Friday, May 3, 2024
Home » ஆதி சங்கரரும் அத்வைத தரிசனமும்!

ஆதி சங்கரரும் அத்வைத தரிசனமும்!

by Kalaivani Saravanan

ஆதி சங்கரர் ஜெயந்தி 25-4-2023

ஈஸ்வரனின் அம்சமாகவே இந்த நிலவுலகம் வாழவந்துதித்தவர் ஆதிசங்கரர். சித்திரை மாத அமாவாசைக்குப் பின்வரும் வளர்பிறை பஞ்சமியில், சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது. “காலடி”யில் பிறந்த அவர் “காலடி” படாத இடம் பாரதத்தில் இல்லை. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் நடந்து நடந்து, அத்வைத சித்தாந்தத்தைப் பரப்பினார். உலக உயிர்களின் உன்னதத்தை, அத்வைத தத்துவத்தின் அடிநாதமாக வழங்கியவர். அவருடைய பிரதான
நோக்கம்,

1. வேத தர்மத்தை காப்பது.

2. மனிதர்கள் ஒவ்வொருவரும் பிரம்மத்தை தங்களுக்குள் உணரச் செய்வது.

ஆதிசங்கரர் இந்து சமயத்தின் மூன்று முக்கிய நூல்களுக்கு (கீதை, உபநிடதங்கள், ப்ரம்ம சூத்ரம்), தனது தத்துவ விளக்கத்தை அளித்தார். ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து நிறைவேற்ற வேண்டிய மகத்தான காரியங்களை வெறும் 32 வயதில் செய்து முடித்தார். ஏகம் என்பது பிரம்மம். அந்த பிரம்மத்தை அறியும் ஓர் அடையாளமாகவே ஏக தண்டத்தை ஏந்தி இந்திய சமய மரபின் பெரும் புரட்சிக்கு வித்திட்டார்.

தனக்குப்பின் அத்வைத தர்மத்தையும் தத்துவத்தையும் அகிலமெல்லாம் பரப்ப சிஷ்யர்களை உருவாக்கினார். ஆங்காங்கே பீடங்களையும் மடங்களையும் உருவாக்கினார். மனிதாபிமானமும், மனித சமத்துவமும் இல்லையேல், ஆன்மிகத்தின் அடித்தளம் அசைந்து விழுந்துவிடும் என்ற உண்மையை உரக்கச் சொன்னவர் ஆதிசங்கர பகவத் பாதர்.

அத்வைதம் என்பது அகில உலகமும் பரந்துள்ள மகத்தான தத்துவம்.

அதனை வடிவமைத்தவர் சங்கரர்; அகில உலகமெல்லாம் கொண்டு சேர்த்த உன்னதப் பணியைச் செய்தவர்.

த்வைதம் என்றால் இரண்டு. “அ” என்பது அதை மறுப்பது. அதாவது இரண்டற்றது என்பதே அத்வைதம். அதை நேரடியாக ஒன்று என்று சொல்லாமல் இரண்டற்றது என்று சொல்வதைப் புரிந்து கொள்வதே அத்வைத சித்தாந்தம். ஒரே சத்தியத்துக்குப் புறம்பாக எதுவுமே இல்லை என்பது அத்வைதம். ஆதிசங்கரரின் காலத்தில், தீண்டாமை எனும் கொடுமை இருந்தது. இதில் சற்றும் விருப்பமில்லாத சங்கரர் வாழ்வில், ஒரு அற்புதம் நடத்த திட்டமிட்டான் இறைவன்.

இப்படிப்பட்ட நாடகங்கள் எல்லா மஹான் களின் வாழ்விலும் நடந்திருக்கிறது. இதை வைத்து, “இதுகூட ஞானிகளுக்குத் தெரிவதில்லை” என்று, நமது குறை அறிவால் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. காசியிலே அவர் தனது அத்வைத கொள்கைகளை மற்றவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்த காலம் அது.
அவர் மனதிலே தீண்டாமை இல்லை. அவரைச் சுற்றி இருந்தவர்கள் மனதில் இருக்கவே செய்தது.

ஒருநாள் தன் சீடர்கள் புடைசூழ, கங்கையில் நீராடச் சென்று கொண்டிருந்தார். வீதிகள் விரிவாக இருக்காது காசியில். குறுகிய ஒரு வீதியின் வழியே சென்று கொண்டிருந்தபொழுது, எதிரே ஒருவன் தன் மனைவியுடன், நான்கு நாய்களை இழுத்துக் கொண்டு வந்துகொண்டிருந்தான். மனைவியின் கையிலோ மதுக்குடம்.  சங்கரர் அவனைப் பார்த்து “சற்று விலகி நில்” என்று கூறுகிறார்.

வந்தவன் முகத்தில் புன்னகை. “யாரை விலகச் சொல்கிறாய்? இந்த உடலையா? இல்லை இந்த உடலில் உள்ள ஆன்மாவையா? எதை விலகச் சொல்கிறாய் ?” என்று பொருள்படும் வகையில் கேள்வி கேட்கிறான். இதைக் கேட்டவுடன், சங்கரர் சற்று திகைத்தார். வந்தவன் பார்வதி பரமேஸ்வரன் என்று சங்கரருக்கு உள்ஞானம் உணர்த்தியது. நமஸ்காரம் செய்து நிமிர்ந்தபோது சிவபெருமான் பார்வதியுடன் அவருக்குக் காட்சி அளிக்கிறார். அவருடன் வந்த நாய்கள் நான்கு வேதங்கள். பார்வதி வைத்திருந்தது அமிர்தக்குடம்.

ஒரு குரு, எந்த வடிவிலும் வந்து உண்மையை உணர்த்துவார். உருவத்தை எடை போட்டு ஞானத்தை அளக்காதே என்பதை நமக்கு எடுத்துக்காட்டவே இந்த நிகழ்வு.
அப்போது சங்கரர் பாடிய ஐந்து ஸ்லோகங்கள் தான் மனிஷா பஞ்சகம். இதன் பின்னணியில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்.

1. அழிந்து விடக்கூடிய உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாகுபாடு பார்ப்பது தவறு. ஒரு ஜீவனை விட மற்றொரு ஜீவன் உயர்ந்தது அல்ல.

2. எல்லா உயிர் இனங்களிலும் ஒரே ஆன்மா தான் (பரமாத்மா) வீற்றிருக்கிறது.

3. நீர்நிலையில் பிரதிபலிக்கும் சூரியன் பிம்பம்போல், எல்லாப் படைப்பிலும் ஆண்டவன் வீற்றுள்ளான். கலங்காத நீரில் தெரியும் பிம்பம் போல், அத்வைதி எல்லாவற்றிலும் இறைவனைக் காண்கிறான்.

4. கங்கையின் நீரினிலும் குட்டையின் நீரினிலும் காண்கின்ற சூரியனில் வேற்றுமை உண்டோ?

5. தண்ணீரைத் தாங்கி நிற்பது மண்குடமோ, பொற்குடமோ அதில் தெரியும் சூரியனின் பிம்பத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

அதுபோல் அனைவரிலும் அனைத்திலும் உறைவது அந்த பரமாத்மனே. வெளிப்பார்வைக்கு நல்லது, கெட்டது போல் தெரியும். கெட்டது, நல்லது போல் தெரியும். இந்தக் காட்சி மாறுபாட்டின் காரணம் மாயை. அந்த மாயையை உரித்துக் காட்டவே இந்த நிகழ்வு.

இதை விளக்குவது மனிஷா பஞ்சகம். உண்மையில் அத்வைத தத்துவத்தின் சுடர் விளக்கு மனிஷா பஞ்சகம். இந்த ஐந்து ஸ்லோக வெளிச்சத்தில் அத்வத தரிசனத்தை நம்மால் முழுமையாக தரிசிக்க முடியும்.

தொகுப்பு: பாரதிநாதன்

You may also like

Leave a Comment

eight + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi