Thursday, May 16, 2024
Home » ஆடல் வல்லானின் ஆனந்த தரிசனம்

ஆடல் வல்லானின் ஆனந்த தரிசனம்

by Kalaivani Saravanan

எது இன்பம் என்பதற்கு திருஞானசம்பந்தர் ஒரு விளக்கம் அளிக்கின்றார். நீண்ட மாடங்கள் உடைய தில்லைத் திருத்தலம். அங்கே இறைவன் பிறை மதி முடி சூடி ஆடும் பேரம்பலமாகிய சிற்றம்பல மேடை. அங்கு ஆனந்த நடனம் புரியும் பொற்கழல்களான திருவடிகளை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பதுதான் இன்பத்துள் இன்பம் என்கிறார்.

நிறை வெண் கொடி மாட நெற்றிநேர்
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பல தில்லை
சிறை வண்டறை யோவாச் சிற்றம்பல மேய
இறைவன் கழல்ஏத்தும் இன்பம் இன்பமே

பொதுவாக மனிதப் பிறவியில் இருந்து விடுபட வேண்டும் என்பதையே ஒவ்வொருவரும் தங்கள் பிரார்த்தனையாக வைப்பார்கள். ஆனால் தில்லைக் கூத்தனைப் பார்த்தபிறகு, ‘எனக்கு மனிதப்பிறவி அவசியம் வேண்டும்’ என்ற பிரார்த்தனையை திருநாவுக்கரசு சுவாமிகள் வைக்கிறார். அழகான வளைந்த புருவம். சிவந்த இதழ்கள். அதிலே சிந்தும் புன்னகை. கங்கையால் ஈரமான சடைமுடி. பவளம் போன்ற சிவந்த திருமேனி. பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சு. பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடி. இத்தனை அழகையும் காணும் இந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றால் மனிதனாக பிறப்பதுகூட ஒரு பாக்கியம்தான்.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

பஞ்சபூதங்களில் ஆகாய ஷேத்திரம். பஞ்ச சபைகளில் பொற்சபை. அங்கே படைத்தல் காதல் அழித்தல் மறைத்தல் அருளல் எனும் ஐந்தொழில்களையும் ஆனந்த தாண்டவமாகக் காட்டியருளும் ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தி. கோயில் என்றால் சைவத்தில் சிதம்பரம்தான் கோயில். இறைவன் அருள் எல்லைக்கு ஓர் இருப்பிடம்தான் தில்லைத் திருத்தலம்.

தீர்த்தம் என்பது சிவகங்கையே
ஏத் தரும் தலம் எழில் புலியூரே
மூர்த்தி அம்பலனது திருவுருவே

என மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்பு மிக்கது தில்லைத் திருக்கோயில். உலகத்தின் இதயமாக விளங்கும் திருத்தலம் என்பார்கள்.

இத்தலத்திற்குத் தான் எத்தனை பெயர்கள்?

மன்று, அமலம், சத்து, உம்பர், இரண்மயகோசம், மகத், தனி, புண்டரிகம், குகை, வண்கனம், சுத்தம், பரம், அற்புதம், மெய்ப்பதம், கழுனாவழி, ஞானசுகோதயம், சிதம்பரம், முத்தி, பரப்பிரம்மம், சபை, சத்தி, சிவாலயம், பொது, சிற்றம்பலம், புலியூர், பெரும்பற்றப்புலியூர் முதலிய பல பெயர்கள் உள்ளன.

பங்கயச் சிலம்பைந்தாடப்
பாதச் சலங்கைகள் கிண் கிணென்றாடப்
பொங்குமுடனே உரித்து சரித்த
புலித்தோல் அசைந்தாட
செங்கையில் ஏந்திய மான் மழுவாட
செம்பொற்குழை கண் முயலகனாட
கங்கை இளம்பிறை செஞ்சடையாடக்
கனக சபைதனிலே
ஆர நவமணி மாலைகளாட
ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணி கொன்றை மலர்த்தொடையாடச்
சிதம்பரத்தேர் ஆட
பேரணி வேதியர் தில்லைமூவாயிரம் பேர்களும்
பூசித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட
கனகசபை தனிலே
நிர்த்த கணபதி வேலார் நின்றாட
நின்று அயன் மாலுடன் இந்திரன் ஆட
முப்பத்து முக்கோடி தேவருடனே
முனிவரும் நின்றாட
மெய்ப்பதி மேவும் பதஞ்சலியாட
வியாக்கிர பாதரும் நந்தியும் ஆட
ஒப்பற்ற சிவகாமியம்மையும் கூடவே நின்றாட

சிதம்பரத்தேர் அசைந்து வருவதை காணும்போது, மனக்கண்ணில் இத்தனை காட்சிகளும் படம் போல் விரியும். இந்த ரதம் புறப்படுவதற்கு முன் ரதயாத்திரா தானம் உண்டு. அதைக் காண்பதற்கு விடியலிலே ஆயிரக்கணக்கான மக்கள் தில்லை மன்றிலிலே கூடுவார்கள். தேவார திருவாசகங்கள் பாடுவார்கள். திருஞானசம்பந்தர் திருமஞ்சனத்தைப் பற்றி அழகான ஒரு தேவாரத்தில் பாடுகின்றார்.

ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்
அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங்
கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும்
பல் சடை பனிக்கால்
கதிர் வெண் திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எம தொல் வினையே

சிதம்பரம், உத்தர கோசமங்கை உள்பட சில தினங்களில் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் புகழ் வாய்ந்தது. இந்த தலங்களில் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நடராஜரை வழிபடுவார்கள்.

You may also like

Leave a Comment

2 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi