
புதுடெல்லி: வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் ஆகியவற்றை தீர்க்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களும் குறை தீர்ப்பு குழுவை உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள வழக்கறிஞர்கள் பல்வேறு காரணங்களை காட்டி போராட்டத்திலும், வேலை நிறுத்தத்திலும் ஈடுபது வழக்கமாக இருந்து வருகிறது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் ஒரு சில வரையறை கொண்ட உத்தரவுகளை பிறப்பித்தும் அதனை யாரும் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. இந்நிலையில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராகவும், கட்டுப்படுத்தும் விதமாகவும் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்யவோ அல்லது நீதிமன்றத்தை புறக்கணிக்கவோ கூடாது. இது ஏற்க கூடியது கிடையாது. மேலும் அது சட்டத்திற்கு எதிரானதாகும். இதனால் வழக்குகள் தேக்கமடைவது மட்டுமில்லாமல் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்படும்.
அதனால் இதுபோன்று போராட்டம் மற்றும் வேலை நிறுத்தம் ஆகியவற்றில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை சரி செய்யும் விதமாக நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு உயர்நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதி மற்றும் 2 மூத்த நீதிபதிகள், ஒரு வழக்கறிஞர் ஆகியோர் உள்ளடக்கிய குறை தீர்க்கும் குழுவை அனைத்து உயர்நீதிமன்றங்களும் அமைக்க வேண்டும். இது அவர்களின் பிரச் னைகளை தீர்க்க ஏதுவாக இருக்கும். இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை உயர்நீதிமன்றங்கள் மேற்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.