Wednesday, May 8, 2024
Home » 5 டோல் கேட்களில் மட்டும் ரூ.132 கோடி முறைகேடு நடந்த நிலையில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது; ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

5 டோல் கேட்களில் மட்டும் ரூ.132 கோடி முறைகேடு நடந்த நிலையில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது; ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

by Karthik Yash

சென்னை: தென் மாநிலங்களில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் நடந்த கட்டண வசூலில் ரூ.132 கோடி முறைகேட்டை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலாகிறது. ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இதில் 1,44,634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 892 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. சுங்கசாவடிகளையும் அந்த அமைச்சகமே தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்து கட்டணம் வசூல் செய்ய அனுமதி அளித்து வருகிறது.

தமிழ்நாட்டில் 6,606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.
மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தபடி 1992ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக சுங்கக்கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. அதில் ஏப்ரல் மாதம் 29 சுங்கச்சாவடிகளுக்கும் செப்டம்பர் மாதம் மீதமுள்ள 26 சுங்கச் சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கட்டணங்கள் மாற்றியமைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்கிறது. இதன்படி கடந்த நிதியாண்டில் சுங்கக்கட்டணம் 10-20% வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் 5-10% வரையிலான கட்டண உயர்வுக்கு நெடுஞ்சாலை ஆணையம் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது.

அதன்படி ஏற்கனவே 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. மதுரை, தூத்துக்குடி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை உள்பட 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி ஜீப், வேன், கார் ஆகிய நான்கு சக்கர வாகனங்களுக்கு பழைய கட்டணமாக ரூ.85லிருந்து ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.90 யாகவும், இருமுறை சென்று வர ரூ.125லிருந்து ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.135 வசூலிக்கப்படும். அதனை தொடர்ந்து ஒரு முறை சென்று வர கட்டணம் ரூ.5 லிருந்து ரூ.45 ஆகவும், இருமுறை பயணம் செய்ய ரூ.10 லிருந்து ரூ.65வும், மாதாந்திர கட்டணம் ரூ.235 லிருந்து ரூ.1,325தாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இதன் ஒரு பகுதியாக மதுரை – தூத்துக்குடி பகுதியை பயன்படுத்துவதற்கான பயனாளி கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் எலியார்பாத்தி சுங்க சாவடி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புதுர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர பழைய கட்டணம் ரூ.85 லிருந்து ரூ.90 ஆகவும், இரு முறை சென்று வர ரூ.125 லிருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2,505 லிருந்து ரூ.2,740யாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இலகு ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர ரூ.145லிருந்து ரூ.160, இரு முறை சென்று வர ரூ.220லிருந்து ரூ.240 ஆகவும் மாதாந்திர கட்டணம் ரூ.4,385 லிருந்து ரூ.4,800யாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்று வர கட்டணம் ரூ.290 லிருந்து ரூ.320, இரு முறை சென்று வர ரூ.440 லிருந்து ரூ.480 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.8,770 லிருந்து ரூ.9,595யாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர ரூ.470 லிருந்து ரூ.515 யாக உயர்த்தப்பட்டுள்ளது.

இருமுறை சென்று வர கட்டணம் ரூ.705 லிருந்து ரூ.770 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.14,095 லிருந்து ரூ.15,420 யாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து வகை வாகனங்களுக்கும் பணம் செலுத்திய நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் செய்யப்படும் பல முறை பயணங்களில் பாஸ்டேக் பயனாளிகளுக்கு மட்டும் இந்த கட்டண சலுகை அமலாகும். சுங்கக்கட்டணம் வசூல் மையத்திலிருந்து 10 கி.மீ. சுற்று வட்டாரத்திலுள்ள வணிக உபயோகம் இல்லாத கார், பயணிகள் வேன் அல்லது ஜீப் மாதாந்திர நுழைவுச்சீட்டு ரூ.150 மற்றும் சுங்கக்கட்டணம் வசூல் மையத்திலிருந்து 10 கி.மீ.க்கு மேற்பட்ட 20 கிலோ மீட்டருக்கு உள்ளாக சுற்று வட்டாத்திலுள்ள கார், பயணிகள் வேன், ஜீப்களுக்கு மாதாந்திர நுழைவுச் சீட்டு ரூ.300 வசூலிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு உட்பட பகுதிகளில் சாலை பராமரிப்பு மற்றும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசு விதிமுறைகளின் படி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு சுங்கச்சாவடிகளில் பணிகள் நடைபெற்று வருவதால் சுங்கக் கட்டணம் வசூலிக்கவோ அல்லது உயர்த்தப்படவோ வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். தென் மாநிலங்களில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் நடந்த கட்டண வசூலில் ரூ.132 கோடி முறைகேட்டை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 26 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட உள்ளதற்கு சரக்கு வாகன உரிமையாளர்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் எலியார்பத்தி சுங்க சாவடி மற்றும் தூத்துக்குடி மாவட்டம்
புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடிகளில் திருத்தியமைக்கப்பட்ட சுங்கக்கட்டணம்
வாகனங்கள் ஒருமுறை பயண கட்டணம் இருமுறை பயண கட்டணம் மாதாந்திர கட்டணம்
கார், வேன், ஜீப் ரூ.85 லிருந்து ரூ.90 ரூ.125 லிருந்து ரூ.135 ரூ.2505லிருந்து ரூ.2740
இலகுரக வானகங்கள் ரூ.145லிருந்து ரூ.160 ரூ.220லிருந்து ரூ.240 ரூ.4385லிருந்து ரூ.4800
கனரக வாகனங்கள்
லாரி, பேருந்து ரூ.290லிருந்து ரூ.320 ரூ.440லிருந்து ரூ.480 ரூ.8770லிருந்து ரூ.9595
இரண்டு அச்சுமிக
கனரக வாகனங்கள் ரூ.470லிருந்து ரூ.515 ரூ.705லிருந்து ரூ.770 ரூ.14095லிருந்து ரூ.15420

* கட்டண வசூலில் தமிழகத்தை குறிவைக்கும் ஒன்றிய அரசு
நாடு முழுவதும் 1,44,955 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளா ஆகியவற்றை உள்ளடக்கிய தென்மாநிலங்களில் சுமார் 27,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. மொத்த தேசிய நெடுஞ்சாலைகள் நீளத்தில் இது சுமார் 19 சதவீதம்தான் என்றாலும், சுங்கக் கட்டண வசூலில் சாதனை படைத்துள்ளன. அதாவது, இந்த 5 மாநிலங்களின் சுங்கக் கட்டண வசூல், சிஏஜி ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை ரூ.28,523.88 கோடி வசூல் ஆகியுள்ளது. நாடு முழுவதுமான வரி வசூலில் இது சுமார் 28 சதவீதமாகும். இதில், தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு ரூ.2,400 கோடி வசூலாகியுள்ளது என சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இதற்கு அடுத்ததாக ஆந்திராவில் ரூ. 1,950 கோடி, கர்நாடகாவில் ரூ.1,830 கோடி சுங்கக் கட்டணமாக வசூல் ஆகியுள்ளது. இப்படி தென்மாநிலங்களிலேயே அதிகமாக வசூல் அள்ளித்தரும் தமிழ்நாட்டை குறிவைத்து சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வருகிறது ஒன்றிய அரசு. கடந்த ஏப்ரல் மாதம்தான் தமிழகத்தில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

5 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi