத்திற்கு நிகராக இத்தலத்தினை வைப்புத் தரமாக குறிப்பிட்டு போற்றியுள்ளார்.

சுமார் 300 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த புத்தூர் பகவான், திருமலை சுவாமிகள் இப்பதி பெருமானை வணங்கி, வழிபட்டு மோட்சம் அடைந்துள்ளார். நதிக்கரை சிவாலயங்களே பெரும் புண்ணியத்தை வழங்கும். அதிலும், இங்கு அமராவதி நதி உத்திரவாகினியாக வடக்கு நோக்கி பாய்வதால், காசி க்ஷேத்திரத்திற்கு நிகராக இத்தலம் போற்றப்படுகின்றது.பராந்தக சோழனால் கட்டப்பட்ட ஆலயம், அமராவதி நதியின் மேற்கரையில் அழகுற அமைந்துள்ளது. அழகிய படித்துறைகள் மேலும் ஆலயத்தை அழகூட்டுகின்றன. ஆற்றுப் பாலத்திற்கு முன்பே சாலையின் இடப்புறம் ஆலய நுழைவாயில் நான்கு தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்திற்கு வெளியே பாமா – ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி சந்நதியும், திருமால் சந்நதியும் அமைந்துள்ளன. தென்வாயில் வழியே உள்ளே நுழைகின்றோம். முதலில் நிருர்த்தி மூலையில் கணபதியின் தரிசனம். பக்கத்தில் தம்பி தண்டாயுதபாணி தரிசனம் தருகின்றார். பின், தல விருட்சமான சரக்கொன்றை மரமும், ஸ்வாமி சந்நதியை ஒட்டி வெளிப்புறம் தனியே சந்நதி கொண்டு திகழ்கின்றார்,  விசாலாட்சி அம்பாள் உடனுறை  காசி விஸ்வநாதர். அருகே பஞ்சலிங்க தரிசனம். மீண்டும் தென் வாயிலுக்கு நேரே  சிவகாமி அம்மை உடனுறை  நடராஜப் பெருமான் காணப்படுகின்றார். அக்னி திசையில் அரசமரம் ஒன்று பிரம்மாண்டமாக கிளைகள் பரப்பி நிற்கின்றது. கிழக்கில் கொடிமரம் மற்றும் நந்தியம்பெருமான்.

இங்கே பிரதோஷ நந்தி, தரும நந்தி என இரண்டு நந்திகளைக் காண முடிகின்றது. சிறிய உள்சுற்றுடன் கூடிய கருவறை. கருவறையுள் வளங்கள் யாவும் வாரித்தரும் வள்ளலாய் வீற்றருள்கின்றார்,  அகஸ்தீஸ்வரர். சிறிய மூர்த்தமெனினும் பேரருளினை அருளுபவர். வணங்கி மகிழ்ந்து, ஆலய வலம் வந்து, அம்பிகை சந்நதியை அடைகின்றோம். அம்பிகையாக  அகிலாண்டேஸ்வரி சதுர் புஜங்களைக் கொண்டு ஆவுடையின் மீது நின்ற வண்ணம் அருள் மழை பொழிகின்றாள். அம்பாள் சந்நதியின் முகமண்டபம் சிம்மத் தூண்களைக் கொண்டு நரசிம்மவர்மப் பல்லவனை நினைவூட்டுகின்றன. ஆலய ஈசான பாகத்திலே க்ஷேத்திரபாலகரான  பைரவர் அருள்பாளிக்கின்றார். உடன் நவக்கிரகங்களும் உள்ளன. ஆற்றங்கரையில் வீசும் காற்றில் ஆண்டவனை தரிசிக்கும் ஆனந்தமே தனிதான். சோழர் மற்றும் பல்லவ மன்னர்களின் கலை படைப்புகளும், கல்வெட்டுகளும் ஆலயத்தை அழகுப்படுத்துகின்றன.

அனைத்து சிவாலய விசேஷங்களும் நடைபெறும் இவ்வாலயத்தில், தினமும் இரண்டு கால பூஜைகள் நடக்கின்றது. தினமும் காலை 6:30 மணி முதல் 11:30 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். அமராவதி நதியில் நீராடி, அம்பாளுக்கு  லலிதா திரிசதி அர்ச்சனையை குங்குமத்தால் செய்து வழிபட, விவாகத்தடை நீங்குகின்றது, புத்திரப்பேறு கிடைக்கின்றது.அல்லல்கள் யாவும் களையும் அகிலாண்டேஸ்வரி உடனமர்  அகத்தீசப் பெருமானை வணங்கி, வழிபட்டு ஆனந்தம் அடைந்திடுவோம். தொடர்புக்கு: தாராபுரம் அரவிந்த் குருக்கள் – 9715565218திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகரில் அமராவதி ஆற்றங்கரையின் மேல் அமைந்துள்ளது ஆலயம். பொள்ளாச்சி, காங்கேயம், பழனி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து தாராபுரத்திற்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன.

 

You may also like

Leave a Comment

two + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi