Sunday, May 12, 2024
Home » 9ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: தமிழகம் முழுவதும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட உத்தரவு

9ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: தமிழகம் முழுவதும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட உத்தரவு

by kannappan

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ள நிலையில், வருகிற 9ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், அதை எதிர்கொள்வது குறித்து அமைச்சர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத படி அரசு துறைகள் செயல்பட அறிவுரை வழங்கினார். தமிழகம் முழுவதும் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிடும்படி உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த ஒரு வாரமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வரும் 9ம்தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும். அது வலுப்பெற்று வட தமிழக கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும். இதனால், தமிழகத்தில் 9ம்தேதி முதல் 12ம்தேதி வரை மழை மற்றும் சூறைக்காற்று வீசலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 9ம்தேதி உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் வரும் 9ம்தேதி (செவ்வாய்கிழமை) வங்கக்கடலில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் தகவல் வந்துள்ளது. எனவே மாவட்ட ஆட்சித் தலைவர்கள், பல்வேறு துறைத் தலைவர்கள் ஏற்கெனவே ஆய்வுக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுக்குமாறும் சார்நிலை அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மாவட்ட கலெக்டர்கள் செயல்பட வேண்டும்.  மேலும், தமிழகத்தில் தற்போது பல்வேறு அணைகளிலும், ஏரிகளிலும் நீர் இருப்பு 50 சதவீதத்திற்கும் மேலாக பல இடங்களில் இருப்பதால், பெய்து வரும் மழையுடன் கூடுதல் நீர் சேர்ந்து அணைகள் மற்றும் ஏரிகளின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கவனமாக கண்காணித்து, ஏரிகள் மற்றும் ஆறுகளின் கரையோரங்களையும் கண்காணித்து பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசுத்துறைகள் செயல்பட வேண்டும். 24 மணிநேரமும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை கண்காணித்து, அதன் நீர் இருப்பு குறித்த விவரங்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்றையே நாம் வெற்றிகரமாக சந்தித்து விட்டோம். கொரோனா காலக்கட்டத்தில் நீங்கள் ஆற்றிய பணிகள் குறித்து நான் அறிவேன். ஆனால் கொரோனா போல் அல்லாமல், வெள்ள பாதிப்பு குறித்து நமக்கு நன்றாக தெரியும். கனமழை ஏற்பட்டால் எந்தப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும், உயிர்சேதங்கள் எப்படி ஏற்படும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை எப்படி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வது, இவை அனைத்தும் உங்களுக்கு நன்றாக தெரியும். வெள்ளப் பாதிப்பிற்கு தற்காலிக தீர்வு மட்டுமே இல்லாமல், நிரந்தர தீர்வுகளையும் காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவை வென்றதைப் போல் இந்த பருவமழையையும், புயலையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும். வடகிழக்கு பருவமழையில் தற்போது வரையிலான இயல்பான மழைப்பொழிவு 225.5 மி.மீ என்ற நிலையில், தற்போதையை நிலவரப்படி 317.59 மி.மீ பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 41 சதவீத கூடுதல் ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அரியலூர், கோவை, கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவீதத்திற்கு மேல் மிக அதிகப்படியான மழை பெய்துள்ளது.செங்கல்பட்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, வேலூர் ஆகிய 17 மாவட்டங்களில் இயல்பை விட 20 சதவீதத்திற்கு மேல் மழை பெய்துள்ளது. சென்னை, தர்மபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் இயல்பான மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில், இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை இயல்பான மழையளவான 706.0 மி.மீ.,விட 37 சதவீதம் கூடுதலாக 969.9 மி.மீ. மழை பெய்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் உள்ள 90 அணைகளில், திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, தேனி, ஈரோடு, கரூர், திருப்பூர், அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 58 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள், 50 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளது. மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில், 7,048 ஏரிகள், 50 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி (1,726), மதுரை (939), தஞ்சாவூர் (550), புதுக்கோட்டை(510), திருவண்ணாமலை (378), சிவகங்கை (348), தென்காசி (346), திருநெல்வேலி (305), காஞ்சிபுரம் (257), செங்கல்பட்டு (248), ராணிப்பேட்டை (213), விழுப்புரம் (191), கள்ளக்குறிச்சி (147) கடலூர் (131), திருவள்ளூர் (124) மாவட்டங்களில் உள்ள ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளன.நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. வரும் 9ம்தேதி 1 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, கண்காணிப்பு அலுவலர்கள் தங்களது மாவட்டங்களுக்கு சென்று, ஆயத்த பணிகளை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் அனைத்து ஆயத்த பணிகள், மீட்பு நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதோடு, நிவாரண முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.  அரசு அலுவலக வளாகங்களிலும், சாலை ஓரத்திலும் உள்ள பலவீனமான மரங்களை கண்டறிந்து அப்புறப்படுத்துவதோடு ஆபத்தான நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சியின் அனுமதியின்றி சாலையில் பள்ளம் தோண்டுவது தவிர்க்கப்பட வேண்டும். நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடங்களில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க அறிவிப்பு பலகைகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் குறுக்கே அமைந்துள்ள பாலங்கள், சிறுபாலங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்புவதன் காரணமாக இந்த பாலங்கள், சிறுபாலங்கள் மீது மழை, வெள்ள நீர் ஓடும் போது, இந்த வழியாக போக்குவரத்தை அனுமதிக்காமல் மாற்றுப் பாதையில் அனுமதிக்க வேண்டும். மண் சுவர் வீடுகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். மேலும், மாவட்ட நிர்வாகம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்கும் வகையில் சாலைகளிலுள்ள சேதங்கள் மற்றும் பள்ளம் குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத் துறை அலுவலர்கள், அணைகள், நீர்த்ததேக்கங்கள் மற்றும் ஏரிகளிலிருந்து தேவையான அளவு உபரி நீரை பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு அளித்து, உபரி நீர் திறப்பதற்கான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றி அவ்வப்போது உபரி நீரை திறந்துவிட்டு, அணைகள், நீர்த்ததேக்கங்கள் மற்றும் ஏரிகளின் நீர் இருப்பு பாதுகாப்பான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளைப் பொறுத்தவரையில், வயல்வெளிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புயல், வெள்ள காலங்களில், தென்னந்தோப்புகளில் உள்ள மரங்களிலிருந்து முதிர்ந்த நிலையில் உள்ள தேங்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும். பொதுமக்களைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் 90 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.மழை, வெள்ள நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது. வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். நீர்வீழ்ச்சிகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு பொதுமக்களுக்கும் உட்கட்டமைப்புகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமை செயலாளர்  இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். * வெளிநாடுகளிலும் பாராட்டுமுதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘தமிழ்நாடு வெற்றிகரமாக கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தியது குறித்து பிற மாநிலங்கள் பேசி வருகின்றன. வெளிநாடுகளில் கூட புகழ்ந்து பேசக்கூடிய அளவிற்கு நாம் பணியாற்றி  இருக்கிறோம். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம், அனைவருடைய கூட்டு முயற்சி தான் இதற்கு காரணம்’’ என்றார். …

You may also like

Leave a Comment

3 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi