Tuesday, May 21, 2024
Home » 5வது யானைகள் காப்பகமாக 1200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அகஸ்தியமலை யானைகள் காப்பகம் அறிவிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் மதிவேந்தன்

5வது யானைகள் காப்பகமாக 1200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அகஸ்தியமலை யானைகள் காப்பகம் அறிவிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் மதிவேந்தன்

by MuthuKumar

சென்னை: புதியதாக 5வது யானைகள் காப்பகமாக 1200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அகஸ்தியமலை யானைகள் காப்பகம் நமது முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், யானைகள் பாதுகாப்பிற்காக முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமினை சீரமைக்க ரூபாய் 7 கோடியும், ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமை மறுசீரமைக்க ரூபாய் 5 கோடியும், கோவை மாவட்டத்தில் சாடிவயல் யானைகள் முகாம் அமைக்க ரூபாய் 8 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் கூறியதாவது:
நமது முதலமைச்சர் கொண்டுவந்த மற்றும் ஒரு முக்கியமான திட்டம், தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம். ஈர நிலம் என்பது ஆண்டு முழுவதும் நீர் நிற்கும் அல்லது ஆறு மாதங்கள் தாழ்ந்த நிலங்களில் இயற்கையாகவே நீர் நிற்கும், நீர் சார்ந்த நிலப்பகுதி ஆகும்

ஈர நீலங்கள் உயிரினங்களின் பல்லுயிர் பெருக்கம் அதிகம் கொண்ட பகுதியாதலால், இந்நிலங்கள் பூமியின் பச்சை சிறுநீரகம்(Green Kidney) எனப்படும். அத்தகைய ஈர நிலங்களை உலகளவில் பாதுகாக்க 1971ஆம் ஆண்டு, பிப்ரவரி 2ஆம் நாளன்று ஈரான் நாட்டில் உள்ள ராம்சார் நகரில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி உலகெங்கும் உள்ள ஈர நிலங்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து ராம்சார் நிலங்கள் என அடையாளப்படுத்தி சர்வதேச முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2021 வரை ஒரே ஒரு ராம்சார் தளமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடியக்கரை மட்டுமே இருந்தது. தற்போது நமது கழக ஆட்சி அமைந்த பிறகு 13 ராம்சார் தளங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள 75 ராம்சார் தளங்களில், அதிகமாக 14 ராம்சார் தளங்கள் கொண்ட முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்க, வழிநடத்தியவர் நமது முதலமைச்சர். இத்துடன், அரியலூரில் உள்ள கரைவெட்டி மற்றும் நீலகிரியில் உள்ள லாங் வுட் சோலை ஆகிய இரண்டு இடங்களையும் ராம்சார் தளமாக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது முதல்வர் மக்களுக்காக எண்ணற்ற நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருப்பதுபோல், வனவிலங்குகளுக்கும், பறவைகளுக்கும், பல்லுயிர்களுக்கும், கடல் சார்ந்த உயிரினங்களுக்கும் இதுவரை எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல சிறப்பான திட்டங்களை அறிவித்துள்ளார். அந்த வகையில் உலகளவில் பெருமைபெற்ற ஆசிய யானைகளை தமிழ்நாட்டில் பாதுகாக்க வனத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

யானைகள் காட்டின் ஆதாரம்,அவை அழிந்தால் இயற்கைக்கே சேதாரம், ஆதிவிதைகள் யானையின் வயிற்றில் நொதித்த பிறகுதான் மரமாகும். தமிழ்நாட்டில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிக ஆழமானதாகும். யானைகள் நமது கலை, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் ஆகிய அனைத்திலும் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகின்றன. தமிழ்நாட்டில் தோராயமாக 2800 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

யானைகள் பாதுகாப்பிற்காக நமது கழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. தமிழ் நாட்டில் ஏற்கனவே நான்கு இடங்களில் யானைகள் காப்பகங்கள் உள்ளன. அத்துடன், புதியதாக 5வது யானைகள் காப்பகமாக 1200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அகஸ்தியமலை யானைகள் காப்பகம் நமது முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், யானைகள் பாதுகாப்பிற்காக முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமினை சீரமைக்க ரூபாய் 7 கோடியும், ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமை மறுசீரமைக்க ரூபாய் 5 கோடியும், கோவை மாவட்டத்தில் சாடிவயல் யானைகள் முகாம் அமைக்க ரூபாய் 8 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாரத நாட்டிலேயே முதன் முறையாக 7 யானை பாகன்கள், 6 காவடிகள் ஆக மொத்தம் 13 பேர்களுக்கு தாய்லாந்து நாட்டில் உள்ள யானைகள் காப்பகத்தில் ரூபாய் 50 லட்சம் செலவில் ஒரு வாரகால பயிற்சி அளிக்கப்பட்டது.

உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருதினை “The Elephant Wishperers” என்ற ஆவணப்படம் முதுமலை யானைகள் முகாமில் எடுக்கப்பட்டது. அப்படத்தில் நடித்த பொம்மன், பெல்லி தம்பதியர் உட்பட 91 யானை பாகன்கள் (Mahout) மற்றும் உதவி யானை பாகன்களை (Cavadi) கௌரவிக்கும் வகையில் தலா ரூபாய் ஒரு இலட்சம் வீதம் 91 இலட்சம் வழங்கப்பட்டது.

அத்துடன், அவர்கள் வசிக்க தேவையான சுற்றுச் சூழலுக்கு உகந்த வீடுகள் கட்டுவதற்கு ரூபாய் 9 கோடியே, 10 இலட்சம் (தலா 10 இலட்சம் வீதம்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆவணப் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திகி கான்சால்வ்ஸுக்கு(Karthiki gonsalves) ரூ.1 கோடி வழங்கி முதலமைச்சர் கெளரவித்தார். இவ்விருதின் மூலம் தமிழ்நாடு வனத்துறை உலகளவில் புகழ் சேர்த்துள்ளது என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

யானைகள் காலங்காலமாக பயன்படுத்திய வலசைப் பாதைகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் மற்றும் தடைகளினாலே யானைகள் தடம்மாறி விவசாய நிலங்களுக்கு வரும் நிலை தற்போது இருந்து வருகிறது. சமீபத்திய நிகழ்வுகளில் அவ்வாறு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தபோது மின்சாரம் தாக்கி சில யானைகள் உயிரிழந்தன. இந்த நிகழ்வுக்கு பின்பு வனத்துறையும், மின்சாரத்துறையும் இணைந்து கூட்டுகளத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் இனிவரும் காலங்களில் மின்சாரம் தாக்கி யானைகள் இறக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நமது கழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வனத்துறையின் புதிய முயற்சிகளான யானைகளின் நகர்வினை கண்காணிப்பதற்கான, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான யானை வருகையினை அறிவிக்கும் முன் எச்சரிக்கை அமைப்பு ரூ.7.10 கோடியிலும், ரேடியோ காலரிங் கருவிகள் பொருத்துதல் மின்னோட்டத்தினை தடுக்கும் அபாய ஒலி அமைப்பு மற்றும் புவி இடக் குறியீடு முறையிலான முன்னெச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்துதல் போன்ற திட்டங்கள் யானை பாதுகாப்புக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு வனப்பகுதிகளில் யானைகளின் இறப்பு குறித்து விரிவான பகுப்பாய்வு செய்வதற்கும் இந்தியாவிலேயே முதன் முறையாக யானைகள் இறப்பு தணிக்கை கட்டமைப்பு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

one × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi