கோடையில் வறண்டு கிடந்த நீர்நிலைகள் நிரம்பி, விவசாய நிலங்கள் குளிர்ந்து, அதில் புல் பூண்டுகள் முளைக்க தொடங்கும். ஆடி மாதத்தில் விதை விதைத்தால் அது வீரியமாக வளரும் என்பதை விளக்குவதற்குத்தான் நம் முன்னோர் ஆடிப்பட்டம் தேடி விதை என்றார்கள்.பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கும். ஜூன், ஜூலை மாதங்களில் மெல்ல, மெல்ல பூமிக்கு மழை வருகை தர ஆரம்பிக்கும். ஜூலையில் அதாவது ஆடி மாதத் துவக்கத்தில் வெயிலின் உக்கிரம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவும். இந்த சமயத்தில் மழை பெய்து மண் குளிரும். மண் குளிர்ந்தால் புழு, பூச்சிகள் உருவாகும். இந்த சமயத்தில் உழவு செய்து மண்ணை இலகாக்கினால் நன்மை செய்யும் பூச்சிகள் நிலங்களில் ஊர்ந்து பயிர்களுக்கு நுண்ணூட்ட சத்துகளை வாரி வழங்கும். கெட்ட பூச்சிகள் அழியும். மண்புழு உருவாகி, மண்ணில் பயணமாகி, சத்துகளை மேலும் கீழும் பரிமாறி கொடுக்கும்.
ஆடி மாதத்தில் பெய்யும் மிதமான மழை விதைகள் சீராக முளைக்க ஏதுவாக இருக்கும். பெருவெள்ளம் ஓடி விதைகளை அடித்துச் செல்லாது. துளிர்த்துவரும் பயிர்களுக்கு தூறல் சொட்டுகள் தாய்ப்பாலாய் மாறும். இதனால் ஆடி மாதங்களில் தானியப் பயிர்கள், காய்கறி, கீரை வகைகள் உள்ளிட்டவற்றை அச்சமின்றி விதைக்கலாம். சுரை, புடலை, பூசணி, அவரை போன்ற கொடி வகைகளை படரவிட்டு பார்க்கலாம்.ஆடிமாதத்தில் தரை குளிர்ந்திருப்பதால் புதர்களில் பதுங்கிக் கிடந்த பாம்புகள் வயலுக்குள் வரத் தொடங்கும். இதனால் பயிர்களை துவம்சம் செய்ய காத்திருக்கும் எலிகளை பாம்புகள் படையெடுத்து அழிக்கும்.
மற்ற மாதங்களில் நிலவும் சீதோஷ்ண நிலை பயிர்களுக்கு செட்்டாகாது. ஆடி மாதத்தின் சீதோஷ்ண நிலை பயிர்களுக்காகவே படைக்கப்பட்டது போலிருக்கும். கருகும் அளவுக்கு வெயிலும் இருக்காது. அழுகும் அளவுக்கு மழையும் இருக்காது. தொடர்ந்து காய்ச்சலில் (ஹீட்) இருந்ததால், மண்ணில் விழும் மழைத்துளி அப்படியே சேகரமாகும். மண்ணில் நீர் அதிகமாக தேங்கி செடிகளை அழுக விடாது. ஆனால் வேண்டிய ஈரப்பதம் நிச்சயம் நிலைத்திருக்கும்.
இப்படி ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து கிடப்பதால்தான் நாம் இன்னும் ஆடியில் விதைக்க ஆர்வம் கொள்கிறோம். இப்போது பருவநிலை வெகுவாக மாறிவருகிறது. ஆனால் ஆடிப்பட்டம் என்பது அர்த்தம் மிகுந்ததுதான்.